இத்தாலியக் கடற்கரையில் நிகழ்ந்த படகு விபத்தில் 41 பேர் உயிரிழப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஐரோப்பாவை அடையும் முயற்சியில் துனிசியாவிலிருந்து புறப்பட்ட படகு ஒன்று இத்தாலிய கடற்கரைக்கு அருகில் கவிழ்ந்ததில் 41 பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து இத்தாலிய கடற்பகுதியில் மற்றொரு சோகம் நிகழ்ந்துள்ளது. இவ்விபத்தில் நான்கு பேர் மட்டுமே தப்பினர்.
ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளிலிருந்து 45 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு இத்தாலிய தீவான லம்பேடுசாவில் மூழ்கியது. அண்மைய ஆண்டுகளில் அதன் நீர் திறந்த கல்லறையாக மாறியுள்ளது. வட ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்தோர் மேற்கொண்ட பயணத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 1,800 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோடை மாதங்களில் கடல்கள் சீற்றமின்றி மிகவும் அமைதியாக இருப்பதால் எண்ணற்ற புலம்பெயர்ந்தோர் சிறந்த வாழ்க்கைக்காக கடல் கடந்து வர விரும்பு கின்றனர். இந்நிலையில், துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸில் இருந்து புறப்பட்ட 41 புலம்பெயர்ந்தோர் இவ்விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஐவரி கோஸ்ட் மற்றும் கினியா கொனாக்ரியைச் சேர்ந்த அவர்களில் நான்கு பேர் மட்டும், ஆகஸ்ட் 9, புதன்கிழமை கரையை அடைந்துள்ளனர்.
இவ்விபத்தில் தப்பிப்பிழைத்தவர்கள் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண். இவர்களில் மூன்று குழந்தைகள் உட்பட 45 பேரை ஏற்றிக்கொண்டு, கடந்த வாரம் வியாழனன்று, அவர்களது படகு ஸ்ஃபாக்ஸில் இருந்து புறப்பட்டது என்றும், ஆனால், புறப்பட்ட சில மணிநேரங்களிலேயே அது மூழ்கியது என்றும், அவர்கள் மீட்புப் பணியாளர்களிடம் தெரிவித்தனர்.
படகில் பயணம் செய்த இப்புலம்பெயர்ந்தோர் அனைவரும் கடலுக்குள் மூழ்கி இறந்துவிட்டனர் என்றும் இவர்களில் 15 பேர் மட்டுமே உயிர்காக்கும் மிதவைச் சட்டைகளை (life saving jacket) வைத்திருந்தனர், ஆனாலும் அவர்களும் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாகத் தப்பிழைத்தவர்கள் கூறினார்.
லம்பேடுசாவிலிருந்து 80 மைல் (130 கிமீ) தொலைவில் உள்ள துறைமுக நகரமான ஸ்ஃபாக்ஸ், ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் சிறந்த வாழ்க்கையைத் தேடும் புலம்பெயர்ந்தோருக்கு ஒரு புகழ்பெற்ற நுழைவாயிலாக அமைந்துள்ளது என்று துனிசிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
அண்மைய நாட்களில், இத்தாலிய ரோந்துப் படகுகள் மற்றும் தொண்டு குழுக்கள் லம்பேடுசாவிலிருந்து வந்த மேலும் 2,000 பேரை மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்