தேடுதல்

மணிப்பூரில் அமைதி நிலவ போராடும் பெண்கள் மணிப்பூரில் அமைதி நிலவ போராடும் பெண்கள்  (AFP or licensors)

கிறிஸ்தவர்கள் மீதான இனப்படுகொலை – பேராயர் பம்ப்ளனி

மே மாதம் 3ஆம் தேதி தொடங்கிய மணிப்பூர் வன்முறையினால் இதுவரை 130 க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

மெரினா ராஜ் - வத்திக்கான்

வடகிழக்கு மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் மதவெறி வன்முறையை கிறிஸ்தவர்கள் மீதான இனப்படுகொலை என்றும், இச்சூழலில் பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான இந்திய அரசு அமைதியை மீட்டெடுக்கத் தவறியுள்ளது என்றும் விமர்சித்துள்ளார் பேராயர் ஜோசப் பம்ப்ளனி.

ஜூன் 30 அன்று சீரோ-மலபார் தலத்திருஅவையின் அதிகாரப்பூர்வ வெளியீட்டில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்த பேராயர் பம்ப்ளனி அவர்கள், ஏறக்குறைய இரண்டு மாதங்களாக நடந்து கொண்டிருக்கும் மணிப்பூர் வன்முறைக்குத் தீர்வு காண இந்திய அரசு எந்த விதமான முயற்சியையும் எடுக்கவில்லை என்றும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய பிரதமர் மோடி 2002 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்தபோது ஏறக்குறைய 1000 முஸ்லீம் மக்கள் உயிரிழந்ததையும், சிறுபான்மையினரான கிறிஸ்தவ மக்கள் துன்புற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவில் மதப்பாகுபாடு இல்லை என்று அமெரிக்க அரசுத்தலைவர் பைடனுடனான சந்திப்பில் பிரதமர் மோடி கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ள பேராயர் பம்ப்ளனி அவர்கள், மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீதான இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கின்றது என்றும் கூறியுள்ளார்.

ஏறக்குறைய 50,000 குக்கி இன மக்கள் இடம்பெயர்ந்து 300 நிவாரண முகாம்களில் வசிக்கின்றனர் என்றும், பாஜக தலைமையிலான அரசு நிர்வாகத்திடம் இருந்து அவர்களுக்கு சிறிய அளவிலேயே நிவாரண உதவிகள் கிடைப்பதாகவும் கிறிஸ்தவ தலைவர்கள் கூறியுள்ள நிலையில், 300 கிறிஸ்தவ ஆலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் காட்டில் தஞ்சமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.

மே மாதம்  3ஆம் தேதி தொடங்கிய இவ்வன்முறையினால் இதுவரை 130 க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. (UCAN)  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 July 2023, 11:43