கிறிஸ்துவின் உடலாக நாம் இருக்கின்றோம் – கர்தினால் போ
மெரினா ராஜ் - வத்திக்கான்
எல்லாவிதமான துன்பங்கள் மற்றும் காயங்கள் இருந்தபோதிலும், கிறிஸ்துவின் உடலாக நாம் இருப்பதை எதுவும் தடுக்க முடியாது என்றும், இதனை உலகிற்கு நிரூபிக்க நம்பிக்கையுடன் இருங்கள், காயம்பட்ட இயேசு உயிர்த்தது போல துன்பத்திலிருந்து உயிர்த்தெழுங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார் கர்தினால் சார்லஸ் மாங் போ.
ஜூன் 30 வெள்ளிக்கிழமை கிழக்கு மியான்மார் கயா மாநிலத்தின் தலைநகரான Loikaw மறைமாவட்ட புதிய ஆயராக பேரருள்திரு செல்சோ பா ஷ்வே அவர்கள் பொறுப்பேற்ற திருப்பலியில் இவ்வாறு கூறியுள்ளார் யாங்கூன் பேராயரான கர்தினால் சார்லஸ் மாங் போ.
மியான்மாரில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாக ஏராளமான மக்கள் இடம்பெயர்வு, உயிரிழப்பு போன்றவை ஏற்பட்டுள்ள நிலையில் அம்மக்களுக்கு ஆற்றிய மறையுரையில், காயம்பட்ட இயேசுகிறிஸ்துவின் உடல் உயிர்த்தெழுந்தது போல, துன்பச் சூழலில் வாழும் நாமும் அவரின் உயிர்ப்பாற்றலால் உயிர்ப்பிக்கப்படுவோம் என்றும், கடவுள் எல்லாச் சூழலிலும் நம்மோடு இருக்கின்றார் என்றும் கூறியுள்ளார் கர்தினால் மாங் போ.
பேராயர் செல்சோ பா ஷ்வே ஒரு நல்ல மேய்ப்பனுக்கு உதாரணம் என்று சுட்டிக்காட்டிய கர்தினால் மாங் போ அவர்கள், ஒரு மேய்ப்பராக ஏற்கனவே மந்தையின் ஆடுகளாம் மக்கள் மத்தியில் வாழ்ந்து அதன் வாசனை, கண்ணீர், காயங்கள், சிதறல் ஆகியவற்றை நன்கு அறிந்தவர் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
சிறந்த சொற்பொழிவாற்றும் திறன்களுக்காக அல்ல, மாறாக, சிலுவை என்னும் துன்பத்தின் வழியாக சான்று பகரவே இறைவன் அவரை ஆயராக தேர்ந்தெடுத்துள்ளார் என்று கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், உயிர்த்தெழுதல், நம்பிக்கை, அமைதி, நல்லிணக்கம், சமூகங்களின் சீரமைப்பு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு மக்களை வழிநடத்துவது ஆயரின் கடமை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
திருத்தூதர் பேதுருவை சிறையிலிருந்து வெளியே அழைத்து மீட்பை நோக்கி வழிநடத்திய இறைவன், அசாதாரண, இருண்ட நேரங்களில், தனது ஊழியர்களுடன் இருக்கிறார் என்பதை நினைவூட்டுகிறது என்றும், ஆயர் என்பவர், கடவுளுடன் ஐக்கியப்பட்டு அவரது ஆவியால் அவரது வழியில் வழிநடத்தப்படுவார் என்றும் கூறியுள்ளார்.
இயேசு கிறிஸ்துவை முன்மாதிரியாகக் கொண்டு துன்ப காலங்களில் துணிவு, உண்மை, நீதி, விடாமுயற்சி, இறைப்பாதுகாப்பில் அசைக்க முடியாத நம்பிக்கை போன்றவை ஆயருக்குத் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் போ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்