தடம் தந்த தகைமை - வெற்றிப் பாதையில் யூதித்து
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
மூப்பர்களை நோக்கி யூதித்து, “ஆண்டவர் தம் மனத்தை மாற்றி, குறித்த நாளுக்குள் நமக்கு உதவி அளிக்காவிடில் இந்த நகரை நம் எதிரிகளிடம் ஒப்புவிக்கப்போவதாக நீங்கள் உறுதி அளித்துக் கடவுள்மேல் ஆணையிட்டிருக்கிறீர்கள். இன்று கடவுளைச் சோதிக்க நீங்கள் யார்? சகோதரர்களே, நம் கடவுளாகிய ஆண்டவரின் சினத்தைத் தூண்டி விடாதீர்கள். இந்த ஐந்து நாள்களில் நமக்கு உதவிபுரிய அவருக்கு விருப்பமில்லை என்றாலும், அவருக்கு விருப்பமான எந்த நேரத்திலும் நம்மைப் பாதுகாக்கவோ நம் பகைவர்கள் காண நம்மை அழித்து விடவோ அவருக்கு ஆற்றல் உண்டு. நம் கடவுளாகிய ஆண்டவரின் திட்டங்களுக்கு நிபந்தனை விதிக்காதீர்கள்; நம் மூதாதையரை அவர் சோதித்ததுபோல நம்மையும் சோதிக்கிறார். அவர் ஆபிரகாமுக்கு என்ன செய்தார் என்பதையும், ஈசாக்கை எவ்வாறு சோதித்தார் என்பதையும், யாக்கோபு தம் தாய்மாமன் லாபானின் ஆடுகளை வட மெசப்பொத்தாமியாவில் மேய்ந்துக்கொண்டிருந்த போது அவருக்கு என்ன நிகழ்ந்தது என்பதையும் எண்ணிப்பாருங்கள். ஆண்டவர் இவ்வாறு அவர்களின் உள்ளங்களைச் சோதித்தறியும் பொருட்டு அவர்களை நெருப்பில் புடமிட்டதுபோல நம்மைப் புடமிடவில்லை; நம்மைப் பழிவாங்கவுமில்லை. ஆனால், தமக்கு நெருக்கமாய் உள்ளோரை எச்சரிக்கும்படி தண்டிக்கிறார்.” என்று கூறினார்.
மீண்டும் யூதித்து அவர்களிடம், “நான் சொல்வதைக் கேளுங்கள். நான் செய்யப்போகும் செயல் நம் வழிமுறையினர் நடுவே தலைமுறை தலைமுறையாய் நினைவுகூரப்படும். நீங்கள் இன்று இரவு நகர வாயில் அருகே வந்து நில்லுங்கள். அப்போது நான் என் பணிப்பெண்ணுடன் வெளியே செல்வேன். நீங்கள் நகரை நம் பகைவர்களிடம் கையளிக்கப்போவதாக உறுதியளித்த அந்த நாளுக்குள் ஆண்டவர் என் வழியாக இஸ்ரயேலை விடுவிப்பார். நான் செய்யப்போவதுபற்றி நீங்கள் ஒன்றும் என்னிடம் கேட்காதீர்கள். நான் அதைச் செய்து முடிக்கும்வரை எதுவும் சொல்லமாட்டேன்” என்றார்.
அதற்கு ஊசியாவும் ஆளுநர்களும் அவரிடம், “நலமே சென்றுவா; கடவுளாகிய ஆண்டவர் நம் பகைவர்களைப் பழிவாங்க உன்னை வழி நடத்தட்டும்” என்றார்கள். பிறகு அவர்கள் அவரது கூடாரத்தை விட்டுத் தாங்கள் காவல்புரியவேண்டிய இடங்களுக்குத் திரும்பினார்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்