தேடுதல்

மணிப்பூரில் அமைதி ஊர்வலம் மணிப்பூரில் அமைதி ஊர்வலம்  (AFP or licensors)

மணிப்பூரில் தலையிட குடியரசுத் தலைவருக்கு விண்ணப்பம்

மணிப்பூரில் தலையிட்டு அமைதியான தீர்வு காண உதவவும், வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ கட்டிடங்கள் மீண்டும் கட்டியெழுப்பப்பட ஆதரவு வழங்கவும் விண்ணப்பம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மணிப்பூர் மாநிலத்தில் நான்கு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்துகொண்டிருக்கும் பிரிவினைவாத மோதல்களை முடிவுக்குக் கொணர இந்திய குடியரசுத் தலைவர் தலையிடவேண்டும் என விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளன வடகிழக்கு இந்தியாவின் கிறிஸ்தவ சபைகள்.

மணிப்பூரின் அண்டை மாநிலமான நாகாலாந்தின் 5 கிறிஸ்தவ சபைகள் இணைந்து குடியரசுத் தலைவர் திரவ்பதி முர்மு அவர்களுக்கு அனுப்பியுள்ள விண்ணப்பத்தில், மணிப்பூர் விவகாரத்தில் தலையிட்டு அங்கு அமைதியான தீர்வு காண உதவுவதோடு, இந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ கோவில்கள் மற்றும் கட்டிடங்கள் மீண்டும் கட்டியெழுப்பப்பட ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.

இவ்வாண்டு மே மாதம் 3ஆம் தேதி குக்கி பழங்குடி இன கிறிஸ்தவர்களுக்கும் மெய்தெய் இந்து சமுதாயத்திற்கும் இடையே வெடித்த வன்முறைகளால் மெய்தெய் சமுதாயத்தால் 350க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ கோவில்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் மணிப்பூர் நிலை குறித்து தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள கிறிஸ்தவ சபைகள், மணிப்பூரில் அமைதி, ஒப்புரவு, சமுதாய முன்னேற்றம் என பலதுறைகளில் பாடுபட்டு உழைத்த கிறிஸ்தவ சமூகங்கள் அண்மைக்காலங்களில் தாக்கப்பட்டு வருவது குறித்தும், மணிப்பூரில் இடம்பெறுவது மனித உரிமை மீறல்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கும்படி, தங்கள் விண்ணப்பத்தை நாகாலாந்து ஆளுனர் இல. கணேசனிடம் வழங்கியுள்ளன கிறிஸ்தவ சபைகள். இதன் பிரதி ஒன்று மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் அவர்களிடமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 September 2023, 13:30