தேடுதல்

எதியோப்பிய புலம்பெயர்ந்தோர் எதியோப்பிய புலம்பெயர்ந்தோர்  

அம்ஹாரா பகுதியில் அமைதி நிலவ எத்தியோப்பிய ஆயர்கள் அழைப்பு!

மனம்திரும்புதல் வழியாக, எத்தியோப்பியாவில் நீதியும் அமைதியும் நிலவ வேண்டி, நம்பிக்கையும் நல்லெண்ணமும் கொண்ட அனைவருக்கும் அழைப்புவிடுக்கிறோம் : எத்தியோப்பிய ஆயர்கள்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

எத்தியோப்பியாவின் கத்தோலிக்க ஆயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், வடக்கு அம்ஹாரா பகுதியில் ஏற்பட்டுள்ள ஒரு புதிய மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

அங்குக் கடந்த வாரம் இராணுவத்தினருக்கும் உள்ளூர் போராளிகளுக்கும் இடையே வன்முறை மோதல்கள் வெடித்துள்ள நிலையில் இத்தகைய அழைப்பொன்றை விடுத்துள்ள அந்நாட்டு ஆயர்கள், ஆப்பிரிக்க நாடு நீடித்த வறட்சி காரணமாக கடுமையான உணவுப் பாதுகாப்பை எதிர்கொண்டு வருகின்றது வரும் சூழலையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடக்கு அம்ஹாரா மாநில இராணுவத்திற்கும் உள்ளூர் ஆயுதமேந்திய போராளிகளுக்கும் இடையில் நிலவும் இப்புதிய மோதலுக்கு அமைதியான தீர்வைக் காணும் முயற்சிகளை துரிதப்படுத்துமாறு மத்திய அரசிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர் அநாட்டு ஆயர்கள்.

ஆகஸ்ட் 7, திங்களன்று, வெளியிடப்பட்ட இவ்வறிக்கையில், மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் நிகழும் 15 நாள் உண்ணாநோன்பை எடுத்துக்காட்டி இவ்வழைப்பை விடுப்பதாக ​​Fides செய்தி நிறுவனத்திடம் கூறிய ஆயர்கள், இருதரப்பினரும் மோதலைக் கைவிட்டு உரையாடல் வழியாக அவர்களின் கருத்துவேறுபாடுகளுக்கு அமைதியானதொரு தீர்வைக் காணுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதேவேளையில், மனம்திரும்புதல் வழியாக, எத்தியோப்பியாவில் நீதியும் அமைதியும் நிலவ வேண்டி,  நம்பிக்கையும் நல்லெண்ணமும் கொண்ட அனைவருக்கும் அழைப்புவிடுப்பதாகவும் அவ்வறிக்கையில் கூறியுள்ளனர்.

Tigray நாட்டில் அமைதிக்கான இறுதி பேச்சுவார்த்தை எட்டப்பட்டபோது, மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர் என்று தெரிவித்த ஆயர்கள், இருப்பினும், அதன் முடிவுகளை நாம் சுவைப்பதற்கு முன்பே மற்றொரு போர் தொடங்கியிருப்பதை அறிந்து தாங்கள் மிகவும் வேதனையடைவதாகவும் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 2022-ஆம் ஆண்டு அண்டை நாடான Tigray-வில் இரண்டு ஆண்டு உள்நாட்டுப் போருக்குப் பிறகு, இந்த மோதல் எத்தியோப்பியாவின் மிகத் தீவிரமான பாதுகாப்பு நெருக்கடியாக மாறியுள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 August 2023, 14:05