தேடுதல்

இலங்கை இலங்கை  (AFP or licensors)

வெடிகுண்டு தாக்குதல்குறித்த உண்மைக்கு இலங்கை திருஅவை விண்ணப்பம்

2019ஆம் ஆண்டு வெடிகுண்டு தாக்குதல்களில் இராணுவ உளவுப் பிரிவின் பங்கு ஆராயப்பட வேண்டும், நீதியான, வெளிப்படையான விசாரணைகள் இடம்பெற வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, உயிர்ப்பு ஞாயிறன்று கொழும்புவில் இடம்பெற்ற எட்டு குண்டுவெடிப்புக்கள் குறித்த விசாரணைகள் அக்டோபர் 18ஆம் தேதி இப்புதனன்று மீண்டும் துவங்கவுள்ள நிலையில், அனைத்துலக அளவிலான சுதந்திர விசாரணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என மீண்டும் தன் விண்ணப்பத்தை முன்வைத்துள்ளது இலங்கை தலத்திருஅவை.

2019ஆம் ஆண்டு வெடிகுண்டு தாக்குதல்களில் இராணுவ உளவுப் பிரிவின் பங்கு ஆராயப்பட வேண்டும், நீதியான, வெளிப்படையான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என விண்ணப்பம் ஒன்றையும் விடுத்துள்ளது தலத்திருஅவை.

குண்டுவெடிப்புக்கள் குறித்த உண்மை கண்டறியப்பட்டு, உயிரிழந்த மற்றும் காயமுற்ற அப்பாவி மக்களுக்கு நீதி கிட்டவேண்டும் என அரசு உண்மையிலேயே விரும்பினால், இலங்கை கத்தோலிக்கத் திருஅவையின் விண்ணப்பங்களை ஏற்க வேண்டும் என அரசுக்கு அழைப்பு ஒன்றையும் விடுத்துள்ளது.

இலங்கை அரசுத்தலைவருக்கு கர்தினால் மால்கம் இரஞ்சித் உட்பட கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ பிரிந்த சபைகளின் 30 தலைவர்கள் இணைந்து கையெழுத்திட்டு அனுப்பியுள்ள இந்த கடிதம், குண்டுவெடிப்பாளர்களுடன் இராணுவ உளவுப்பிரிவு மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் தொடர்பு ஆராயப்பட வேண்டும் எனவும் விண்ணப்பிக்கிறது.

2019ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 45 வெளிநாட்டவர்கள் உட்பட 279பேர் கொல்லப்பட்டனர், 500க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இக்குண்டுவெடிப்புத் தொடர்பாக 24 பேர் தற்போது விசாரணைகளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2023, 15:33