நேர்காணல்– செபமாலை அன்னைக்கு வணக்கம் செலுத்தும் மாதம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
"என்னுடைய மறையுரையை விட, நான் செபிக்கும் செபமாலையால்தான் பல ஆன்மாக்களை மனமாற்றம் அடைய செய்துள்ளேன்" என்று கூறியுள்ளார் புனித பெர்நார்டு. கல்லான இதயத்தைகூட கனிவான இதயமாக மாற்றக்கூடிய அளவுக்கு செபமாலைக்கு ஆற்றல் உள்ளது. நம்முடைய திருஅவையில் அங்கீகாரம் பெற்ற பக்தி முயற்சிகளில் ஒன்றான செபமாலை ஜெபிப்பதன் வழியாக எண்ணற்ற வல்ல செயல்கள் நடந்துள்ளன. திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் "திருஅவையில் அங்கீகாரம் பெற்ற பக்தி முயற்சிகளில் செபமாலையைப் போல் இவ்வளவு அதிக அற்புதங்களை வேறு எந்த பக்தி முயற்சியும் நிகழ்த்தவில்லை" என்று கூறியுள்ளார். மேலும் புனித பியோ "செபமாலை நம்முடைய வலிமையான ஆயுதம்" என்றும் கூறியுள்ளார். இப்படியாகத் திருஅவையின் புனிதர்கள் பலர் தங்களுடைய செபமாலைக் குறித்த கருத்துக்களை எடுத்துரைத்து, நாமும் அதன்படி வாழ வலியுறுத்துகின்றனர்.
இத்தகைய சிறப்பு மிகுந்த செபமாலையை அதிகமாக செபிக்கும் இந்த அக்டோபர் மாதத்தின் செபமாலை அன்னையின் சிறப்புக்கள் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்பணி பிரான்சிஸ் ரோசாரியோ. ஆப்பிரிக்க மறைபோதக சபை அருள்பணியாளரான பிரான்சிஸ் ரோசாரியோ அவர்கள் 2003 ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்று, நைஜீரியாவில் 3 ஆண்டுகள் (2003-2006) மறைப்பணியாளராகப் பணியாற்றியவர். அதன்பின் உரோமில் உள்ள திருப்பீட விவிலியக் கல்லூரியில் (2006-2010) மேற்கல்வி பயின்ற இவர், நைஜீரியாவின் Ibadan குருத்துவ இல்லத்தில் (2010-2013) பேராசிரியாகவும் பணியாற்றியுள்ளார். 2013 ஆம் ஆண்டு முதல் ஆப்ரிக்க மறைபோதக சபையின் பொதுக்குழு உறுப்பினராக செயலாற்றிக் கொண்டிருக்கும் தந்தை அவர்களை செபமாலையின் மகத்துவம் மற்றும் செபமாலை அன்னையின் திருவிழா பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்