தடம் தந்த தகைமை – தோபியாவின் திருமணத்திற்கு உறுதி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
தோபியாவும் வானதூதர் இரபேலும் எக்பத்தானாவை அடைந்தபொழுது, இரகுவேல் தம் வீட்டு முற்றத்துக் கதவு அருகே அமர்ந்திருக்க அவர்கள் கண்டு முதலில் அவரை வாழ்த்தினார்கள். அதற்கு அவர், “இளைஞர்களே, வணக்கம். உங்களுக்கு நலம் பெருகட்டும்” என்று அவர்களை வாழ்த்தினார். பின்னர், அவர்களை அவர் வீட்டிற்குள் அழைத்துச் சென்று, “இவ்விளைஞர் என் உறவினர் தோபித்தைப்போல் இல்லையா?” என்று தம் மனைவி எதினாவிடம் வியந்து கூறினார். எதினா அவர்களை, “இளைஞர்களே, எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “நாங்கள் நினிவேக்கு நாடு கடத்தப்பட்ட நப்தலியின் மக்கள்” என்றார்கள். அதற்கு எதினா அவர்களிடம், “எங்கள் உறவினர் தோபித்தைத் தெரியுமா?” என்று கேட்டார். அவர்கள், “அவரை எங்களுக்குத் தெரியும்” என்றார்கள். பின்பு, “அவர் நலமா?” என்று கேட்டார். அவர்கள், “அவர் உயிரோடு, நலமாக இருக்கிறார்” என்றார்கள். “என் தந்தைதான் அவர்” என்றார் தோபியா. உடனே இரகுவேல் துள்ளி எழுந்து அவரை முத்தமிட்டு மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தார். “தம்பி, உனக்கு மங்கலம் உண்டாகுக! நீ ஒரு நல்ல, சிறந்த தந்தையின் மகன்! தருமங்கள் செய்யும் நேர்மையான ஒரு மனிதர் பார்வையை இழந்தது எத்துணை துயரமான செய்தி!” என்று கூறித் தம் உறவினர் தோபியாவின் தோள் மீது சாய்ந்து அழுதார். அவருடைய மனைவி எதினாவும் தோபித்துக்காக அழுதார். அவர்களுடைய மகள் சாராவும் அழுதாள். பிறகு, இரகுவேல் தம் ஆடுகளுள் ஒன்றை அடித்து அவர்களைச் சிறப்பாக உபசரித்தார்.
அவர்கள் குளித்தபின் கை அலம்பிவிட்டு உணவு அருந்த அமர்ந்தார்கள். தோபியா அசரியாவிடம், “சகோதரரே, என் உறவினளான சாராவை எனக்கு மணம் செய்துகொடுக்குமாறு இரகுவேலிடம் கேளும்” என்றார். இச்சொற்கள் இரகுவேலின் செவியில் விழுந்தன. அவர் இளைஞரிடம், “நீ இன்று இரவு உண்டு பருகி மகிழ்வுடன் இரு. தம்பி, என் மகள் சாராவை மணந்து கொள்ள உன்னைத்தவிர உரிமை உள்ள மனிதர் வேறு எவரும் இல்லை. உன்னைத் தவிர வேறு எவருக்கும் அவளைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் இல்லை; ஏனெனில் நீ என் நெருங்கிய உறவினன். ஆயினும், தம்பி, உன்னிடம் ஓர் உண்மையைக் கூற விரும்புகிறேன். அவளை நம் உறவினர்களுள் எழுவருக்கு மணமுடித்துக் கொடுத்தேன். அவளைக் கூடுவதற்கு நெருங்கிய அன்றிரவே அவர்கள் அனைவரும் இறந்தார்கள். இப்பொழுது, தம்பி, உண்டு பருகு. ஆண்டவர் உங்கள் இருவருக்கும் நல்லது செய்வார்” என்றார். அதற்குத் தோபியா, “நீங்கள் இதைப்பற்றி ஒரு முடிவுக்கு வரும்வரை நான் உண்ணமாட்டேன். பருக மாட்டேன்” என்றார். இரகுவேல், “சரி, செய்கிறேன்; மோசேயின் நூலில் விதித்துள்ளபடியே அவளை உனக்கு மணமுடித்துக் கொடுப்பேன். உனக்கு அவளைக் கொடுக்கும்படி விண்ணகத்தில் உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆகவே உன் உறவினளை ஏற்றுக்கொள். இனி நீ அவளுக்கு உரியவன்; அவள் உனக்குரியவள்; இன்று முதல் என்றுமே அவள் உன்னுடையவள். தம்பி, விண்ணக ஆண்டவர் இன்று இரவு உங்களைக் காப்பாராக; உங்கள் மீது இரக்கமும் அமைதியும் பொழிவாராக” என்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்