அருகருகே வாழும் நாம், அமைதியாக வாழ வேண்டும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
நம்மிடையே ஒற்றுமை மற்றும் அன்பின் உரையாடலை வலுப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், ஒரே இடங்களில், அருகருகே வாழும் நாம் அமைதியாகவும், எதிர்காலத்தை ஒன்றாக உருவாக்கி ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பவர்களாகவும் வாழ வேண்டும் என்று கூறியுள்ளார் முதுபெரும்தந்தை பியர்பத்திஸ்தா பிட்சாபாலா.
ஆகஸ்ட் 9 புதன்கிழமை ஹைஃபாவில் உள்ள ஸ்டெல்லா மாரிஸ் மடாலயத்தில், எருசலேம் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை தியோபிலஸ், இஸ்ரயேல், அரசுத்தலைவர் ஐசக் ஹெர்சாக், அவரது மனைவி மற்றும் பிரதிநிதிகள் சிலர் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார் எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை பேராயர் Pierbattista Pizzaballa.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையைச் சுற்றியுள்ள சவால்கள் மற்றும் கவலைகளைத் தீர்ப்பதற்கான அர்ப்பணிப்பை அரசுத்தலைவரின் வருகை எடுத்துரைக்கின்றது என்றும், ஆன்மிகத் தலைவர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து செயல்படுவதன் வழியாக சகிப்புத்தன்மை, உரையாடல், ஒற்றுமை ஆகியவற்றின் சூழ்நிலையை வளர்க்க முடிகின்றது என்றும் கூறியுள்ளார் முதுபெரும்தந்தை பிட்சாபாலா.
இணக்கமான சமுதாயத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடரும் அதே வேளையில் அண்மையில் சேதப்படுத்தப்பட்ட ஸ்டெல்லா மாரிஸ் மடாலயத்திற்கு அரசுத்தலைவரின் வருகையானது, துன்பங்களைச் சமாளிப்பதற்கும், இரக்கம் மற்றும் புரிந்துகொள்ளுதலுடன் எதிர்காலத்தை நோக்கிய பாதையைத் திறப்பதற்கான ஒன்றிணைந்த உறுதிப்பாட்டின் அடையாளமாகவும் உள்ளது என்று கூறியுள்ளார் முதுபெரும்தந்தை பிட்சாபாலா.
தன் மனைவி மற்றும் பிரதிநிதிகள் குழுவுடன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இஸ்ரயேல் அரசுத்தலைவர் ஐசக் ஹெர்சாக் அவர்கள், அனைத்து மதத்தினரையும் நாம் மதிக்க வேண்டும் என்றும், உன்னை போல உன் அருகில் உள்ளவர்களையும் அன்பு செய் என்ற விவிலிய வரிகளையும் மேற்கோளிட்டு உரையாற்றினார்.
மேலும், மத சுதந்திரத்தை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும், இஸ்ரேலில் மதம் மற்றும் வழிபாட்டு சுதந்திரத்தை முழுமையாக பாதுகாப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த இஸ்ரேல் அரசு மற்றும் இஸ்ரேல் மக்கள் சார்பாக தான் வந்துள்ளதாகவும் எடுத்துரைத்துள்ளார் அரசுத்தலைவர் ஐசக்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்