சிரியா மற்றும் லெபனானில் உலக இளைஞர் தினக் கொண்டாட்டம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
சிரியா மற்றும் லெபனானில் போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ இளையோருக்குப் போர்ச்சுகலின் லிஸ்பனில் நடைபெறும் உலக இளையோர் தினக் கூட்டத்திற்கு இணையாக அதேநாளில் உள்ளூர் நிகழ்வுகளில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ICN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிதி மற்றும் பிற சிரமங்கள் காரணமாக லிஸ்பனுக்குப் பயணிக்க முடியாத இளையோரைக் கருத்தில்கொண்டு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ACN எனப்படும் தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் அமைப்பு இந்த ஏற்பாடுகளை அனைத்தையும் செய்துள்ளதாகவும் அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதம் 1 முதல் 6 வரை போர்த்துக்கல்லின் லிஸ்பனில் நடைபெற உள்ள உலக இளையோர் மாநாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலக இளையோரைச் சந்திக்கும் அதேநேரத்தில், லெபனான் மலையில் நடக்கும் கூட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொள்வர் என்றும் அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.
இதுகுறித்து ACN அமைப்பிடம் கூறிய லெபனானின் கத்தோலிக்க ஆயர்கள் மற்றும் முதுபெரும் தந்தையர் பேரவையின் இளைஞர் அமைப்பின் பிரதிநிதி Roy Jreich அவர்கள், இந்நிகழ்வு நம்பிக்கை, தொடர்ச்சி மற்றும் மகிழ்ச்சியை அடையாளப்படுத்துகிறது என்றும், மறக்க முடியாத அனுபவங்களுடன், இளைஞர்கள் தலத்திருஅவையின் பணியைத் தொடரவும் வெவ்வேறு வழிகளில் அதனை வளர்க்கவும் இது வாய்ப்பளிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வு குறித்துக் கருத்துத் தெரிவித்த சிரியா மற்றும் லெபனான் திட்டங்களின் ACN தலைவர் Xavier Bisits அவர்கள், லெபனானின் இளம் கத்தோலிக்கர்கள் வறுமை, வேலையின்மை மற்றும் தங்கள் நாட்டின் அரசியல் அமைப்பின் வீழ்ச்சியால் அவதிப்படுகிறார்கள் என்றும் கவலை தெரிவித்தார். (ICN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்