தேடுதல்

ஆங்கிலிக்கன் பேராயர் Justin Welby  ஆங்கிலிக்கன் பேராயர் Justin Welby  

காசாவில் அமைதி திரும்ப ஒவ்வொருவரும் உதவுங்கள்!

அப்பாவி மக்களின் உயிர்கள் ஆபத்தில் இருக்கும்வேளை, குணப்படுத்துதல், அமைதி மற்றும் நீதியை வழங்குபவராகிய இயேசு என்னும் ஒளியை நோக்கி நம் கண்களைத் திரும்புவோம் : பேராயர் Welby

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

புனித பூமியை போர் சிதைத்தழித்து வரும் வேளை, குழந்தைகளின் அழுகுரல்களுக்கு மத்தியில் கிறிஸ்துவை எப்படி காண்பது என்று தனது வருத்தம்தோய்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார் ஆங்கிலிக்கன் பேராயர் Justin Welby 

அக்டோபர் 24, இச்செவ்வாயன்று, போரினால் பாதிக்கப்பட்டுள்ள புனித பூமிக்கு ஒற்றுமையின் அடையாளமாக சிறியதொரு பயணத்தை மேற்கொண்ட வேளை, காசா மக்களின் நலன்களுக்காகப் பேராயர் ஹோசம் நௌமுடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையொன்றில் இவ்வாறு தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் பேராயர் Welby. 

கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், போரின் தீவிரத்தை குறைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காகப்  பணியாற்றவும், காசாவின் வேண்டுகோளை ஆதரிக்கவும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எருசலேம் தலத்திருஅவைத் தலைவர்களுடன் பேராயர் Welby மேற்கொண்ட சந்திப்பினைத் தொடர்ந்து இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

காசாவில் தாக்குதலுக்கு உள்ளான மருத்துவமனையின் ஊழியர்கள் தங்கள் பணியைத் தொடரவும், தண்ணீர், எரிபொருள் மற்றும் மருந்துகளை வழங்கவும் விண்ணப்பித்துள்ள பேராயர் Welby அவர்கள், அப்பாவி மக்களின் உயிர்கள் ஆபத்தில் இருக்கும்வேளை, ​​குணப்படுத்துதல், அமைதி மற்றும் நீதியை வழங்குபவராகிய இயேசு என்னும் ஒளியை நோக்கி நம் கண்களைத் திரும்புவோம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் பேராயர் Welby.

காசாவிலுள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் இயேசுவின் வடிவில் காயப்பட்டுக்கிடப்பவர்களைப் பராமரிக்கும் பணிகளை ஆதரிக்குமாறும், அங்கு அமைதியை ஏற்படுத்த தங்களால் இயன்றதை செய்யுமாறும் தான் ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்வதாகக் கூறியுள்ளார் பேராயர் Welby

காசாவில் ஆங்கிலிகன் நடத்தும் அல்-அஹ்லி அரபு மருத்துவமனையின் முக்கியப் பணியைத் தொடர்வதற்கு மட்டுமல்லாமல், புனித பூமியின் எருசலேம்  மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து பணிகளுக்கும் நன்கொடைகள் கொடுத்து உதவவும், அவைகளுக்காக இறைவேண்டல் செய்யவும் ஆங்கிலிக்கன் திருஅவையின் தலைவர்கள் அனைவரும் அவசர அழைப்பொன்றையும் விடுத்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2023, 14:54