மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் நடவடிக்கை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்தியாவின் உச்ச நீதிமன்றம், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்கவும், நிவாரண நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் மூன்று ஓய்வுபெற்ற பெண் நீதிபதிகள் கொண்ட உயர் அதிகாரம் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது
வடகிழக்கு மாநிலத்தை ஆளும் மற்றும் டெல்லியில் மத்திய அரசுக்குத் தலைமை தாங்கும் இந்து சார்பு பாரதிய ஜனதா கட்சி, மே 3-ஆம் அன்று தொடங்கிய வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ள வேளை, ஆகஸ்ட் 7, இத்திங்களன்று, இந்தியாவின் உச்ச நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கின்றது.
ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல் இந்தக் குழுவின் தலைவராக இருப்பார் என்றும், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ஷாலினி பன்சால்கர் ஜோஷி மற்றும் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஆஷா மேனன் ஆகிய இரு ஓய்வு பெற்ற நீதிபதிகளும் இதன் உறுப்பினர்களாக இருப்பர் என்றும் அச்செய்தி தெரிவிக்கின்றது
அமைதியை மீட்டெடுக்க மாநில அரசு எதையும் செய்யாத நிலையில் உச்ச நீதிமன்றதின் இந்த உத்தரவு ஒரு பெரிய முயற்சியாகும் என்று தனது பெயரை வெளியிட விரும்பாத தலத்திருஅவையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதுடன், பெண் நீதிபதிகள் அனைவரும் பிரச்சனைக்குரிய மாநிலத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதால், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்கள் இப்போது முன் வந்து தங்கள் புகார்களைப் பதிவு செய்து அதற்கான தீர்வுகளைத் தேடமுடியும் என்று தான் நம்புவதாகவும் யூகான் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதி D Y Chandrachud தலைமையிலான உச்ச நீதிமன்ற குழு, நிவாரணப் பணிகள், மறுசீரமைப்பு நடவடிக்கைகள், மறுவாழ்வு மற்றும் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை மீட்டெடுப்பது ஆகியவற்றைக் கண்காணிக்க வேண்டும் என்று மூவர் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளதுடன், இது சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கை உணர்வை மீட்டெடுப்பதற்கும், மக்கள் மத்தியில் நம்பிக்கை உணர்வை வளர்ப்பதற்கும் எடுக்கப்பட்ட முயற்சியாகும் என்று அந்த உத்தரவில் கூறியுள்ளது. (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்