நேர்காணல் - 2023 ஆம் ஆண்டு அகில உலக மறைபரப்பு ஞாயிறு
மெரினா ராஜ் – வத்திக்கான்
மறைப்பணி என்பது திருப்பலி, மற்றும் நற்செய்தியில் வேரூன்றப்பட்டதாகவும், உடன்பிறந்த உணர்வுகொண்ட நல்லிணக்கத்தில் ஊன்றியதாகவும் இருக்கவேண்டும். ஆண்டவரின் விருப்பத்திற்குத் திறந்த மனதுள்ள ஒரு மறைப்பணியாளராக, கிறிஸ்துவின் சகோதர சகோதரியாக வாழ்வது என்பது, திருப்புகழ்மாலை, மற்றும் திருப்பலியை நிறைவேற்றுவதில் வேரூன்றப்பட்டுள்ளது. குழு செபம், உடன்பிறந்த உணர்வு நல்லிணக்கக் கலாச்சாரத்தை வழங்குகின்றது என்பவை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறைப்பணிக் குறித்து வலியுறுத்தும் கருத்துக்களாகும்.
2023-ஆம் ஆண்டு 97-வது உலக மறைபரப்பு ஞாயிறுக்கான கருப்பொருளாக ‘பற்றியெரியும் இதயங்கள்... நகர்ந்து செல்லும் கால்கள்’ (Hearts on fire, feet on the move - லூக்கா 24:13-35) என்ற தலைப்பை ஜனவரி 25 அன்று அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இயேசுவின் அன்புத் தீயில் பற்றியெறியாமல் ஒருவர் உயிர்த்தெழுந்த இயேசுவைப் பற்றி எல்லோரிடமும் அறிவிக்க இயலாது என்பதே இக்கருப்பொருளின் மையக்கருத்து. மறைபரப்பு பணிக்கு இருவர் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். ஒருவர் அக்டோபர் மாதம் முதல் தேதியன்று நாம் கொண்டாடிய குழந்தை இயேசுவின் புனித தெரேசா மறைபரப்புப் பணிகளின் காவலர் என்ற பெருமைக்குரியவர். தான் இருந்த இடத்திலே இருந்துகொண்டு இயேசுவின் போதனைகளை அறிவித்தவர்; மற்றொருவர் பாரிஸ் நகரில் இருந்த பற்பே பல்கலைக்கழகத்தில் பதவி நாற்காலிக்கு ஆசைப்படாமல் தனது சொந்த நாட்டையும், வீட்டையும், விட்டு பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்து கிறிஸ்துவை பல கோடி மக்களுக்கு அறிமுகம் செய்த பிரான்சிஸ் சவேரியார்.
புனித சவேரியார் தன் போதனைகளால் பல்லாயிரம் உள்ளங்களை இறைவனிடம் அழைத்து வந்ததுபோல், புனித குழந்தை இயேசுவின் தெரேசா தன் செபங்களால் பல்லாயிரம் மனங்களை இறைவனிடம் கொணர்ந்தார். மறைபரப்புப் பணியில், இறைவனைப் பறைசாற்றுதல் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் இறைவனை நோக்கி எழுப்பப்படும் செபங்களும் முக்கியம் என்பதை நாம் ஆழமாக இன்றை நாளில் உணர்ந்துகொள்ள வேண்டும். மறைபரப்பு பணிக்கு முதலில் ஜெபம் முக்கியம் அதற்கு அடுத்தாற்போல் நாம் கற்றுக்கொண்ட இயேசுவின் போதனைகளை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பது மிகவும் முக்கியம்.
இயேசுவின் மறைபரப்பு பணி என்பது இரண்டு இலட்சியங்களை அடிப்படையாக கொண்டது. ஒன்று தூய குழந்தை தெரசம்மாளைப் போன்று நான்கு சுவர்களுக்கு மத்தியில் செபம் என்ற ஆயுதத்தால் இயேசுவின் போதனைகளை வாழ்வாக்குவது. மற்றும் பிறருக்கு அதனை மகிழ்வுடன் எடுத்துரைப்பது.
இவ்வாண்டு மறைபரப்பு ஞாயிறு கருப்பொருள் பற்றிக் கூறும்போது, உயிர்த்த ஆண்டவர் மறைநூலின் அர்த்தத்தை நமக்கு விளக்கிக் கூறும்போது அவருடன் இணைந்திருக்க நாம் எப்போதும் தயாராக இருப்போம் என்று எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இயேசு நம் இதயங்களை நமக்குள் பற்றி எரியச் செய்வாராக; அவருடைய தூய ஆவியாரிடமிருந்து வரும் வல்லமையினாலும் ஞானத்தினாலும் அவருடைய மீட்பின் மறையுண்மைகளை நாம் உலகுக்கு அறிவிக்கும்படி, அவர் உள்ளங்களை ஒளிரச்செய்வாராக! என்றும் கூறியுள்ளார். இத்தகைய சிறப்பு மிகுந்த 97ஆவது அகில உலக மறைபரப்பு ஞாயிறு பற்றியக் கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து. திருத்தந்தையின் இந்திய மறைத்தூதுப் பணியகத்தின் தேசிய இயக்குனர் மற்றும் இந்திய லத்தீன் வழிபாட்டு முறை ஆயர்பேரவையின் மறைபரப்பு பணிக்குழு செயலரான அருள்பணி முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள் செங்கல்பட்டு மறைமாவட்டத்தைச் சார்ந்தவர். தந்தை அவர்களை அகில உலக மறைபரப்பு ஞாயிறு பற்றிய செய்திகளை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்