தடம் தந்த தகைமை - சேபா நாட்டு அரசியின் வருகை
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஆண்டவரின் பெயரை முன்னிட்டு, சாலமோன் அடைந்திருந்த புகழைப் பற்றிச் சேபா நாட்டு அரசி கேள்வியுற்றுக் கடினமான கேள்விகள் மூலம் அவரைச் சோதிக்க வந்தார். அவர் பரிவாரங்களோடும், நறுமணப் பொருள், மிகுதியான பொன், விலையுயர்ந்த கற்கள், ஆகியவற்றைச் சுமந்துவந்த ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்து சேர்ந்தார். அவர் சாலமோனிடம் தம் மனத்திலிருந்த கேள்விகள் அனைத்தையும் வெளிப்படுத்தினார். சாலமோன் அவருடைய கேள்விகளுக்கெல்லாம் விடை கூறினார். அவர் கேட்டவற்றுள் பதிலளிக்க இயலாதபடி எதுவும் அரசருக்குப் புதிராகத் தோன்றவில்லை. சேபாவின் அரசி, சாலமோனுக்கிருந்த பல்வகை ஞானம், அவர் கட்டியிருந்த அரண்மனை, அவர் உண்டு வந்த உணவு வகைகள், அவருடைய அலுவலரின் வரிசைகள், பணியாளர்களின் சுறுசுறுப்பு, அவர்களுடைய சீருடை, பானம் பரிமாறுவோரின் திறமை, ஆண்டவரின் இல்லத்தில் அவர் செலுத்திய எரிபலிகள் ஆகியவற்றைக் கண்டு பேச்சற்றுப் போனார்.
அவர் அரசரை நோக்கிக் கூறியது: “உம்முடைய செயல்களையும் ஞானத்தையும் பற்றி என் நாட்டில் நான் கேள்விப்பட்டது உண்மையே எனத் தெரிகிறது. நான் இங்கு வந்து அவற்றை நேரில் காணும் வரை, அச்செய்திகளை நம்பவில்லை. இப்பொழுதோ இங்குள்ளவற்றில் பாதியைக் கூட அவர்கள் எனக்குச் சொல்லவில்லையென அறிகிறேன். உண்மையில் நான் கேள்விப்பட்டதை விட, உம் ஞானமும் செல்வமும் மிகுதியாய் இருக்கின்றன. உம்முடைய மனைவியர் நற்பேறு பெற்றோர்! எப்போதும் உமக்குப் பணிபுரிந்து உம்முடைய ஞானம் நிறைந்த மொழிகளைக் கேட்கும் உம்முடைய பணியாளரும் நற்பேறு பெற்றவரே! உம்மீது பரிவு கொண்டு உம்மை இஸ்ரயேலின் அரியணையில் அமர்த்திய உம் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! ஆண்டவர் இஸ்ரயேலின் மீது என்றென்றும் அன்பு கொண்டுள்ளதால், அவர்களுக்கு நீதி நியாயம் வழங்க உம்மை அரசராக ஏற்படுத்தியுள்ளார்.” அவர் ஏறத்தாழ நாலாயிரத்து எண்ணூறு கிலோ பொன், ஏராளமான நறுமணப் பொருள்கள், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை அரசருக்கு அளித்தார். சேபாவின் அரசியிடமிருந்து வந்தது போல, அத்துணை நறுமணப் பொருள்கள் அரசர் சாலமோனுக்கு அதன் பிறகு வந்ததே இல்லை. ஓபீரிலிருந்து பொன்னைக் கொணர்ந்த ஈராமின் கப்பல்கள் அங்கிருந்து வாசனை மரங்களையும் விலையுயர்ந்த கற்களையும் கொண்டுவந்தன. அவ்வாசனை மரங்களால் அரசர் ஆண்டவரின் இல்லத்திற்கும் அரண்மனைக்கும் ஊன்றுகால்களையும் பாடகருக்கு இசைக் கருவிகளையும் யாழ்களையும் செய்தார். அத்தகைய வாசனை மரங்கள் அதன்பின் அங்கு வந்ததுமில்லை; இன்றுவரை காணப்படவுமில்லை. அரசர் சாலமோன் சேபாவின் அரசிக்கு ஏராளமான பரிசுகள் கொடுத்ததுமன்றி, அவர் விரும்பிக் கேட்டவற்றையெல்லாம் கொடுத்தார். அதன்பின் அவர் தம் பணியாளர்களோடு தம் சொந்த நாட்டுக்குத் திரும்பிப்போனார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்