சூழலியல் நீதிக்கு அழைக்கும் கர்தினால் சார்லஸ் முவாங் போ
ஜான் போஸ்கோ – வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘இறைவா உமக்கே புகழ்’ சுற்றமடலின் இரண்டாம் பாகத்தை அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், மியான்மரின் கர்தினால் சார்ல்ஸ் முவாங் போ அவர்கள் சூழலியல் நீதிக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
செப்டம்பர் 2, வெள்ளிக்கிழமை, படைப்பு மீது அக்கறை குறித்த உலக செப நாளை முன்னிட்டு, ஆசிய ஆயர்கள் பேரவையின் தலைவரான கர்தினால் சார்ல்ஸ் முவாங் போ அவர்கள், இன்றைய சூழலியல் அநீதியானது, ஏழை நாடுகளிலுள்ள பல இலட்சக்கணக்கான குழந்தைகளின் தட்டிலிருந்த உணவையும், வறண்ட நாவுகளுக்கான தண்ணீரையும் கொள்ளையடித்துள்ளது என்று கூறியுள்ளார்.
நீதியும் அமைதியும் வழிந்தோடட்டும் என்பதே இந்த ஆண்டிற்கான கருப்பொருள் என்பதையும் சுட்டிக்காட்டிய கர்தினால், விவசாயிகள் தங்களின் விதைகளையும், காடுகள் தங்களது மேல் மண்ணையும் இழந்துவிட்டது மட்டுமல்ல, ஏழைநாடுகள் தங்களின் இருத்தலியல் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.
மூன்றாம் உலக நாடுகளின் வளத்தை கொள்ளையடிக்கும் பணக்கார நாடுகளின் செயல், இனப்படுகொலை என்றும், இது ஒரு பயங்கரமான அநீதி என்றும் எடுத்துரைத்து, தாய் பூமியின்மீது காயங்களை ஏற்படுத்துவதை நிறுத்துங்கள் என்றும் அப்பணக்கர நாடுகளை வலியுறுத்தியுள்ளார் கர்தினால்.
தாராளமான, மற்றும் அன்பு நிறைந்த கடவுளால் நமக்கு கொடையாக அளிக்கப்பட்ட இறைவாக்கினர் ஆமோஸ், நீதியும் அமைதியும் ஆறுபோல் வழிந்தோடும் ஓர் உலகிற்கு அழைத்தார் என்று வலியுறுத்திய கர்தினால் போ அவர்கள், நவீன ஆமோஸான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 2015ல் தனது பாதையை விளக்கும், இறைவா உமக்கே புகழ் சுற்றுமடல் வழியாக உலக நாடுகளின் கதவுகளை தட்டினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்