தேடுதல்

வெற்றி பெற்ற யூதித்து வெற்றி பெற்ற யூதித்து 

தடம் தந்த தகைமை - இஸ்ரயேலரின் வெற்றி விழா

யூதித்தைக் காண இஸ்ரயேல் பெண்கள் அனைவரும் கூடிவந்து அவரை வாழ்த்தினர். எல்லா மக்களுக்கும் முன்பாக யூதித்து சென்று, எல்லாப் பெண்களையும் நடனத்தில் வழிநடத்தினார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

யூதித்தால் ஒலோபெரினின் தலை துண்டிக்கப்பட்டது பற்றி, கூடாரங்களில் இருந்தவர்கள் கேள்விப்பட்டுத் திகைத்துப்போனார்கள். அச்சமும் நடுக்கமும் அவர்களை ஆட்கொள்ள, அவர்கள் எல்லாரும் ஒருவர் மற்றவருக்காகக் காத்திராமல் சிதறி ஓடினார்கள்; இஸ்ரயேல் மக்களுள் படைவீரராய் இருந்த அனைவரும் அவர்கள் மேல் பாய்ந்து தாக்கினர். பெத்துமஸ்தாயிம், பேபாய், கோபா, கோலா ஆகிய நகரங்களுக்கும், இஸ்ரயேலின் எல்லா எல்லைகளுக்கும் ஊசியா ஆளனுப்பி, நிகழ்ந்தவற்றைத் தெரியப்படுத்தினார்; மேலும் அவர்கள் அனைவரும் தங்களுடைய பகைவர்கள்மேல் பாய்ந்து அழித்தொழிக்கத் தூண்டினார். இஸ்ரயேல் மக்கள் அனைவரும் இதைக் கேள்வியுற்று ஒன்றுசேர்ந்து எதிரிகள்மீது பாய்ந்து, கோபாவரையிலும் துரத்தித் தாக்கினார்கள். கிலயாத்தினரும் கலிலேயரும் பகைவர்களது படையைப் பக்கவாட்டில் தாக்கித் தமஸ்குவையும் அதன் எல்லைகளையும் தாண்டி அவர்களைப் படுகொலை செய்தார்கள்.

படுகொலைக்குப்பின் இஸ்ரயேலர் திரும்பியபோது எஞ்சியிருந்தவற்றைக் கைப்பற்றினர். மலையிலும் சமவெளியிலும் இருந்த ஊர்களிலும் நகர்களிலும் வாழ்ந்த மக்கள் அங்கு இருந்த மிகுதியான பொருள்களைக் கைப்பற்றினார்கள்.

இஸ்ரயேலுக்கு ஆண்டவர் செய்திருந்த நன்மைகளை நேரில் காணவும், யூதித்தைச் சந்தித்துப் பாராட்டவும், தலைமைக் குரு யோவாக்கிமும் எருசலேமில் வாழ்ந்து வந்த இஸ்ரயேல் மக்களின் ஆட்சி மன்ற உறுப்பினர்களும் வந்தார்கள். அவர்கள் அனைவரும் யூதித்திடம் வந்து ஒருமித்து அவரை வாழ்த்தினார்கள். மக்கள் அனைவரும் முப்பது நாளாக எதிரிகளின் பாளையத்தைச் சூறையாடினார்கள். ஒலோபெரினின் கூடாரம், வெள்ளித் தட்டுகள், படுக்கைகள், கிண்ணங்கள், மற்றப் பொருள்கள் அனைத்தையும் யூதித்துக்குக் கொடுத்தார்கள். அவர் இவற்றை வாங்கித் தம் கோவேறு கழுதைமேல் ஏற்றினார்; தம் வண்டிகளைப் பூட்டி அவற்றிலும் பொருள்களைக் குவித்துவைத்தார்.

யூதித்தைக் காண இஸ்ரயேல் பெண்கள் அனைவரும் கூடிவந்து அவரை வாழ்த்தினர்; அவர்களுள் சிலர் அவரைப் போற்றி நடனம் ஆடினர். எல்லா மக்களுக்கும் முன்பாக யூதித்து சென்று, எல்லாப் பெண்களையும் நடனத்தில் வழிநடத்தினார். இஸ்ரயேலின் ஆண்கள் அனைவரும் படைக்கலங்கள் தாங்கியவர்களாய் மாலைகள் சூடிக்கொண்டு, புகழ்ப்பாக்களைப் பாடியவண்ணம் பின்சென்றார்கள்.

இஸ்ரயேலர் அனைவர் முன்னும் யூதித்து நன்றிப் பாடலைப் பாடத் தொடங்கினார். மக்கள் அனைவரும் அவரோடு சேர்ந்து உரத்த குரலில் பாடினார்கள்.

மக்கள் எருசலேமுக்குப்போய்ச் சேர்ந்தவுடன் கடவுளை வழிபட்டார்கள். மக்கள் தமக்குக் கொடுத்திருந்த ஒலோபெரினின் கலன்கள் அனைத்தையும் யூதித்து கடவுளுக்கு உரித்தாக்கினார். மக்கள் எருசலேமில் திருவிடத்துக்குமுன் மூன்று மாதமாக விழா கொண்டாடினார்கள். யூதித்தும் அவர்களுடன் தங்கியிருந்தார்.

பிறகு ஒவ்வொருவரும் அவரவர் தம் இல்லத்துக்குத் திரும்பினர். யூதித்து பெத்தூலியாவுக்குச் சென்று தம் உடைமையை வைத்து வாழ்க்கை நடத்தினார்; தம் வாழ்நாள் முழுவதும் நாடெங்கும் புகழ்பெற்றிருந்தார். பலர் அவரை மணந்துகொள்ள விரும்பினர்; ஆனால் அவருடைய கணவர் மனாசே இறந்து தம் மூதாதையரோடு துயில் கொண்டபின் தம் வாழ்நாள் முழுதும் வேறு யாரையும் அவர் மணமுடிக்கவில்லை. அவருடைய புகழ் ஓங்கி வளர்ந்தது. அவர் தம் கணவரின் இல்லத்தில் நூற்றைந்து வயதுவரை உயிர் வாழ்ந்தார்; தம் பணிப்பெண்ணுக்கு உரிமை கொடுத்து அனுப்பிவைத்தார். பெத்தூலியாவில் உயிர் துறந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2023, 15:19