தேடுதல்

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 

திருத்தந்தையர் வரலாறு – புனித இரண்டாம் ஜான் பால் - நிறைவுப்பகுதி

கடந்த காலத்தை நன்றியுடன் நோக்குவோம், நிகழ்காலத்தை பேரார்வத்துடன் வாழ்வோம், வருங்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்குவோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

1978ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் நாள் திருஅவையின் இவ்வுலகத் தலைவராகப் பொறுப்பேற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், புனித பேதுரு மற்றும் ஒன்பதாம் பயஸுக்குப்பின் வரலாற்றில் நீண்ட காலம் திருத்தந்தையாக வழிநடத்தியவர்களுள் மூன்றாம் இடத்தை பிடித்தவராக இருப்பது மட்டுமல்ல, தம் தாய்மொழியான போலந்து மொழி உட்பட, இத்தாலியம், பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம், ஸ்பானியம், போர்த்துக்கீசியம், உக்ரைன் மொழி, இரஷ்யம், குரோவேசிய மொழி, எஸ்பெராண்டோ, பண்டைய கிரேக்கம் (Ancient Greek), இலத்தீன் ஆகிய மொழிகள் இவருக்குத் தெரிந்திருந்தன.

16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருத்தந்தை ஆறாம் ஏட்ரியனுக்குப்பின் இத்தாலிக்கு வெளியேயிருந்து வந்த முதல் திருத்தந்தை இவரே. இவருக்குப்பின் வந்த இரு திருத்தந்தையர்களும் இத்தாலிக்கு வெளியேயிருந்தே வந்துள்ளனர். திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் திருஅவைத் தலைவராக இருந்தபொழுது பல அரும்காரியங்களை ஆற்றியுள்ளார். யூத, இஸ்லாம் மதங்களோடும், கீழை ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையோடும் கத்தோலிக்க திருஅவையின் உறவை மேம்படுத்துவதில் சிறப்பு அக்கறைகாட்டி வெற்றியும் கண்டார்.

திருத்தந்தையர்களுள் அதிக நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இத்திருத்தந்தை, தான் செல்லும் நாடுகளில் மக்கள் விரோத நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்தார்.

சர்வாதிகார ஆட்சிகளை கடுமையாக எதிர்த்ததுடன், கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசம் வீழ்ச்சி அடைவதற்கு தூண்டுகோலாகவும் இருந்துள்ளார்.

தென்னாப்ரிக்காவின் நிறவெறிக் கொள்கைக்கு எதிராக துணிந்து குரல் கொடுத்த இவர்தான், இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையில் ஈராக் தாக்கப்பட்டபோது, வளைகுடாப் போருக்கு தன் எதிர்ப்பையும் காட்டினார்.

மனித மாண்பு எத்தகைய சூழலிலும் மதிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாகச் செயல்பட்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், மரணதண்டனைக்கு எதிராகத் தொடர்ந்து தன் குரலை எழுப்பிவந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தொடர்ந்து ஊக்கமளித்தார், குறிப்பாக, போலந்து நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்கப்பட முயற்சி எடுத்தார்.

இத்தாலியில் மாபியா குற்றக்கும்பலின் நடவடிக்கைகளை அஞ்சாமல் துணிச்சலுடன் எதிர்த்து குரலெழுப்பினார். 1993ஆம் ஆண்டு சிசிலியின் அக்ரிஜெந்தோ நகருக்கு திருப்பயணம் மேற்கொண்டபோது அங்கு இந்த கும்பலுக்கு எதிராக வன்மையானக் கண்டனத்தை வெளியிட்டார். 1995ஆம் ஆண்டு உரோம் நகரின் இரு கோவில்கள் இக்கும்பலால் தாக்கப்பட்டபோதும் இவர் பின்வாங்கவில்லை.

1990ஆம் ஆண்டு ருவாண்டாவில் Tutsi மற்றும் Hutu இன மக்களிடையே உள்நாட்டுப்போர் மூண்டபோது, Tutsi இனமக்கள் சித்ரவதைப்படுத்தப்பட்டது குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டார்.

தன் தென்அமெரிக்கப் பயணத்தின்போது சிலே அரசுத்தலைவர் Augusto Pinochetயின் ஆட்சியை கொடுங்கோலாட்சி என வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினார்.

1983ஆம் ஆண்டு ஹெய்ட்டி நாட்டிற்கு திருப்பயணம் மேற்கொண்டபோது, அரசுத்தலைவர் Jean-Claude Duvalierன் ஆட்சியையும் அந்நாட்டில் நிலவும் ஏழ்மையையும் பெரும் மக்கள் கூட்டத்தில் அரசுத்தலைவரின் முன்னிலையிலேயே விமர்சித்தார்.

1988ஆம் ஆண்டு பரகுவாய் நாட்டில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் திருப்பயணம் மேற்கொண்டபின், அதிபர் Alfredo Stroessnerன் ஆட்சி கவிழ்ந்தது.  

1989 டிசம்பரில் சோவியத் அரசுத்தலைவர் Mikhail Gorbachev அவர்கள் திருத்தந்தையை வத்திக்கானில் சந்தித்தார். பின்னாளில் சோவியத் தலைவரே ஒருமுறை கூறினார், ”ஜான் பால் இல்லையெனில் இரும்புத்திரை வீழ்ந்திருக்காது" என்று.

2004ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஜார்ஜ் புஷ் அவர்கள், மிகப்பெரிய விருதான விடுதலைப் பதகத்தை திருத்தந்தைக்கு வழங்கினார்.

1986ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அசிசியில் நடத்தப்பட்ட உலக அமைதிக்கான செபவழிபாட்டில் திருத்தந்தையின் தலைமையில் பல்வேறு மதங்களின், கிறிஸ்தவ சபைகளின் 120க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டது மத இணக்கவாழ்வுக்கு உதவுவதாக இருந்தது.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் காலத்தில் கத்தோலிக்க யூத உறவுகள் நல்ல முன்னேற்றத்தைக் கண்டன. 1979ஆம் ஆண்டே திருத்தந்தை Auschwitz வதைப்போர் முகாமைச் சென்றுப் பார்வையிட்டதும், 1993 டிசம்பரில் வத்திக்கானுக்கும் இஸ்ராயேலுக்கும் இடையே முறையான அரசியல் உறவு உருவாக்கப்பட்டதும் குறிப்பிடும்படியானவை.

2000மாம் ஆண்டு மார்ச் மாதம் இஸ்ராயேலில் நாத்சி வதைப்போர் நினைவகமான Yad Vashem சென்று சந்தித்ததுடன், யூதர்களின் புனித தலங்களுள் ஒன்றான மேற்கு சுவரைத் தொட்டு, அங்கு நின்று செபித்தார். இது ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

1985ஆம் ஆண்டு ஆப்ரிக்க நாடான Togoவுக்கு திருப்பயணம் மேற்கொண்டபோது மத சகிப்புத்தன்மையின் தேவையை வலியுறுத்தியதோடு, இயற்கையையும் முன்னோர்களின் ஆவியையும் வழிபடுபவர்களுக்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் இடையே காணப்படும் சில ஒற்றுமைகளையும் குறிப்பிட்டுக் காட்டினார்.

புத்த மதத்தின்மீது, குறிப்பாக, தலாய் லாமா மீது அதிக மதிப்பு வைத்திருந்தார் இத்திருத்த்னதை. Tenzin Gyatso என்ற இயற்பெயர் கொண்ட இன்றைய 14வது தலாய் லாமா திருத்தந்தையை எட்டுமுறை சந்தித்துள்ளார்.

மேலும், டமாஸ்கஸின் Umayyad இஸ்லாமிய மசூதிக்குள் நுழைந்து புனித திருமுழுக்கு ஜானின் கல்லறையை தரிசித்ததுடன், மசூதிக்குள் நின்று செபித்த முதல் திருத்தந்தை இவர்தான். இத்தாலிய தலைநகர் உரோமில் இஸ்லாமிய மசூதி ஒன்று கட்டப்பட ஆதரவளித்ததோடு, 1995ஆம் ஆண்டு அதன் திறப்பு விழாவிலும் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் கலந்துகொண்டார்.

இதுமட்டுமா, கடந்த காலங்களில் கத்தோலிக்க திருஅவை செய்த தவறுகளால் பாதிக்கப்பட்ட மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டார் இத்திருத்தந்தை. அறிவியலாளர் Galileo Galilei திருஅவையால் கண்டனம் செய்யப்பட்டது, அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை கண்டிக்காமல் விட்டது, மதப்போர்களில் சித்ரவதைகளை நடத்தியது, பெண்களை மாண்பின்றி நடத்தியது, நாத்ஸி கொடுமைகளின்போது அதற்கு எதிராக குரல் எழுப்பாமல் சில கிறிஸ்தவர்கள் அமைதி காத்தது என பல்வேறு கடந்தகால தவறுகளுக்காக வெளிப்படையாக அவர் மன்னிப்புக் கேட்டதை குறிப்பிட்டுச் சொல்லலாம். 

இளையோர் மீது தனிப்பட்ட அன்புகொண்டு செயல்பட்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், நம் சிந்தனைக்குரிய நல்ல பல கருத்துக்களை விட்டுச்சென்றுள்ளார். உதாரணமாக,

உண்மை அன்பு நிபந்தனைகள் விதிப்பதில்லை, அது கணக்கிடுவதில்லை, குற்றம் சுமத்துவதில்லை, மாறாக அன்பு மட்டுமே காட்டுகிறது.

கோபப்படுவதைவிட அழுவது சிறந்தது. ஏனெனில் கோபத்தில் நாம் பிறரைக் காயப்படுத்துகிறோம், மாறாக, அழும்போதோ நம் ஆன்மா வழியாக வழிந்தோடும் கண்ணீர் நம் இதயத்தை சுத்தப்படுத்துகின்றது.

என்ன, எவ்வாறு என்பதை அறிவியல் சொல்லட்டும். யார், ஏன் என்பதை மதம் சொல்லட்டும்.

கடந்த காலத்தை நன்றியுடன் நோக்குவோம், நிகழ்காலத்தை பேரார்வத்துடன் வாழ்வோம், வருங்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்குவோம் என அவர் கூறியவைகளை நினைத்துப் பார்ப்போம்.

புனித இரண்டாம் ஜான் பாலிடம் செபிப்போம். நம் வாழ்வின் பாதையில் அவரின் பரிந்துரையை நாடுவோம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 July 2023, 13:44