மகாராஸ்டிராவில் சேதப்படுத்தப்பட்ட கத்தோலிக்க வழிபாட்டுத்தலம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நமக்கு அடுத்திருப்போருடன் நல்லிணக்கத்தைப் பேணவும், இந்தியச் சமுதாயத்தில் அமைதியை நிலைநாட்டவும் அனைவரையும் தான் கேட்டுக்கொள்வதாக அறிக்கையொன்றில் கூறியுள்ளார் பேராயர் Felix Machado.
இந்தியாவில் ஆகஸ்ட் 15 செவ்வாயன்று, கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பு அதாவது ஆகஸ்ட் 11, வெள்ளியன்று, மகாராஷ்டிரா மாநிலத்தின் வாசை என்ற இடத்தில் உள்ள Gonsalo Garcia பங்குத்தளத்தின் வழிபாட்டுத்தலம் சேதப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இவ்வாறு கூறியுள்ளார் பேராயர் மச்சாடோ.
இச்சம்பவத்தால் வாசை பங்குத்தளத்தின் மற்றும் மறைமாவட்டத்தின் கத்தோலிக்க நம்பிக்கையாளர்களின் மத உணர்வுகள் காயப்படுத்தப்பட்டுள்ளதை தான் உணர்ந்துள்ளதாகவும், இத்தருணத்தில் அடுத்திருப்போர் அனைவருடனும் அமைதியைப் பேணுமாறு அனைவரையும் தான் கேட்டுக்கொள்வதாகவும் அவ்வறிக்ரையில் கேட்டுக்கொண்டுள்ளார் பேராயர் மச்சாடோ.
மேலும் தான் காவல்துறை ஆணையருடன் தொடர்பில் இருப்பதாகவும், அவரது திறமையான தலைமையின்கீழ் காவல்துறை முழுமையான விசாரணையில் ஈடுபட்டுள்ளது என்றும் கூறியுள்ள பேராயர் மச்சாடோ அவர்கள், இந்த நெருக்கடியான வேளையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுமாறு விசுவாசிகள் அனைவரையும் தான் கேட்டுக்கொள்வதாகவும், குறிப்பாக, யாரையும் சந்தேகிப்பது அல்லது குற்றம் சாட்டுவது, அல்லது சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்புவது அல்லது பொதுவில் ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிடுவது போன்றவற்றைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சமுதாயத்தில் நல்லிணக்கமம் அமைதியும் நிலவ தொடர்ந்து இறைவேண்டல் செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் பேராயர் மச்சோடா
இதற்கிடையில் சேதப்படுத்தப்பட்டுள்ள ஆலயத்தின் வாயில்களுக்கு வெளியே பங்கு இறைமக்கள் அனைவரும் ஒன்றுகூடி இறைவேண்டல் செய்ததாகவும், பின்னர் அனைத்தும் சரிசெய்யப்பட்டு சனிக்கிழமை முதல் கொண்டாட்டங்களை மீண்டும் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார் அப்பங்குதளத்தின் பங்குத்தந்தை அருள்பணியாளர் Peter Almeida
ஆகஸ்ட் 11, வெள்ளிக்கிழமை பிற்பகலில், பங்குத்தந்தை அருள்பணியாளர் Peter Almeida அவர்கள் ஆலயத்திற்குள் நுழைந்தபோது, திருப்பலி பீடம், அன்னை மரியாவின் திருவுருவம், திருமுழுக்குத் தொட்டி ஆகியவை சேதப்படுத்தப்பட்டு இருந்ததுடன், அனைத்துப் புனிதப் புத்தகங்களும் தரையில் சிதறிக் கிடந்ததையும் கண்டறிந்தார். (ASIAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்