காட்டுத்தீ பாதிப்பிற்கு உதவும் கத்தோலிக்க அறக்கட்டளை
மெரினா ராஜ் – வத்திக்கான்
மவூய் தீவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டு, கடற்கரையில் புகலிடம் தேடும் ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள், உணவு மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்ய நன்கொடைகளை வழங்குமாறு Honolulu மறைமாவட்டத்தில் உள்ள ஹவாய் கத்தோலிக்க அறக்கட்டளைகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஆகஸ்ட் 9, புதன்கிழமை இரவு மவூய் தீவில் ஏற்பட்ட தீவிபத்தினால் ஏறக்குறைய 36 பேர் உயிரிழந்தும் பலர் காயமடைந்தும் இருப்பதாக Maui தீவுஅதிகாரிகள் அறிவித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தலத்திருஅவையின் அறக்கட்டளை அமைப்புக்கள் செயல்பட்டு வருகின்றன.
பெரிய தீவு என அழைக்கப்படும் ஹவாய் தீவிலும் காட்டுத்தீ பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆகஸ்ட் 10 வியாழனன்றும் தீ ஏற்பட்டுள்ளதாகவும் தீயினை அணைக்க மீட்புப்படையினரும் தீயணைப்பு வீரர்களும் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வரலாற்று நகரமான லஹைனாவை பாதித்த காட்டுத்தீயினால் ஏறக்குறைய 11,000 பேர் நகரை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும், 271க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்து அழிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார் ஹவாய் அரசுத்தலைவர் ஜோஷ் கிரீன்.
மவுய் தீவில் ஏற்பட்ட அழிவுகரமான காட்டுத்தீயால் துயரத்தையும் மனவேதனையையும் அனுபவிக்கும் மக்களை நினைவுகூர்வதாகவும், மக்களுக்குத் தேவையான அடிப்படை பொருட்களை வழங்குவதில் சிறப்பாக செயலாற்றுவதாகவும் ஹவாய் கத்தோலிக்க அறக்கட்டளையானது இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
"நம்பிக்கையின் சமூகமாக, தேவையிலிருப்பவர்களுக்கு உதவவும், இந்த துயரமான சோகத்தை சமாளிக்கவும், மீட்பு முயற்சிகள் வழியாக அம்மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் உதவ முடியும் என்றும் கூறியுள்ள அவ்வறக்கட்டளை அமைப்பு, இச்சவாலான நேரத்தில் நாம் ஒன்றிணைந்து செல்லும்போது வெற்றியை அடையமுடியும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
லஹைனாவில் உள்ள மரியா லனகிலா கத்தோலிக்க ஆலயம், மறைமாவட்டத்தைச் சார்ந்த திருஇருதய பள்ளி, தேசிய பூங்கா ஆகியவை காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதுபற்றிய உறுதியான செய்திகள் ஹொனலுலு மறைமாவட்டத்தால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரியவருகின்றது. ( UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்