மன்னிக்கும் மனம் கொண்ட பாகிஸ்தான் கத்தோலிக்கர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு முஸ்லீம் ஆலயத்திற்கு அடுத்துள்ள கிறிஸ்தவ வழிபாட்டின் தலத்தின் சுவரை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காதிருக்கக் கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் தலைவர்கள் அமைதி ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூலை 19, இப்புதனன்று, இஸ்லாமாபாத்தில் உள்ள பரகாஹு காவல்நிலையத்தில் இந்த இருமதத்தவருக்கிடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், புனித யோவான் கத்தோலிக்க வழிபாட்டுத்தலத்தின் பொறுப்பாளரான அருள்பணியாளர் சில்வெஸ்டர் ஜோசப் அவர்களும் இதில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர் என்றும் அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கின்றது.
NCJP-இன் நிர்வாக இயக்குனர் நயீம் யூசப் கில் அவர்கள், இத்தகையதொரு அமைதி முயற்சிக்குக் காரணமாக இருந்த காவல்துறையினரைப் பாராட்டியதுடன், இந்த அமைதியான தீர்வுக்கு உள்ளூர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, உள்ளூர் சமூகங்கள் இணைந்து அமைதியுடன் வாழ வேண்டும் என்றும் யூகான் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பாகிஸ்தானின் தலைநகரில் உள்ள எட்டு கத்தோலிக்க வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான புனித யோவான் ஆலயத்தில் 70-க்கும் மேற்பட்ட கத்தோலிக்கக் குடும்பங்கள் வழிபாடுகளில் மிகவும் ஆர்வமாகக் கலந்து கொள்கின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்