தேடுதல்

படைப்பை பாதுகாப்போம் படைப்பை பாதுகாப்போம் 

வாரம் ஓர் அலசல் - செப்டம்பர் 26. உலக சுற்றுச்சூழல் நல நாள்

கடவுளின் படைப்பே இயற்கை என்பது கத்தோலிக்க திருஅவையின் ஆழ்ந்த நம்பிக்கை. இயற்கையை பேணுதல் குறித்து திருஅவை எப்போதும் அக்கறைக் கொண்டுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

எரிந்து கொண்டு இருக்கும் மெழுகுதிரியைப் பார்த்து யாரும் இறந்து கொண்டு இருக்கிறது என கூறுவதில்லை. நமக்குத் தெரிவதெல்லாம், அதன் தியாகமும், அதனால் கிட்டும் பயனும். ஆனால், அங்கு மெழுகுதிரி மடிந்து போய்விடுகிறது. அதுபோலத்தான் தினம் தினம் அழிந்து கொண்டு இருக்கும் இயற்கையின் இறப்பு கூட நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. அதை உள்வாங்கிச் செயல்பட நமக்கு நேரமில்லை.

அன்று, ஆறறிவோடு அலைந்து திரிந்த மனிதன் சிக்கி முக்கிக் கற்களில் நெருப்பை கண்டுபிடித்தான். உருண்டோடிய கற்களில் இருந்து சக்கரம் கண்டுபிடித்தான். சக்கரத்தின் மீது சவாரி சென்றான். மாட்டைப்பூட்டி உழவு தொழில் செய்தான். ஆற்றுப்படுக்கைகளை பசுமைப் பிரதேசங்களாக்கினான். மனித இன வரலாற்றில் முயற்சிகள்தான் கண்டுபிடிப்புகளாகின. அதன் விளைவே இன்று உலகம் நம் கைவசப்பட்டிருக்கிறது. மின்னணுச் சாதனங்கள், கணிப்பொறி, இண்டர்நெட், அணு ஆற்றல் என வளர்ந்து கொண்டேச் செல்லும் அறிவியல் முன்னேற்றங்கள் இருந்தாலும், பசி என்னும் இரு எழுத்துக்கு முன் அனைத்தும் மண்டியிடும். ஒரு மனிதனின் பசியை நீக்குபவன்தான் விவசாயி. ஆனால், இன்றைய உலகில் விவசாயியின் நிலையையும், சுற்றுச்சூழலின் நிலையையும் குறித்துச் சிந்திக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். தொழில் நுட்ப வளர்ச்சி வானாளவ உயர்ந்து நிற்கும் நவீன உலகில்தான், உலக பூமி நாள், உலக சுற்றுச்சுழல் நாள் என்பதைக் கொண்டாடுவது மட்டும் போதாது என, உலக சுற்றுச்சூழல் நலநாள் என்பதையும் கொண்டாட வேண்டிய தேவையில் உள்ளோம். ஆம். செப்டம்பர் 26, செவ்வாய்க்கிழமையன்று, உலக சுற்றுச்சூழல் நல நாள் கொண்டாடப்படுகிறது.

சுற்றுச்சூழல் பல சவால்களை எதிர்கொள்ளத் தொடங்கிய பின்னர் உருவானது தான் இந்த நாள். இந்த பூமியில் நிலவி வரும் சுற்றுச்சூழல், காற்று மாசு, இயற்கை வளங்கள், நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நமது பூமியின் சுற்றுச்சுழலைக் கொண்டாடுவதற்காகவுமே ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் தேதி, உலக பூமி தினத்தைச் சிறப்பிக்கிறோம். அதற்குப்பின் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் நாளைக் கொண்டாடுகிறோம். இதெல்லாம் போதாதென்று, உலக சுற்றுச்சூழல் நல நாளை  செப்டம்பர் 26 அன்று சிறப்பிக்கிறோம் என்றால், வருங்காலத்தலைமுறையினர் குறித்து மனிதன் கவலைப்படத் துவங்கியிருக்கிறான் என்பது தெளிவாகிறது.

ஏறக்குறைய 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக பூமி பிறந்ததாக அறியப்படுகிறது. பூமி தவிர வேறு எந்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ முடியும் என்று எத்தனையோ ஆராய்ச்சிகளை தொடர்ந்து மனிதன் மேற்கொண்டாலும், அனைத்து உயிர்களும் தடையின்றி வாழ உகந்த ஒரே கிரகம் பூமி மட்டும் தான் என்ற பதிலே மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் செய்தியாக உள்ளது. பூமியின் கட்டமைப்பு என்பது மனிதன் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் வாழக்கூடிய வகையில் மிக சிரத்தையுடன் இயற்கை வரமாய் உருவானதாகும். எந்தெந்த உயிரினம் எங்கெங்கே வாழுதல் நலம் என்று தானாகவே பூமி ஏற்படுத்திய வரைமுறைதான் மனிதன் நாட்டிலும், விலங்குகள் காட்டிலும் வாழும்படியாக காலப்போக்கில் மாறியது.

மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, மறுபக்கம் பூமியின் வளங்கள் குறைந்து கொண்டே வருகிறது. தினம் தினம் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் சுற்றுச்சூழலில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றது. மனிதனின் பேராசையோ, போதும் என்ற மனமின்றி இயற்கையை அழித்து செயற்கை பொருட்களை உருவாக்கத் தொடங்கியது. அதன் ஒரு தொடக்கமாகத்தான் காடுகள் அழிக்கப்பட்டு விலங்குகளின் உறைவிடங்கள் அபகரிக்கப்பட்டன. இதனால் பல்லாயிரக்கணக்கான அரிய வகை உயிரினங்கள் அழிந்தும், அழிவின் விளிம்பிலும் நிற்கின்றன. 2050 ஆம் ஆண்டிற்குள் ஐம்பது விழுக்காட்டு உயிரின வகைகள் பூமியிலிருந்து நிரந்தரமாக விடைபெற்றுக் கொள்ளும் என்ற தகவல் மிகவும் வேதனையாக உள்ளது. புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது ஓர் ஆராய்ச்சியின்போது, “தேனீக்கள் என்று அழிகிறதோ அன்று உலகமும் அழிந்துபோகும்” என்று மேற்கோள்காட்டி கூறியுள்ளார். அதிகமான பூச்சி கொல்லி உபயோகம், மகரந்த சேர்க்கைக்கு உதவும் தேனீ உள்ளிட்ட பல்வேறு பூச்சி இனங்களைக் கொல்வதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

உயிரினங்கள் அழிவின் விளிம்பில் நிற்க பூமி வெப்பமயமாவதும் ஒரு முக்கிய காரணமாகும். வேகமாக உருகி வரும் பனிப் பாறைகள் பல்வேறு பனிக்கரடிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டன. மேலும், அதிக வெப்பமானது கடல் வாழ் உயிரினங்களை இன பெருக்கத்திலிருந்தும் தடுக்கிறது. இது போதாது என்று, உலகில் ஒவ்வொரு நாளும் 700-க்கும் மேற்பட்ட சிறார்கள் உயிரிழந்து வருவதாகவும், ஒரு வயதுக்கு உட்பட்ட ஒரு கோடியே எழுபது இலட்சம் குழந்தைகள் தீவிர மாசு நிறைந்த பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள் எனவும், உலகில் நான்கில் ஒரு சிறார் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும்,  உலகம் முழுவதும் ஏறக்குறைய பத்து இலட்சம் குழந்தைகள் பிறந்த அன்றே உயிரிழப்பதாகவும் ஐ.நாவின் குழந்தை நல நிறுவனம் யூனிசெஃப் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகம் வெப்பமயமாதல், காற்று மாசு, காடு அழிப்பு, பசுமைக் குடில் விளைவுகள், தண்ணீர் பஞ்சம் என்று பூமி ஏற்கனவே தன் வளங்களை வெகுவாக இழந்து வரும் நிலையில் பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது. முடிந்தவரை காற்று மாசை தடுத்து, அதிக அளவில் மரங்கள் நட்டு, தண்ணீர் சேமிப்பு மேலாண்மை திட்டங்களை மேம்படுத்தி, இயற்கையை அதன் வழியிலேயே பாதுகாத்தால் மட்டுமே மனிதனால் தன் அடுத்த தலைமுறைக்கு, தன் முன்னோரும் தானும் அனுபவித்த இயற்கை வளங்களை பரிசாய்த் தரமுடியும். இல்லையேல் இனிவரும் தலைமுறைகள் புலியையும், யானையையும், ஏன் மழையைக் கூட புகைப்படத்தில்தான் காண இயலும். பூமியின் பாதுகாப்பிற்காக மட்டுமல்ல, மனிதனின் பாதுகாப்புக்காகவும் அன்றாட வாழ்வில் நாம் சில மாற்றங்களைக் கொண்டு வரவேண்டியது அவசியம்.

பசுமைப் புரட்சியினால், உணவு பொருட்கள் தேவைக்காக உற்பத்தி செய்த நிலையை மாற்றி, வாணிபம் செய்வதற்காக எப்போது உற்பத்தி செய்யத் துவக்கினோமோ, அப்போதே நிலத்தடி நீர்மட்டம் குறையத் துவங்கியது. இதன் விளைவால் ஆழமான ஆழ்துளை கிணறுகள் உருவாகின. பசுமை புரட்சியினால் செயற்கை உரங்கள் மறைந்து யூரியா, அமோனியா, பாஸ்பேட், பொட்டாஷ் என்னும் ஆங்கில பெயருடன் கூடிய உரங்கள் பயன்படுத்தப்பட்டபோது, ஆரம்பத்தில் அதனால் உருவான விளைச்சலைக் கண்டு வியந்த நம் விவசாயிகள், இன்று விளைச்சலை காண முடியாமல் திண்டாடுகின்றனர். இத்தகைய உர பயன்பாட்டால் மண்ணிற்கே உரித்தான ஈரப்பதமும், காற்றோட்டமும் மறைந்து மண் இறுக்கமாக மாறிவிட்ட நிலை நிலவுகிறது. மனிதன் இன்று அதிகப்படியான ஆசையால் விளைச்சலை அதிகப்படுத்தி நீர் வளம் குறைய காரணமாகிறான். நிலத்தை தோண்டி புவியின் அடியில் உள்ள நீரும் வற்றிப் போகும் அளவுக்கு இன்று பயன்படுத்தி வருகிறான். இதை அறிந்தே அறிஞர்கள் பலர் கூறுகின்றனர்: மூன்றாம் உலகப்போர் உருவானால் அது நீரை மையப்படுத்தி தான் இருக்கும் என்று.

இயற்கை பாதுகாப்பில் திருஅவை

கடவுளின் படைப்பே இயற்கை என்பது கத்தோலிக்க திருஅவையின் ஆழ்ந்த நம்பிக்கை. இயற்கையை பேணுதல் குறித்து திருஅவை எப்போதும் அக்கறைக் கொண்டுள்ளது. இயற்கையை பாதுகாக்க திருஅவை பல நேரங்களில் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இன்றும் அதனை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கின்றது.

புனித திருத்தந்தை ஆறாம் பால் அவர்கள், மனிதன் சுற்றுச்சூழலை அளிவுக்கதிகமாகப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கும் தனக்கும் கேடு விளைவிக்கிறான் எனக் கூறுகிறார்.

1996ஆம் அண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் “சமூக அக்கறை” (Sollicitudo Reisociali) என்ற சுற்றுமடலை எழுதினார். வளர்ச்சி என்பது இயற்கைக்கு புறம்பானதாக இருக்கக்கூடாது, இயற்கையை மதிப்பதாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

“நமக்கு விருப்பமானதை மட்டுமோ, நமக்கு பயனளிக்கும் என்று கருதுவதையோ மட்டும் செய்யக்கூடாது. இந்த உலகம் நமக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். சமூகத்தின் எதிர்காலம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமெனில் பூமியின் குரலுக்கு செவிமடுத்து அதற்கு ஏற்றாற்போல் செயல்பட வேண்டியது காலத்தின் அறிகுறியாக உள்ளது” என்று கூறியுள்ளார் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் வெளியிடப்பட்ட “Laudato Si”  என்ற சுற்றுமடலில், மனித உயிரினத்தின் பொதுவான வீடாகிய இயற்கையை பாதுகாப்பது நமது கடமை எனவும், கடவுளின் படைப்பான இயற்கையை நாம் பாதுகாக்காமல் அழிக்க முயன்றால் அது நம்மையே அழித்துவிடும் எனவும், மனித இனத்தின் வீடாகிய இயற்கையை கட்டுவதற்கு மனிதர்களுக்கு இன்றும் சக்தி இருக்கிறது, அதற்கு ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கிறார்.

வான்நோக்கிய ஆன்மீகத்தையும் கைவிட்டுவிடாமல், அதன் துணைகொண்டு இந்த சுற்றுமடல் வழியாக மண்ணைத் தொடத் தொடங்கியிருக்கிறது திருஅவை எனலாம். மண், தண்ணீர், காற்று என நாம் உணர்கின்ற, அனுபவிக்கின்றவைகளைத் தொடத் தொடங்கியிருப்பது ஒரு புதிய முயற்சி. அறிவியலும், விசுவாசமும் ஒன்றுக்கொன்று முரண்படும் என சொல்லிக்கொண்டிருந்த திருஅவை இச்சுற்றுமடலில் அறிவியலோடு கைகோர்க்கத் தொடங்கியிருக்கிறது. சுற்றுச்சூழல் பற்றிய அறிவியல் கோட்பாடுகளான, புவி வெப்பமயமாதல், பசுமை இல்ல விளைவு, உயிரியல் பன்மயம், இன்னும் பல மிக எளிதாக, சாதாரண மொழிநடையில் இங்கு தரப்பட்டுள்ளன என்பதும் உண்மை.

சுற்றுச்சூழல் சந்திக்கும் சவால்கள், அவை ஏற்படுத்தும் தாக்கங்கள், சுற்றுச்சூழலின்மேல் நமக்குள்ள பொறுப்புணர்வு, மற்றும் அன்றாடம் நாம் வாழ வேண்டிய எளிய வாழ்க்கை குறிப்புகள் என அலசி ஆராய்கிறது இச்சுற்றுமடல்.  ஆன்மீகத்தை மட்டுமல்ல, நமது பூமிப்பந்தையும் அதன் அனைத்து உயிர்களையும் காப்பதும் கூட கிறித்துவத்தின் குறிக்கோள் எனச் சொல்கிறது இந்த சுற்றுமடல். பூமியை, நம் சுற்றுச்சூழலை, நம்மைச் சுற்றியிருக்கும் உயிரினங்களை மதிக்கத் தொடங்குவோம். அதன் வழியே நமது பாதுகாப்புக்கும் வழிகாண்போம். புவியை காக்க திருஅவையும் திருத்தந்தையர்களும் பல ஆண்டுகளாகவே அழைப்பு விடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.

நாம் வாழும் இப்பூமி நம்முடையது அல்ல. நாம் வருவதற்கு முன்பும் இப்பூமி இருந்தது. நாம் போன பிறகும் இப்பூமி இருக்கும். இது நம் வருங்காலத் தலைமுறைக்குரியது. எனவே, வாழும் வரை இப்பூமியை நம்முடையதாக எண்ணி இப்பூமியை பாதுகாத்து வருங்காலத் தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டியது நம் கடமையாகும். இதையெல்லாம் வலியுறுத்தித்தான் செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 4ஆம் தேதிவரை, அதாவது இயற்கையை அன்புகூர்ந்து செயலாற்றிய புனித பிரான்சிஸ் அச்சியின் விழாவரை திருஅவையில் படைப்பின் காலம் சிறப்பிக்கப்படுகிறது.

வாய்பை நழுவவிட்டவன் வாழ்வை இழந்தான் என்பதுபோல் இப்புவியை பாதுகாக்க நமக்கு கிடைத்துள்ள இவ்வாய்ப்பை பயன்படுத்தி இப்புவியில் நம் வாழ்வை தக்கவைத்துக் கொள்ள முன் செல்வோம். “ஒரு துளி செயல் இருபதாயிரம் வெற்று பேச்சுக்களைவிட சிறந்தது” என்ற சுவாமி விவேகானந்தரின் வார்த்தைக்கு ஏற்ப செயல்படத் துவங்குவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2023, 10:10