பிலிப்பீன்சில் மறைப்பணியாளர்கள் அனுபவிக்கும் துயர்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
மத்திய மற்றும் தென்பிலிப்பீன்சில் ஏழைகள் வாழ்வில் ஓரங்கட்டப்பட்டோர் மற்றும் பூர்வீகக் குடிமக்களிடையே பணியாற்றும் கத்தோலிக்க துறவறத்தார் மற்றும் மறைப்பணியாளர்கள் கம்யூனிசவாதிகள் என முத்திரைக் குத்தப்பட்டு காவல்துறையால் கைது செய்யப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Mindanao தீவிலுள்ள Sultan Kudarat மாநில காவல்துறையினர், அம்மாநில கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பூர்வீகக் குடிமக்களிடையே பணியாற்றும் துறவறத்தாருக்கு உதவியதற்காக Aileen Manipol Villarosa என்ற திருஅவைப் பணியாளரைக் கைது செய்துள்ளதைப் பற்றிக் குறிப்பிடும் பிதெஸ் கத்தோலிக்க செய்தி நிறுவனம், கடந்த ஆண்டு ஆகஸ்டில் 5 அருள்சகோதரிகள் உட்பட 16 தலத்திருஅவைப் பணியாளர்கள் கம்யூனிசவாதிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறது.
இது தவிர, ஒரு பிரிந்த சபை போதகரும் அவர் மனைவியும் உட்பட 71 பேர் கம்யூனிச ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கு உதவி புரிந்ததாக கடந்த நவம்பரில் காவல்துறையால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
கத்தோலிக்க மற்றும் பிரிந்த சபை மறைப்பணியாளர்களின் உடமைகளை அரசு முடக்கி வருவதாகவும் கூறும் இச்செய்தி நிறுவனம், அரசுக்கு எதிராகப் போராடுபவர்களை அடக்க முன்னாள் அரசுத்தலைவர் Rodrigo Duterte அவர்கள் புகுத்திய அடக்குமுறைகள் தற்போதைய அரசிலும் தொடர்ந்து பின்பற்றப்படுவதாகவும், இதனால் கிறிஸ்தவப் பணியாளர்கள் தீவிரவாதிகளாக நோக்கப்பட்டு சிறைவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கிறது.
சுரங்கத்தொழில் மற்றும் அணை கட்டுமானம் ஆகியவற்றிலிருந்து தங்கள் சொந்த நிலங்களைக் காப்பாற்ற முயலும் பூர்வீகக் குடிமக்களுக்கு ஆதரவு அளிப்பதாலேயே கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள் தீவிரவாதிகளாக நோக்கப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கிறது பிதெஸ் செய்தி நிறுவனம். (Fides )
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்