இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கையைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
நம்பிக்கையை இழக்காதீர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கையைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள் என்றும், ஆழ்ந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ள சிலே தீவிபத்து புரிந்துகொள்ள முடியாதது என்றும் கூறியுள்ளார் ஆயர் Oscar García.
ஆகஸ்ட் 22 செவ்வாய்க்கிழமை இரவு, தெற்கு சிலேயில் உள்ள Cañete புனித வழிப்பயண அன்னை மரியா (Santa María del Camino) சிற்றாலயம் தீவைத்து தாக்கப்பட்டதைத் தொடர்ந்து உள்ளூர் செய்திகளுக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார் சிலே நாட்டின் Concepción உயர் மறைமாவட்ட துணை ஆயர் Oscar García.
ஏறக்குறைய 80 பேர் அமரும் அளவிற்கு இடப்பரப்பைக் கொண்ட இச்சிற்றாலயம், மக்கள் அனைவரும் ஒன்று கூடி செபிக்கும் இடமாகவும், இதன் ஒரு பகுதி மனிதாபிமான உதவிப் பொருள்கள் பாதுகாக்கப்படும் இடமாகவும் இருந்து வந்த நிலையில், அடையாளம் தெரியாத நபர்களால் இச்சிற்றாலயம் தீவைத்து தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் ஆயர் García.
மேலும், அனைத்து உதவிப் பொருட்களும் சாம்பலாகிப் போயுள்ள நிலையிலும் தொடர்ந்து பணியாற்றுவதற்கும், மீண்டும் எழுந்து நின்று வலிமையைப் பெற விடாமுயற்சியுடன் இருக்கவும் நாம் நம்பிக்கையுடன் இருந்தால் மட்டுமே முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார் ஆயர் García.
இறைவனின் அருளால் தீவிபத்தில் மனிதர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், சேதமடைந்த சிலே நாட்டின் Cañete சிற்றாலயத்தை விரைவில் மறுசீரமைப்பதற்கான முயற்சிகள் விரைவில் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் ஆயர் García.
இச்சம்பவத்தால் வருத்தமடைந்த உள்ளூர் கத்தோலிக்க சமூகத்தின் தலைவர் ரெனால்டோ சில்வா கூறியபோது, ஏறக்குறைய 40 ஆண்டுகாலமாக ஒரு கிறிஸ்தவ சமூகமாக மக்கள் ஒன்றிணையும் இடமாகவும், சமூகப் பணிகளுக்கான மையமாகவும் இருந்த ஆலயம் தாக்கப்பட்டது மிகவும் வருத்தமளிக்கின்றது என்றும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்