பல்சுவை – இந்தியாவின் திருத்தூதர் புனித தோமா
மெரினா ராஜ் - வத்திக்கான்
உண்மையின் வார்த்தைகளை உலகிற்குச் சொல்லுங்கள் நற்செய்தி அறிவித்தலை நன்றே தொடங்குங்கள் என்ற உயிர்த்த இயேசுவின் உன்னத வார்த்தைகளுக்கு செவிசாய்க்க சீடர்களோடு அன்று உடன் இல்லை புனித தோமா. ஆண்டவர் இயேசுவை தானும் காண வேண்டும் என்ற ஆர்வத்தால் அவரைக் கண்டதாக எடுத்துரைத்த சீடர்களின் வார்த்தைகளை முழுமையாக நம்ப மறுக்கின்றார் தோமா. நம்பிக்கையில்லாதவர், சந்தேகப்பேர்வழி என்று பலவாறு கருதப்படும் தோமா நம்பிக்கையில் ஆமை போல் மிகவும் பின்தங்கியவர் என்று கருதப்பட்டார். குறைவான நம்பிக்கையால் குறுகிய அவர், சந்தேகத்தின் சொந்தக்காரராக சீடர்கள் சொன்னதையும் நம்பாமல் இருந்தார். தன் இரு கண்களால் கண்டு, விரல்களால் அவரது காயத்தழும்பைத் தொட்டுப்ப்பார்த்தால் அன்றி தான் எதையும் நம்பப் போவதில்லை என்று உறுதியளித்தார். அவரது நம்பிக்கையை வலுப்படுத்த இறைமகன் இயேசு, மீண்டும் காட்சியளித்து, வா வந்து என் கைகளின் காயங்களை உன் விரல்களால் தொடு. என் விலாவின் காயத்தினுள் உன் கைகளை இடு. நம்பு நம்பிக்கைக் கொள் என்று அழைப்புவிடுத்து அவரின் பணிவாழ்வுக்கு ஊக்கம் அளிக்கின்றார். என் காயங்களை தழுவி, உன் மனச் சாயங்களைக் கழுவிக்கொள் என்கின்றார். புனித தோமா உயிர்த்த இயேசுவை நம்பி, என் ஆண்டவரே, என் தேவனே என்று உற்சாகத்துடன் கூறினார். உன் கண்கள் சொன்னதால் நம்பினவன் நீ, ஆனால் இதயம் சொல்வதை நம்புகிறவர்களோ பேறுபெற்றவர்கள். கண்டதால் நீ நம்பிக்கைக் கொண்டாய் காணாமல் விசுவசிப்பவன் பேறுபெற்றவன் என்றார் இயேசு. அவரது வார்த்தைகளுக்கிணங்க, இயேசுவைக் கண்ணால் காணாத பல்வேறு மக்களுக்கு தான் இயேசுமேல் கொண்ட நம்பிக்கையினால் நற்செய்தியை உறுதியுடன் அறிவித்தார். கடல் கடந்து இந்தியாவிற்கு வந்து நமக்கு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை எடுத்துரைத்தார். இத்தகைய புனித தோமா வழியாகக் கிறிஸ்துவை கிறிஸ்தவத்தை இதயத்தால் நம்பி ஏற்றவர்கள் நாம். அவ்வகையில் நாம் எல்லாம் பேறுபெற்றவர்களே.
ஜூலை 3ஆம் தேதி இந்தியாவின் திருத்தூதர் என்று அழைக்கப்படும் புனித தோமாவின் திருவிழாவினை சிறப்பிக்கும் வேளையில் அவரைப் பற்றிய சிறப்புக் கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் திரு இராமநாதன். சென்னையை சார்ந்த திரு இராமநாதன் அவர்கள், தத்துவயியல் மற்றும் சமயம் பற்றிய படிப்பில் முதுகலையையும், BE பொறியியல் பட்டப்படிப்பையும் (Mechanical engineering MA philosophy and religion) படித்து முடித்து தற்போது மென்பொருள் பணியாளராகப் பணியாற்றிக்கொண்டிருப்பவர். மேலும் தோமா வழி வந்த கிறிஸ்தவம் குறித்த ஆய்வாளராகவும் அதனைப் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் திகழும் திரு இராமநாதன் அவர்களை இந்தியாவின் திருத்தூதர் புனித தோமா பற்றிய செய்திகளை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்