புனித பூமியில் அமைதிக்காக செபிக்கும் முதுபெரும்தந்தையர்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
எருசலேமில் உள்ள முதுபெரும்தந்தையர்கள் மற்றும் தலத்திருஅவை தலைவர்கள் புனித பூமியில் அமைதிக்காகவும், வன்முறை மற்றும் துயரங்களால் மிகவும் பாதிக்கப்பட்ட தலத்திருஅவைகளுடன் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தவும், அமைதிக்கான சிறப்பு செபவழிபாட்டில் ஈடுபட்டனர்.
அக்டோபர் 20 வெள்ளிக்கிழமை காண்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி உட்பட பலர் கலந்துகொண்ட இந்த அமைதிக்கான சிறப்பு செபவழிபாடானது, புனித பூமியில் வன்முறை நிறுத்தப்பட்டு அமைதி நிலவ அதற்கான செபத்தைக் கடவுளை நோக்கி உயர்த்துவதற்கான ஒரு வழியாகவும் நடைபெற்றது.
எருசலேமில் உள்ள மறைசாட்சியாளரான புனித ஜார்ஜ் ஆங்கிலிகன் பேராலயத்தில் நடைபெற்ற இந்த அமைதிக்கான செப வழிபாட்டில் காண்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி புனித பயணமாக எருசலேம் வந்தடைந்து செபித்தார்.
எருசலேம் ஆங்கிலிகன் ஆயர் ஹோசம் நௌம் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு அமைதிக்கான சிறப்பு செப வழிபாட்டில் காண்டர்பரி பேராயர் இறுதி ஆசி வழங்கினார். ஆங்கிலிகன் ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்கள் கருப்பு நிற உடைகளை அணிந்து தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினர்.
அக்டோபர் 17 செவ்வாய்க்கிழமை மாலை, காசாவில் உள்ள அல் அஹ்லி ஆங்கிலிக்கன் மருத்துவமனை தாக்கப்பட்டதைத்தொடர்ந்து ஹமாஸ் மற்றும் இஸ்ரயேல் இடையே தொடர்ந்து குற்றச்சாட்டுகள் பரிமாறப்பட்டு வருகின்றன என்றும் இதனால் அப்பகுதியில் அதிகஅளவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ஆர்த்தடாக்ஸ் ஆலயம் வான்வழித் தாக்குதலின் நோக்கம் அல்ல, மாறாக ஆலயத்திற்கு அருகில் உள்ள ஹமாஸ் மையமே தாக்குதலின் நோக்கமாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
சிரியா கத்தோலிக்க தலத்திருஅவையின் தலைவர் Mar Yacoub Ephrem Semaan, புனித பூமியின் காவலர் அருள்பணியாளர் Francesco Patton, காண்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி, எருசலேமின் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பித்சபல்லா (Pierbattista Pizzaballa) ஆகியோர் இச்செப வழிபாட்டில் பங்கேற்றனர். (CNA)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்