தேடுதல்

திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்   (ANSA)

திருத்தந்தயர் வரலாறு - திருத்தந்தை 16ம் பெனடிக்ட் – முதல் பாகம்

கர்தினால் யோசேப் இராட்சிங்கர் அவர்கள், தனது 78வது வயதில், திருஅவையின் 265வது திருத்தந்தையாக, 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் நாள் பணியைத் தொடங்கினார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை, 16ம் பெனடிக்ட் அவர்கள், ஜெர்மன் நாட்டில், ஆஸ்ட்ரியாவின் எல்லையிலுள்ள பவேரியா மாநிலத்தில், Marktl என்ற சிற்றூரில், 1927ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி புனித சனிக்கிழமையன்று பிறந்தார். திருநீராட்டில் யோசேப் அலாய்சியஸ் இராட்சிங்கர் என்ற பெயரைப் பெற்றார். இவரது தந்தை, ஹிட்லரின் நாத்சி கொள்கைகளை, கடுமையாய் எதிர்த்ததால், இவரது குடும்பம் நாத்சிகளால் துன்புறுத்தப்பட்டது. பதினான்கு வயது சிறுவன் இராட்சிங்கர், ஜெர்மன் படையில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டு, சிறையில் இருந்து, இறுதியில், 1945ம் ஆண்டு மே மாதத்தில் விடுதலை செய்யப்பட்டான். அதன்பின்னர், இவரும், இவரது அண்ணன் ஜார்ஜ் இராட்சிங்கர் அவர்களும், 1945ம் ஆண்டு நவம்பரில், குருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர். 1951ம் ஆண்டில், இவ்விருவரும் அருள்பணியாளர்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டனர். 1946ம் ஆண்டு முதல் 1951ம் ஆண்டு வரை, மெய்யியல் மற்றும் இறையியல் கற்றார் யோசேப் இராட்சிங்கர். 1953ம் ஆண்டில், ‘திருஅவையின் புனித அகுஸ்தீன் கோட்பாடுகளில் இறைமக்கள் மற்றும், இறைவனின் இல்லம்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார் இவர். பேராசிரியாரகப் பணியாற்றுவதற்கு, இரு முனைவர் பட்டங்கள் தேவைப்பட்டதால், தனது இரண்டாவது முனைவர் பட்டப்படிப்பில், 13ம் நூற்றாண்டு இறையியல் மற்றும் மெய்யியல் அறிஞரான பிரான்சிஸ்கன் துறவி புனித பொனவெந்தூர் பற்றி ஆய்வை மேற்கொண்டு பட்டம் பெற்றார். 1958ம் ஆண்டில், Freising கல்லூரியில் பேராசிரியாரகப் பணியைத் தொடங்கினார்.

இராட்சிங்கர் அவர்கள், 1959ம் ஆண்டில், போன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியேற்ற முதல் நாளில், நம்பிக்கையின் கடவுள் மற்றும் மெய்யியலின் கடவுள் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். இவர், 1962ம் ஆண்டில் வத்திக்கானில் நடைபெற்ற 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் வல்லுனராக கலந்துகொள்ள அழைப்புப் பெற்று, அதில் கலந்துகொண்டார். 1965ம் ஆண்டில் பொதுச்சங்கம் முடிந்தவுடன் ஜெர்மனிக்குத் திரும்பி, பேராசிரியர் பணியைத் தொடர்ந்தார். 1968ம் ஆண்டில், கிறிஸ்தவத்திற்கு முன்னுரை என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார். திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், 1977ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி, மியுனிச் பேராயராக இவரை நியமித்து, அதே ஆண்டு ஜூன் 27ம் தேதி, கர்தினாலாகவும் உயர்த்தினார், 1981ம் ஆண்டில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், திருப்பீட நம்பிக்கைக் கோட்பாட்டுப் பேராயத் தலைவராக நியமித்தார். அவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படும் வரை இந்தப் பணியை ஆற்றினார். இந்தப் பணிக்காலத்தில், குடும்பக்கட்டுப்பாடு, ஓரினச்சேர்க்கை, பல்சமய உரையாடல் போன்றவற்றில் திருஅவையின் போதனைகள் உட்பட, கத்தோலிக்கக் கோட்பாடுகளைப் பாதுகாத்து உறுதிப்படுத்துவதில் தீவிரமாகச் செயல்பட்டார். கிறிஸ்தவம், அறிவின் அடிப்படையில் புரிந்துகொள்ளப்படும் ஒரு மதம் என்பதை இவர் அடிக்கடி விளக்கி வந்தார். மனிதர் பற்றியும், மனிதர் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டவர்கள், அதனால் அவர்கள் மாண்புடன் மதிக்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசியுள்ளார். 1998ம் ஆண்டில் கர்தினால்கள் அவையின் துணைத் தலைவராகவும், 2002ம் ஆண்டில் அந்த அவையின் தலைவராகவும் இவர் நியமிக்கப்பட்டார். பன்னாட்டு இறையியல் கழகத் தலைவர் (1982-2005), பாப்பிறை விவிலிய கழகத் தலைவர் (1982-2005) போன்ற முக்கிய பணிகளையும் இவர் ஆற்றியுள்ளார்.  

திருத்தந்தையாக.....

கர்தினால் யோசேப் இராட்சிங்கர் அவர்கள், தனது 78வது வயதில், திருஅவையின் 265வது திருத்தந்தையாக, 2005ம் ஆண்டு ஏப்ரல் 24ம் நாள் பணியைத் தொடங்கினார். இவர், திருத்தந்தை 12ம் கிளமென்ட் (1730–1740) அவர்களுக்குப்பின், வயது முதிர்ந்த திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குமுன், நீண்ட காலம் கர்தினாலாகப் பணியாற்றிய திருத்தந்தையருள், திருத்தந்தை 13ம் பெனடிக் (1724–1730) அவர்களுக்குப்பின் இவரே.  2005ம் ஆண்டு இவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குமுன், Time இதழ், உலகில் மிகவும் செல்வாக்குப் பெற்ற நூறு பேர் பட்டியலில் இவரையும் இணைத்திருந்தது. 2005ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் நடைபெற்ற இவரின் முதல் புதன் பொது மறையுரையில், பெனடிக்ட் என்ற பெயரை தான் தேர்வுசெய்ததற்கான காரணத்தை விளக்கினார்.

பெயர்க்காரணம்

“முதலில், திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், போரின் துன்பங்கள் நிறைந்த காலத்தில், திருஅவையை வழிநடத்திய, அமைதியின் துணிச்சலான இறைவாக்கினராக இருந்தார். அவரின் பாதகமலங்களைப் பின்பற்றி, மக்களுக்கிடையே ஒப்புரவும், நல்லிணக்கமும் ஏற்படும் பணியில், எனது திருப்பணியை அர்ப்பணிக்கின்றேன். அதோடு, நூர்சியா நகர் புனித பெனடிக்ட், ஐரோப்பாவின் துணை பாதுகாவலர். அப்புனிதரின் வாழ்வே, ஐரோப்பாவின் கிறிஸ்தவ வேர்களை வெளிவரச் செய்கிறது. நம் கிறிஸ்தவ வாழ்வில், கிறிஸ்துவே மையம் என்பதை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு வாழ அவரது உதவியைக் கேட்போம். நம் எண்ணங்களிலும், செயல்களிலும் கிறிஸ்துவே எப்போதும் முதலிடம் வகிப்பாராக” என்று கூறினார் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட்.

திருத்தந்தை புனித 2ஆம் யோவான் பவுலுக்கு அருளாளர் நிலை 

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2005ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி, திருத்தந்தை புனித 2ஆம் யோவான் பவுல் அவர்கள், அருளாளராக உயர்த்தப்படுவதற்குரிய படிநிலைகளை ஆரம்பித்து வைத்து, அதனை மே 13ம் தேதி பாத்திமா அன்னை விழாவன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பொதுவாக ஒருவர் இறந்து ஐந்து ஆண்டுகள் சென்றே இந்த நடைமுறை தொடங்கப்படும். கேரளாவின் புனித அல்போன்சா உட்பட பலரை இவர் புனிதர்களாக அறிவித்தார். 2005ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி முதல், 2012ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி முடிய, 45 பேரை புனிதர்களாக அறிவித்துள்ளார் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட். 2012ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி, Bingen நகர் ஹில்டெகார்டு மற்றும் அவிலா நகர் யோவான் ஆகிய இருவரையும், திருஅவையின் 34வது, 35வது மறைவல்லுனர்களாக அறிவித்தார்.

தலைமைப்பணியிலிருந்து ஓய்வு

ஜெர்மன் நாட்டவரான கர்தினால் இராட்சிங்கர் அவர்கள், 16ஆம் பெனடிக்ட் என்ற பெயருடன், திருஅவையின் 265வது திருத்தந்தையாக, 2005ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி தனது தலைமைப் பணியைத் தொடங்கினார். இவர், தனது  எட்டாவது ஆண்டு தலைமைப்பணி காலத்தில், 2013ம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி, இந்தப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக, திடீரென அறிவித்தபோது, உலகமே அதிர்ச்சியில் உறைந்தது. ஏனெனில், கடந்த எழுநூறுக்கு மேற்பட்ட ஆண்டுகளில், இவ்வாறு பணி ஓய்வுபெறுவதாக அறிவித்த முதல் திருத்தந்தை, 16ம் பெனடிக்ட் ஆவார். 1415ஆம் ஆண்டு கட்டாயத்தின்பேரில் பதவி விலகிய, திருத்தந்தை 12ஆம் கிரகரி அவர்களுக்குப் பின்னர், பதவி விலகிய முதல் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களே. அதிலும், தானே முன்வந்து, சுயவிருப்பத்தின்பேரில், பதவி விலகியது, 1294ஆம் ஆண்டில், திருத்தந்தை 5ஆம் செலஸ்தீன் அவர்களுக்குப்பின், திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களே. அன்று திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள் கர்தினால்கள் அவையில், தனது தலைமைப்பணி ஓய்வை இலத்தீனில் வாசிக்கையில், வயதின் இயலாமை காரணமாக இந்த முடிவை எடுத்ததாகவும் அறிவித்தார். அதன்பின்னர் காஸ்தெல்கந்தோல்ஃபோவிலுள்ள, திருத்தந்தையரின் கோடை விடுமுறை மாளிகையில் சிறிது நாள்கள் ஓய்வெடுத்த பின்னர், வத்திக்கான் திரும்பி, வத்திக்கான் தோட்டத்திலுள்ள Mater Ecclesiae என்ற இல்லத்தில், அமைதியான செப வாழ்வைத் தொடங்கினார். திருஅவைக்காகத் தான் செபிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த இல்லத்தை 1990ஆம் ஆண்டில், புனித திருத்தந்தை 2ஆம் யோவான் பவுல் அவர்கள், ஆழ்நிலை துறவு சபைக்காக அமைத்தார்.

திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள், தனது எட்டு ஆண்டுகள் தலைமைத்துவ பணியில், திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டார். குறிப்பாக, முதல் மூன்று ஆண்டுகளில், தனது தாயகமான ஜெர்மனிக்குச் சென்றார். அங்கு நடைபெற்ற உலக இளையோர் நிகழ்வில் கலந்துகொண்டார். போலந்து, இஸ்பெயின், துருக்கி, ஆஸ்ட்ரியா, மால்ட்டா போன்ற நாடுகளிலும் திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டார். 2008ஆம் ஆண்டு ஏப்ரலில் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், அதே ஆண்டு ஜூலையில் ஆஸ்திரேலியாவிற்கும் சென்றார். சிட்னியில் நடைபெற்ற உலக இளையோர் நிகழ்வில் கலந்துகொண்டார், ஆஸ்திரேலியாவில், அருள்பணியாளர்களால் இழைக்கப்பட்ட பாலியல் முறைகேடுகளுக்கு  மன்னிப்பு கேட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி பாரிசில் திறந்தவெளி மைதானத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் 2,50,000 பேர் கலந்துகொண்டனர் அச்சமயம், நவீன பொருளியத்தன்மைக்கு எதிரான கண்டனத்தை தெரிவித்தார்.

2005ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை எட்டாண்டுகள் மிகவும் சிறப்பாக திருஅவையை வழிநடத்தியவர் என்றும், குறுகிய கால ஆண்டு என்றாலும் அவர் புனிதர்களாக தகுதிப்படுத்திய 45 பேரும் உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கர்களால் நம்பிக்கை மற்றும் புனிதத்துவத்தின் மாதிரியாக போற்றப்படுகின்றவர்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இரண்டு சாதாரண உலக ஆயர்கள் மாமன்றங்கள், மற்றும், 2 சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றங்களை இவர் நடத்தியுள்ளார். 84 பேரை கர்தினால்களாக அறிவித்துள்ளார். 45 பேரை புனிதர்களாகவும், திருத்தந்தை புனித 2ஆம் யோவான் பவுல் உட்பட 870 பேரை அருளாளர்களாகவும் இவர் அறிவித்துள்ளார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2023, 12:32