ரேடியோ வெரித்தாஸ் வானொலிச்சேவையின் ஆசிய கிளைகள் ரேடியோ வெரித்தாஸ் வானொலிச்சேவையின் ஆசிய கிளைகள் 

ஆசியா வானொலிச் சேவையின் இடைநிறுத்தம் இரத்து

ரேடியோ வெரித்தாஸ் எனும் ஆசிய வானொலிச் சேவை, ஆசியா கண்டம் முழுவதற்குமான ஒரு கத்தோலிக்க வானொலி நிலையமாகும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஆசிய கண்டம் முழுவதும் உள்ள கத்தோலிக்க மக்களுக்கு பல்வேறு மொழிகளில் நம்பிக்கை அளிப்பதாகவும், நற்செய்திக்குக் குரல் கொடுப்பதாகவும் செயல்பட்டு வரும் ஆசியா ரேடியோ வெரித்தாஸ் என்னும் வானொலி சேவையின் இடைநிறுத்தத்தை இரத்து செய்வதாக அறிவித்துள்ளார் கர்தினால் சார்லஸ் மாங் போ.

பிலிப்பீன்ஸில் உள்ள மணிலாவில் ரேடியோ வெரித்தாஸ் எனும் வானொலிச் செயல்பாடுகளின் இடைநிறுத்தம் இரத்து செய்யப்படுவது குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு தனது கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார் ஆசிய ஆயர்கள் பேரவைக் கூட்டமைப்பின் தலைவரும் மியான்மாரின் யங்கூன் உயர்மறைமாவட்டப் பேராயருமான கர்தினால் சார்லஸ் மாங் போ.

ரேடியோ வெரித்தாஸ் எனும் ஆசிய வானொலிச் சேவை, ஆசியா கண்டம் முழுவதற்குமான ஒரு கத்தோலிக்க வானொலி நிலையமாகும். கத்தோலிக்கர்கள் அதிகளவில் உள்ள பிலிப்பீன்ஸை தளமாகக் கொண்டு ஆங்கிலம் உள்ளடக்கிய ஏறக்குறைய 20 ஆசிய மொழிகளில் ஒளிபரப்பப்படும் இவ்வானொலி ஆசியாவில் கிறிஸ்தவத்தின் குரல் என்றும் அழைக்கப்படுகின்றது.

RVA தொடர்பான கூடுதல் முடிவுகளுக்காக அதன் அறிக்கை மற்றும் பரிந்துரைகளை FABC ஆசிய கத்தோலிக்க ஆயர் பேரவை மத்திய குழுவிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும், வானொலிச் சேவையுடன் தொடர்புடைய அனைவரையும் முழு மனதுடன் தங்கள் சேவைகளைத் தொடரக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் கர்தினால் போ.

ஆசியாவில் உள்ள தலத்திருஅவை மற்றும் பங்குத்தளங்களில் வாழும் நம்பிக்கையுள்ள மக்களுக்குக் கடவுளின் ஆசீரை, வேண்டுவதாகத் தெரிவித்துள்ள கர்தினால் போ அவர்கள், வானொலிச் சேவை வழியாக ஆசியாவின் அனைத்து மக்களுக்கும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை உண்மையாகவும் அச்சமின்றியும் அறிவிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் புலனாய்வாளர்கள் குழுவின் கூற்றுப்படி, மியான்மார் இராணுவத்தாரால் போர்க்குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் முறையாக கவனிக்கப்பட்டு, நிலுவையில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணப்படுவதால், ரேடியோ வெரித்தாஸ் ஆசியாவின் (RVA) முக்கியமான பணியை கருத்தில் கொண்டு தொடர்ந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார் கர்தினால் போ.

FABC-ஆல் நியமிக்கப்பட்ட ஆயர்கள் குழு "RVA இன் நிலுவையில் உள்ள சில பிரச்சனைகளை ஆராய நியமிக்கப்பட்டுள்ளதாகவும், "FABC OSC, PREIC ஆகியவற்றின் உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள், பங்குதாரர்கள், RVA தலைமைத்துவ உறுப்பினர்கள், மொழிச்சேவையில் ஈடுபடுபவர்கள் ஆகியோரிடம் உரையாடியதாகவும் எடுத்துரைத்துள்ளார் கர்தினால் போ.

தகவல் தொடர்புப் பணிகள் வழியாக ஆசியாவில் நற்செய்தியை அறிவிப்பதில் RVA இன் (ரேடியோ வெரித்தாஸ் ஆசியா) பணியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார் கர்தினால் போ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 August 2023, 12:09