விண்ணக மரியா திருஉருவம் மங்கோலிய தலத்திருஅவையின் அடையாளம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருத்தந்தை மங்கோலியா நாட்டிற்கு வருவது கடவுளின் அடையாளாமாகக் கருதப்படுகின்றது என்றும், விண்ணக அன்னையின் திருஉருவம் மங்கோலியத் தலத்திருஅவையின் அடையாளம் என்றும் கூறியுள்ளார் அருள்பணி Leung Kon Chiu.
ஆகஸ்ட் மாத இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மங்கோலியாவிற்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் அங்குள்ள தலத்திருவை ஆலயம் சலேசியசபை அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகளின் பணி, விண்ணக அன்னையின் திருஉருவம் ஆகியவைக் குறித்து பீதேஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள காணொளியில் இவ்வாறு கூறியுள்ளார் சலேசியசபை அருள்பணியாளர் Leung Kon Chiu.
ஏறக்குறைய 18 ஆண்டுகள் மங்கோலியாவில் மறைபரப்புப்பணியாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஹாங்காங்கைச் சார்ந்த சலேசிய சபை அருள்பணியாளர் Leung Kon Chiu அவர்கள் கூறுகையில், Madre Celeste என்று திருத்தந்தையால் அதிகாரப்பூர்வமாக பெயரிட்டு அழைக்கப்பட்ட விண்ணக அன்னை மரியாவின் திரு உருவமானது தர்கான் என்னும் நிலப்பரப்பில் மங்கோலிய பெண் ஒருவரால் பல ஆண்டுகளுக்கு முன்பாகக் கண்டெடுக்கப்பட்டது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
தன் வீட்டின் அழகான பகுதியில் அன்னையின் திருஉருவத்தைப் பாதுகாத்து வந்த அப்பெண்ணிடமிருந்து சலேசிய சபை அருள்சகோதரி ஒருவர் 2013ஆம் ஆண்டு அதனை பெற்றார் என்றும், உலன்பதார் உயர்மறைமாவட்ட ஆயரான கர்தினால் ஜோர்ஜியோ மரெங்கோ, அன்னையின் திரூருவத்தை ஆலயத்தில் வைக்கும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆலயத்தில் வைக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் விண்ணக அன்னை (Madre celeste) என்று பெயர் சூட்டப்பட்டு வணங்கப்பட்டு வந்தது என்றும், அதனைத் தொடர்ந்து, கர்தினால் மரேங்கோ அவர்களின் பரிந்துரையின்படி, 2022 டிசம்பர் 8 முதல் 2023 டிசம்பர் 8 வரை அன்னையின் ஆண்டாக மங்கோலிய திருஅவை சிறப்பித்து வருகிறது என்றும் கூறினார் சலேசிய சபை அருள்பணியாளர்.
விண்ணக அன்னையின் மீது அளவற்ற அன்பையும் பாசத்தையும் ஈர்ப்பையும் மங்கோலிய மக்கள் பெற்றுள்ளனர் என்று எடுத்துரைத்த அருள்பணி Chiu அவர்கள், சலேசிய சபை அருள்பணியாளர்கள் வருவதற்கு முன்பே அவ்வன்னையின் பக்தி மங்கோலியாவில் இருந்து வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மங்கோலியாவின் ஆயர் பாடில்லா அவர்களின் அழைப்பிற்கிணங்க கல்விப்பணியாற்ற 2001 ஆம் ஆண்டு சலேசிய சபை அருள்பணியாளர்கள் மங்கோலியாவிற்கு வருகை தந்தனர் என்றும், தற்போது பள்ளி கல்லூரி, தொழிற்கல்வி என பல்வேறு முன்னேற்றங்களை எடுத்து வருவதோடு வேளாண் தொழில் பற்றிய அறிவினை மாணவர்களுக்கும் தெருவோர சிறார்களுக்கும் அளித்து அவர்களின் வாழ்விற்கு வழி செய்வதாகவும் கூறியுள்ளார் அருள்பணி Chiu.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்