தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
தற்போது மூன்று வெவ்வேறு கண்டங்களைத் தாக்கும் வெப்ப அலைகள் நாம் ஏற்கனவே காலநிலை நெருக்கடியில் வாழ்கிறோம் என்பதற்கான அறிகுறியாகும் என்றும், வெப்ப உமிழ்வைக் குறைப்பதில் நாம் விரைவாகச் செயல்படாவிட்டால் எதிர்காலத்தில் மிகமோசமான விளைவுகளைச் சந்திக்கவேண்டி வரும் என்றும் எச்சரித்துள்ளார் காலநிலை நீதிக் கொள்கை என்ற கிறிஸ்தவ அமைப்பொன்றின் தலைவர் Illari Aragon.
இந்த வாரம் ஐரோப்பா முழுவதும் ஏற்பட்ட கொடிய வெப்பக்காற்று மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் அமெரிக்காவில் கடுமையான வெப்பக் காற்றால் பாதிக்கப்பட்டுள்ள வேளை இவ்வாறு கூறியுள்ள Aragon அவர்கள், வெப்பக் காற்றால் மிக எளிதில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு சிறந்த ஆதரவை அளிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
"சில ஏழ்மையான நாடுகளில் உள்ள பலருக்கு இந்த அளவு வெப்பம் தாங்க முடியாதது மட்டுமன்றி, இதனை சமாளிப்பதற்கான வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் இல்லை என்று எடுத்துரைத்துள்ள Aragon அவர்கள், இம்மாதிரியானதொரு எதிர்காலம் வரப்போவதாக விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர் என்றும், அவர்களின் கணிப்புகள் தற்போது உண்மையாகி வருவதைப் பார்ப்பது வேதனை அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
பதிவுசெய்யப்பட்டுள்ள இந்த வெப்பக்காற்றின் தாக்கம், உலகிற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், இதிலிருந்து நாம் தப்பிக்க சரியான முடிவுகளை எடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ள Aragon அவர்கள், இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முக்கிய நிதியைப் பெற்றுத்தருவதில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்