தடம் தந்த தகைமை - யூதித்து ஒலோபெரினிடம் செல்லுதல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
யூதித்து நீராடி, விலையுயர்ந்த நறுமண எண்ணெய் பூசி, வாரி முடித்துத் தலைமீது மணிமுடியை வைத்துக் கொண்டார்; தம் கணவர் மனாசே இருந்தபோது தாம் உடுத்தியிருந்த பகட்டான ஆடைகளை அணிந்துகொண்டார். தம்மைக் காணும் ஆண்கள் அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் காலில் மிதியடி அணிந்தார்; சிலம்பு, கைவளை, மோதிரம், காதணி போன்ற தம் அணிகலன்கள் அனைத்தையும் அணிந்து தம்மைப் பெரிதும் அழகுபடுத்திக் கொண்டார். பணிப்பெண்ணும் அவரும் பெத்தூலியா நகர வாயிலை நோக்கிச் சென்றார்கள்; அங்கு ஊசியாவும் நகர மூப்பர்களான காபிரியும் கார்மியும் நின்று கொண்டிருக்கக் கண்டார்கள். யூதித்து கேட்டுக் கொண்டபடி அவருக்கு வாயிலைத் திறந்துவிடுமாறு மூப்பர்கள் இளைஞர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பெண்கள் இருவரும் பள்ளத்தாக்கில் நேரே சென்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது அசீரியர்களின் சுற்றுக்காவல் படை யூதித்தை எதிர் கொண்டது. அவர்கள் யூதித்தைப் பிடித்து, “நீ எந்த நாட்டைச் சேர்ந்தவள்? எங்கிருந்து வருகிறாய்? எங்குச் செல்கிறாய்?” என வினவினார்கள். அதற்கு அவர், “நான் ஓர் எபிரேயப் பெண், ஆனால் எபிரேயர்களிடமிருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கிறேன்; எனெனில், அவர்கள் உங்களுக்கு இரையாகப் போகிறார்கள். நானோ உங்கள் படைத் தலைவர் ஒலோபெரினைப் பார்த்து அவரிடம் உண்மை நிலையை எடுத்துரைக்கச் சென்று கொண்டிருக்கிறேன். அவர் மலைப்பகுதி முழுவதையும் கைப்பற்றக்கூடிய வழியை அவருக்குக் காட்டுவேன். அவருடைய வீரர்களுள் யாரும் உயிரிழக்கமாட்டார்கள். அவர்களின் உடலுக்கோ உயிருக்கோ எவ்வகைத் தீங்கும் நேராது” என்றார். வீரர்கள் அவருடைய சொற்களைக் கேட்டு, அவரை உற்றுநோக்க, அவருடைய முகம் எழில்மிக்கதாய் அவர்களுக்குத் தோன்றியது. அப்பொழுது அவர்கள், “எங்கள் தலைவரைக் காண விரைவாகக் கீழே இறங்கி வந்ததால் நீ உயிர் பிழைத்தாய். நீ இப்போது அவரது கூடாரத்துக்குச் செல். எங்களுள் சிலர் உன்னை அழைத்துச் சென்று அவரிடம் ஒப்படைப்பர். நீ அவர்முன் நிற்கும்போது அஞ்சாதே. நீ எங்களிடம் சொன்னதையே அவரிடம் தெரிவி. அவர் உன்னை நல்ல முறையில் நடத்துவார்” என்றார்கள்.
யூதித்தின் வருகைப்பற்றிய செய்தி பாளையம் முழுவதும் பரவியதால், எங்கும் ஒரே பரபரப்பாய் இருந்தது. வீரர்கள் வந்து அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். அவர் ஒலோபெரினின் கூடாரத்துக்கு வெளியே காத்திருந்தார். அவரைப் பற்றி அவனிடம் தெரிவித்தார்கள். அவர்கள் அவரது அழகைக் கண்டு வியந்தார்கள்.
பிறகு ஒலோபெரினின் காவலர்களும் பணியாளர்கள் அனைவரும் வெளியே வந்து யூதித்தைக் கூடாரத்துக்குள் அழைத்துச் சென்றார்கள். அப்போது, பொன், மரகதம், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட கருஞ்சிவப்புத் துணியாலான மேற்கவிகையின்கீழ்த் தன் படுக்கையில் ஒலோபெரின் ஓய்வு கொண்டிருந்தான். அவன் யூதித்தைப்பற்றி அறிந்ததும், வெள்ளி விளக்குகள் முன்செல்லத் தன் கூடாரத்துக்குமுன் வந்து நின்றான். அவன் முன்னும் அவனுடைய பணியாளர்கள் முன்னும் யூதித்து வந்தபோது, அவரது முக அழகைக் கண்டு அனைவரும் வியந்தார்கள். அவரோ ஒலோபெரின் முன்னிலையில் குப்புற விழந்து வணங்கினார். அவனுடைய பணியாளர்கள் அவரைத் தூக்கிவிட்டார்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்