அமைதிக்கான பாதைகளை வன்முறையால் வழங்க முடியாது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
பாலஸ்தீனாவின் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ராயேல் மீது தாக்குதலைத் துவக்கியதையடுத்து, வன்முறைகளும் ஆயுத மோதல்களும் உடனடியாக புனிதபூமிப் பகுதியில் நிறுத்தப்பட வேண்டும் என யெருசலேமின் முதுபெரும் தந்தையர்களும் கிறிஸ்தவ சபைத் தலைவர்களும் விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர்.
அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ராயேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, புனித பூமியின் அமைதிக்காக, அப்பகுதி வன்முறைகள் உடனடி முடிவுக்கு வரவேண்டும் என அக்படோபர் 8, ஞாயிறு நண்பகல் மூவேளை செபவுரையின்போது அழைப்பு விடுத்திருந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
யெருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை உட்பட அப்பகுதியின் கிறிஸ்தவத் தலைவர்கள் அனைவரும், புனித பூமியில் வன்முறைகள் முடிவுக்கு வரவேண்டும் எனவும், அதற்கு அனைத்துலக சமுதாயம் தன் முயற்சிகளை இரு மடங்காக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
அனைத்து மக்களும் சம உரிமைகளுடன் வாழ்வதற்கான சூழலை உருவாக்கித் தரவேண்டியது அனைத்துலக சமுதாயத்தின் கடமை என்பதையும் வலியுறுத்தியுள்ளனர் கிறிஸ்தவத் தலைவர்கள்.
மரணங்களைக் கொணரும் புனித பூமியின் வன்முறைகள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும் என விண்ணப்பித்திருக்கும் WCC என்னும் உலக கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு, நீதிக்கும் அமைதிக்குமான பாதைகளை வன்முறைகளால் வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
இஸ்ராயேலுக்கும் ஹமாஸ் ஆயுத குழுவுக்கும் இடையே இடம்பெறும் மோதல்களால் அப்பகுதியின் யூத மற்றும் பாலஸ்தீன சமூகங்களின் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுவருவது குறித்தும் கவலையை வெளியிட்டார் WCCன் பொதுச்செயலர் போதகர் Jerry Pillay.
இஸ்ராயேல் பாலஸ்தீன மோதல் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவைத் தலைவரும் வெஸ்ட்மின்ஸ்டர் பேராயருமான கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள், வன்முறை எந்நாளும் தீர்வாகமுடியாது எனவும், பழிவாங்குதல் என்பது ஒரு நாளும் அமைதிக்கான பங்களிப்பை வழங்கமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்