வாரம் ஓர் அலசல் – பெண்களின் உரிமையும் அன்னையின் பிறரன்பும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
அன்பு நெஞ்சங்களே, ஆகஸ்ட் 26க்கும் செப்டம்பர் 5க்கும் இடைப்பட்ட வாரத்தில் நாம் இருக்கிறோம். அது ஏன் இந்த இரண்டு நாட்களையும் நாம் குறிப்பிடுகிறோம் என்று நீங்கள் எண்ணாலாம். குறிப்பிடுவதற்கு காரணம் இருக்கிறது. இவை இரண்டும் முக்கிய உலக தினங்கள் மட்டுமல்ல, அன்னை தெரசாவோடு நெருங்கிய தொடர்புடைய தினங்கள். பெண்கள் சமத்துவ தினமாக, அதாவது, பெண்கள் ஆண்களுக்கு நிகராக உரிமை கொண்டவர்கள் என்பதை வலியுறுத்தும் நாளாக, ஆகஸ்ட் 26 அன்று சிறப்பித்தோம். ஆண்களுக்கு நிகராக நின்று சாதித்துக் காட்டிய பெண்களுள் ஒருவரான அன்னை தெரசா பிறந்த தினம் ஆகஸ்ட் 26. அதற்கடுத்து செப்டம்பர் ஐந்தை எடுத்துக்கொண்டோமானால், அன்று உலக பிறரன்பு தினத்தை சிறப்பிக்க விருக்கின்றோம். ஆம், பிறரன்பு செயல்களின் உன்னத எடுத்துக்காட்டாக இருந்த அன்னைதெரேசா இறைபதம் சேர்ந்த அத்தினத்தைத்தான் உலக பிறரன்பு தினமாக அறிவித்துக் கொண்டாடுகிறோம். இவ்விரு தினங்கள் குறித்து இன்றைய வாரம் ஓர் அலசலில் காண்போம்.
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்..........
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி.
பெண்களின் மீதான அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றை ஒழித்துவிட வேண்டும் என்ற வேட்கையை இங்கே கவிதையாக்கியிருக்கிறார் மகாகவி பாரதியார். இந்தியநாடு ஆங்கிலேயர்கள் பிடியில் சிக்குண்டு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் இந்திய விடுதலைக்கானப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்ட பாரதி, பெண்களும் அடிமைகளாய் நாட்டிற்குள்ளேயே வாழ்ந்துவருவதைக் காண்டார். இந்த நிலை மாறவேண்டும் என்று விரும்பிய அவர், பெண்கள் விடுதலையே நாட்டு விடுதலை, மானுட விடுதலையின் வேர் பெண்விடுதலையே என்ற கருத்தை மையமாகக் கொண்டு, அவர்கள் விடுதலை அடைந்ததாக எண்ணிப் பாடி, தன் தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தினார்.
இந்திய வரலாற்றை கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தோமானால், தனது 15 வயதில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று காந்தியடிகளை தன் மன திடத்தால் வியக்க வைத்த தில்லையாடி வள்ளியம்மை, தேவதாசி முறையையும், குழந்தை திருமணத்தையும் ஒழிக்க பாடுபட்ட இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, விமானிக்கான உரிமத்தை பெற்ற முதல் இந்திய பெண்மணி, முதல் பெண் விமானி
சர்லா தக்ரால், இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற சிறப்பை பெற்ற அன்னை இந்திரா காந்தி, 1997ஆம் ஆண்டு விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய பெண்மணி கல்பனா சாவ்லா என நீண்ட வரிசை தெரிகிறது.
’மங்கள்யான்’ என்ற விண்கலத்தை செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பி சாதனை படைத்தது இந்தியா என்பது அனைவருக்கும் தெரிந்ததே, ஆனால், அதில் பணியாற்றிய பெண் விஞ்ஞானிகளை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலும் விண்வெளி தொடர்பான துறைகளில் ஆண்களே ஆதிக்கம் செலுத்துவர் என்ற கூற்றை மாற்றியவர்கள் அவர்கள்.
ஆகஸ்ட் 27, தனது 104-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பாரத பிரதமர் மோடி, சந்திரயான்- 3 திட்டத்தில் பெண் விஞ்ஞானிகள், பெண் பொறியாளர்கள், பெண் திட்ட இயக்குநர்கள், பெண் மேலாளர்கள் என பல்வேறு நிலைகளில் பெண்கள் திறம்பட பணியாற்றினர் எனக்கூறி தன் பாராட்டுக்களை வெளியிட்டார். சந்திரயான் -3 திட்டத்தின் வெற்றி, பெண் சக்தியின் எடுத்துக்காட்டு என்றும் கூறினார் அவர்.
விளையாட்டுத்துறையை எடுத்துக்கொண்டால் அன்றைய பி.டி.உஷா முதல் இன்றையை குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், சாய்னா நேவால், பி.வி.சிந்து, மித்தாலி ராஜ் என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
பெண்கள் சமத்துவ தினம் எப்படி உருவாகியது என்பதை பார்ப்பது சிறந்தது.
பெண்களுக்கான வாக்குரிமைச் சட்டம் அமெரிக்காவில் 1878ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது அது தோல்வியுற்றது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் பெண்கள் வாக்களிக்கும் உரிமைக்காக நீண்ட காலமாக கடினமாக போராடியதைத் தொடர்ந்து, 103 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 26, 1920இல், அமெரிக்க அரசியலமைப்பின் 19வது திருத்தம் இயற்றப்பட்டது. இது ஒன்றிய அரசும் மாநிலங்களும் பாலினத்தின் அடிப்படையில் வாக்களிக்கும் உரிமையை மறுப்பதைத் தடைசெய்தது. 1920ஆம் ஆண்டு அமெரிக்காவில், சட்டப்படி பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. 1973ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டு காங்கிரஸ் அவை, மற்றும் அமெரிக்காவின் 37வது ஜனாதிபதியான ரிச்சர்ட் நிக்சன் இணைந்து ஆகஸ்ட் 26ஐ பெண்கள் சமத்துவ தினமாக முறையாக அங்கீகரித்தனர். ஆண்களுக்கு நிகரான பெண்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும் என இந்த நாள் வலியுறுத்துகிறது.
இன்றும் உலகின் பல பகுதிகளில் உள்ள பெண்களும் ஆண்களுக்கு நிகரான உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். 2023ஆம் ஆண்டின் பெண்கள் சமத்துவ தினத்தின் கருப்பொருள் "சமத்துவத்தை ஏற்றுக்கொள்" என்பதாக இருந்தது. ஆம், உண்மையான பாலின சமத்துவத்தை நோக்கி நாம் இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதை அங்கீகரிக்க வேண்டிய நேரமிது.
செப்டம்பர் 5, உலக பிறரன்பு தினம்
செப்டம்பர் 5ஆம் நாள், அன்னை தெரேசாவின் மரண நாளை நினைவுகூர்ந்து, உலக பிறரன்பு நாளை சிறப்பிக்கவிருக்கின்றோம். அன்னைதெரசா அவர்கள் இயேசு விரும்பும் நற்செய்திப் பணியை மிக சிறப்பாக செய்து ஆண்டவரின் திருமுன் விலையேறப் பெற்றவரானார். நாமும், இத்தகைய பிறரன்பு பணிகளை செய்யவே. அழைக்கப்பட்டிருக்கிறோம். பிறரன்புப் பணிகள் இல்லாத விசுவாசம் கனிகளற்ற மரத்திற்குச் சமம், என்றவர் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அன்பிலிருந்து தொடங்கி அன்பை நோக்கியே செல்வதாக நம் பணிகள் இருக்கவேண்டும். இறைவனிலிருந்து துவங்கி இறைவனை நோக்கி நாம் செல்லவேண்டும். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதிலிருந்து துவங்கி, அன்பே கடவுள் என்பது வரை நம் பயணம் தொடர்கிறது. ஏனெனில், இறையன்பும் பிறரன்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிந்து செயல்படுதல் இயலாது. அதைத்தான் மிக அழகாக, அதிலும் எளிமையாக, அர்ப்பணத்துடன் நமக்குக் காட்டிச் சென்றவர் அன்னை தெரேசா.
உன் கடவுள் மீது அன்பு செலுத்து. உன்மீது நீ அன்புகூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக என்றுரைத்த இயேசுவின் வார்த்தைகளை வாழ்ந்துகாட்டியவர் அன்னை தெரேசா. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன என இறைமகன் உரைத்தாரென்றால், மற்றவையெல்லாம் இதனைக் கொண்டுதான் கட்டப்பட்டுள்ளன என்றுதானே அர்த்தம்.
சக மனிதரிடத்தில் கடவுள் குடிகொண்டிருக்கிறார் என்கிற உண்மையை உணராமலும், அவரை அன்புகூராமலும் இருக்கின்ற ஒருவர், இறைவனுக்கு எவ்வளவுதான் பலிகளை ஒப்புக்கொடுத்தாலும், அல்லது இறைவனின் திருநாமத்தை அனுதினமும் ஓதினாலும் அவர் கடவுளுக்கு உகந்தவராக இருக்கமுடியாது என்பதுதான் உண்மையிலும் உண்மை.
கடவுள்மீது நாம் கொள்ளும் அன்பு, நம்மை சக மனிதர்மீது அன்பு கொள்ளத் தூண்டவேண்டும். இல்லையென்றால் கடவுளை நாம் அன்பு செய்வதும் பொய்யாகிவிடும். ஏனெனில், இறைவன்மீது நாம் கொள்ளும் அன்பினை மற்றவரில் வெளிகாட்ட வேண்டும்.
மிகச்சிறியவராகிய என் சகோதரர் சகோதிரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன், என்று கூறப்பட்டுள்ளதும் இதனால்தான்.
விசுவாசத்துக்கும் பிறரன்புக்கும் இடையே இருக்கும் பிரிக்க முடியாத நெருங்கிய உறவை வலியுறுத்துவதாகவும் இந்த செப்டம்பர் 5ஆம் நாள் உள்ளது.
“கடவுளின் அன்புச்செயலைச் செய்ய எந்த தடை வந்தாலும் அதைத்தாண்டி சென்று பிறரன்பு பணி செய்வேன்” என்றார் அன்னை தெரசா. அப்படி ஓர் உறுதிபூண்டிருந்த அன்னை தெரேசா அவர்கள் இறைபதம் சேர்ந்த நாளை, உலக பிறரன்பு தினமாக சிறப்பிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
அன்பின் மீதும் சகிப்புத் தன்மையின் அடிப்படையிலும் அமைந்து நிற்கும் கிறிஸ்தவத்தில், ‘உன்னைப்போல் உன் அயலானையும் அன்பு செய்’, ‘உன் பகைவனுக்கும் அன்பு செய்’, ‘உன்னை ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு மறுகன்னத்தையும் காட்டு’, ‘பகைவனுக்கு அருள் செய்’ என்பன போன்ற போதனைகளைப் பார்க்கிறோம். இதிலிருந்து நமக்குத் தெரிவதெல்லாம், அன்பு என்பது சொல் அல்ல, செயல் என்பதேயாகும்.
உலக பிறரன்பு நாள் செப்டம்பர் 5ஆம் தேதி சிறப்பிக்கப்பட 2012ஆம் ஆண்டு ஐ.நா. பொது அவை முதன் முதலில் அறிவித்தது. ஆனால் ஹங்கேரியன் பாராளுமன்றம் இந்நாளை 2011ஆம் ஆண்டே பரிந்துரைத்து சிறப்பிக்கவும் தொடங்கிவிட்டது. உலகில் ஏழைகளின் துன்பத்தை அகற்ற அயராது உழைத்த அன்னை தெரேசாவை கௌரவிக்கும் விதமாக, அவர் இறந்த நாளை நினைவுகூரும் விதமாக இந்நாள் உருவாக்கப்பட்டது.
இறையன்பும் பிறரன்பும் ஒன்றே என்று செயல்படுத்திக் காட்டியவர் அன்னை தெரேசா. இறையன்பிலிருந்து பிறரன்பை கற்றுக்கொள்வதும், பிறரன்பிலிருந்து இறைவனை நோக்கிச் செல்வதும் அன்னை தெரேசா நமக்கு கற்றுத் தந்த பாடங்கள். செயல்படுத்துவோம். ஏழையின் சிரிப்பில், சிறப்பில் இறைவனைக் காண்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்