நேர்காணல் - ஊடகம் வழியாக நற்செய்திப்பணி
மெரினா ராஜ் - வத்திக்கான்
‘பற்றியெரியும் இதயங்கள்... நகர்ந்து செல்லும் கால்கள்’ என்ற தலைப்பை (Hearts on fire, feet on the move - லூக்கா 24:13-35) 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் நாள் நாம் கொண்டாட இருக்கும் அகில உலக மறைபரப்பு ஞாயிறுக்கான கருப்பொருளாகத் திருத்தந்தை பிரான்சிஸ் தேர்ந்தெடுத்துள்ளார். ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படும் அகில உலக மறைபரப்பு ஞாயிறானது உலகின் அனைத்து கத்தோலிக்கர்களையும் ஒரே நம்பிக்கை சமூகமாக இணைக்கிறது. “ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஒரு மறைப்பணியாளராக கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருக்க அழைக்கப்படுகிறார். கிறிஸ்துவின் சீடர்களின் சமூகமான திருஅவைக்கும் கிறிஸ்துவுக்கும் சாட்சியாக இருப்பதன் வழியாக உலகம் முழுவதும் நற்செய்தியைக் கொண்டுவருவதைத் தவிர சிறந்த பணி இல்லை. நற்செய்தியே திருஅவையின் அடையாளம். நீங்கள் என் சாட்சிகளாக இருப்பீர்கள் என்ற உயிர்த்த இயேசுவின் வார்த்தைகளை நம் வாழ்வாகக் கொண்டு செயல்பட நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம். அகில உலக மறைப்பரப்பு ஞாயிறன்று நாம் செய்யும் செயல்கள் வழியாக திருத்தந்தையின் மறைபரப்பு செயல்களுக்கு நாம் ஆதரவளிக்கின்றோம். செபம் மற்றும் எளிய பிறரன்பு செயல்கள் வழியாக நாம் இயேசுவின் நற்செய்தியை இவ்வுலகிற்கு அறிக்கையிடுகின்றோம்
போர் மோதல் வன்முறை என்று நம்மை மிகவும் பிளவுபடுத்தும் இவ்வுலகில், உலக மறைபரப்பு ஞாயிறானது திருமுழுக்கு அருளடையாளத்தின் வழியாக மறைப்பணியாளர்களாக நம்மை ஒன்றிணைத்து மகிழ்ச்சியடைகிறது. ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களிடையே திருஅவையின் வாழ்வுதரும் இருப்பை ஆதரிக்கும் வாய்ப்பை நம் ஒவ்வொருவருக்கும் வழங்குகிறது. அன்று கடல்கடந்து கிறிஸ்துவின் நற்செய்தியை அகில உலகமெங்கும் எடுத்துரைத்தார்கள் இயேசுவின் சீடர்கள். அவர்களது நற்செய்தி அறிவிப்பின் போது அவர்கள் அனுபவித்த பிரச்சனைகள் இடர்கள் துன்பம் ஏராளம். இருப்பினும் மனம் தளராமல் அனைத்தையும் இயேசுவிற்காக ஏற்றுக்கொண்டார்கள். மாறிவரும் இக்காலகட்டத்தில் நற்செய்தி அறிவிப்பும் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. கடல்கடந்து அறிவித்த காலம் கடந்து கண நேரத்தில் கணிணி வழியாக உலகில் இருக்கும் எல்லா மக்களுக்கும் நற்செய்தியை அறிவிக்கும் சூழலில் நாம் இருக்கின்றோம். வாயால் வார்த்தைகளாகக் கேட்டக் காலம் கடந்து, காணொளியாகவும் குறும்படங்களாகவும் நாம் காண்கின்றோம்.
ஊடகம் வழியாக நற்செய்தியை இன்று பலரும் பல்வேறு வகைகளில் செய்துவருகின்றனர். அவ்வகையில் திருவிவிலியத்தை கிறிஸ்தவ மக்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்ற சிறந்த நோக்கத்தில் ஒலிப்பதிவு செய்து அதனை மக்கள் கேட்டுப் பயனடைய வழிவகை செய்திருக்கின்றார் பாண்டிச்சேரி – கடலூர் உயர்மறைமாவட்டத்தைச் சார்ந்த மேதகு ஆயர் அருள்செல்வம் இராயப்பன். வலைதளம் வழியாக காணொளிகளாக தனது நற்செய்திப்பணியினை சிறப்பாக செய்து வரும் மேதகு ஆயர் அவர்கள் தான் செய்து சிறப்பாக செய்துவரும் “ஊடகப்பணி வழியாக நற்செய்திப்பணி“ பற்றிய கருத்துக்களை இன்றைய நம் நேர்காணலில் நம்மோடு பகிர்ந்து கொள்ள உள்ளார். ஆயர் அவர்களை ஊடகப்பணி வழியாக நற்செய்திப்பணி என்ற தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைக்க அன்புடன் அழைக்கின்றோம்.
மேதகு ஆயர் அருள்செல்வம் இராயப்பன்
1960ம் ஆண்டு, நவம்பர் மாதம் 18ம் தேதி, பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் பண்ருட்டிக்கு அருகேயுள்ள Sathipattu எனுமிடத்தில் பிறந்தார். 1986ம் ஆண்டு, அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டு, பல்வேறு பங்குத்தளங்களில் பணியாற்றியபின், 1992 முதல், 94 வரை, உரோம் நகரின் உர்பான் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பை மேற்கொண்டார். 1994ம் ஆண்டு பெங்களூரு புனித பேதுரு கல்லூரியின் விரிவுரையாளராகப் பணியாற்றி இதுவரை அக்குருத்துவக் கல்லூரியில் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.
பாண்டிச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்டத்தை சார்ந்த அருள்பணி அருள்செல்வம் இராயப்பன் அவர்கள் 2021 ஆம் ஆண்டு மே 31 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தமிழகத்தின் சேலம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டார். பெங்களூருவின் புனித பேதுரு குருத்துவக் கல்லூரியில், திருஅவை சட்டங்கள் துறையின் இயக்குநர், பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் நீதி சார்ந்த விவகாரங்களில் பொறுப்பாளர் என பல பணிகளை ஆற்றிவரும் ஆயர் அவர்கள், ஊடகங்கள் வழியாக நற்செய்தியை அதிக ஆர்வத்துடன் அறிவித்து வருவதால் ஊடக பவுல் என்றும் மக்களால் அன்போடு அழைக்கப்படுகின்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்