வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் மூலவேருடன் தொடர்பிலிருக்க
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
உரோம் நகரில் வாழும் இந்தியர்கள், தங்கள் கலாச்சார மற்றும் தேசிய தனித்தன்மையை தொடர்ந்து காக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார் இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் ஃபிலிப் நேரி ஃபெர்ராவோ.
இத்தாலியின் தலைநகர் உரோமில் வாழும் இந்திய அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும் பொதுநிலையினரை அக்டோபர் 30, திங்கள்கிழமையன்று மாலை உரோமின் உர்பானியானும் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் சந்தித்து உரையாடிய கோவா மற்றும் டாமன் பேராயருமாகிய கர்தினால் ஃபெர்ராவோ அவர்கள், இந்தியாவில் உள்ள நம் மூலவேருடன் உள்ள தொடர்பையும் நம் தனித்தன்மையையும் காப்பதுடன், உரோமை கலாச்சாரம் மற்றும் விசுவாசத்திலிருந்து நம் ஆன்மீக வளர்ச்சிக்கு வலிமை பெறுவோம் என மேலும் தெரிவித்தார்.
உரோம் வாழ் இந்தியர்களை சந்திக்கும் நோக்கில் ஏற்பாடுச் செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதில் சென்னை மயிலை பேராயரும், இந்திய ஆயர் பேரவையின் துணைத்தலைவருமான பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி மறையுரை வழங்கினார்.
ஏறக்குறைய 300 அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும் பொதுநிலையினர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், வத்திக்கானின் ஆயர் மாமன்றக்கூட்டத்தில் கலந்துகொண்ட இந்திய பிரதிநிதிகளும் இடம்பெற்றிருந்தனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்