காசாவில் அமைதி நிலவ கிறிஸ்தவத் தலைவர்கள் வேண்டுகோள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி தலைமையிலான தலத்திருஅவைகளின் தலைவர்கள் மற்றும் எருசலேமிலுள்ள திருச்சபைகளின் தலைவர்கள் காசா நகரில் ஆங்கிலிகன் நடத்தும் அல்-அஹ்லி மருத்துவமனையில் குண்டு வெடித்ததைத் தொடர்ந்து, காசாவில் அமைதி, மனிதாபிமான உதவிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தனித்தனி அறிக்கைகளில், திருச்சபைத் தலைவர்கள் மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்துள்ள அதேவேளையில், மனிதாபிமான உதவி மற்றும் மீள் குடியேற்றத்தையும் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.
புனித பூமியில் அமைதி நிலவ வேண்டும் என தனது இதயப்பூர்வமான வேண்டுகோளை வெளிப்படுத்தியுள்ள ஆங்கிலிக்கன் திருச்சபையின் தலைவரான பேராயர் ஜஸ்டின் வெல்பி, காசாவில் ஆங்கிலிகன் நடத்தும் அல் அஹ்லி மருத்துவமனையில் குண்டு வெடித்ததை தான் கண்டனம் செய்வதாகவும், மேலும் மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் நோயாளர்கள் பாதுகாப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சபைத் தலைவர்கள் பொதுமக்களைக் குறிவைத்து, குறிப்பாக காசாவில் நிகழ்ந்து வரும் வன்முறையை கண்டித்துள்ள அதேவேளை, அனைத்து குடிமக்களுக்கு எதிராக ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதலுடன் ஒரு புதிய வன்முறை சுழற்சியை தாங்கள் காண்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
காசாவின் வடபகுதியை வெளியேற்றும் முடிவின் மீது தங்களின் துயரத்தை வெளிப்படுத்தியுள்ள கிறிஸ்தவத் தலைவர்கள், இது ஏற்கனவே பேரழிவு தரும் மனிதாபிமான பேரழிவை மேலும் ஆழமாக்கும் என்று கூறியுள்ளதுடன், மனிதாபிமான அணுகுமுறைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
திருச்சபைகளின் தலைவர்கள், பன்னாட்டு ஆதரவுடன், காசாவுக்குள் மனிதாபிமான பொருட்களை அனுமதிக்குமாறு இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன் மீள்குடியேற்றத்துக்கு உதவுமாறும் அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்