உதவிதேவைப்படும் முதியோரின் எண்ணிக்கை ஐரோப்பாவில் அதிகரித்துள்ளது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
ஐரோப்பியக் கண்டத்தில் உதவி தேவைப்படும் முதியோர்களின் எண்ணிக்கை அடுத்த 30 ஆண்டுகளில் பல இலட்சங்களைத் தாண்ட உள்ள நிலையில், போதிய முன்னேற்பாடுகளை அக்கண்டம் எடுக்கவில்லை என கவலையை வெளியிடுள்ளது கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.
நம் காலத்தில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அவர்களுக்கான அக்கறை குறைந்து வருவதுடன், அவர்களுக்கென அரசுகள் ஒதுக்கும் தொகையும் குறைந்து வருவதாக ஐரோப்பிய காரித்தாஸ் நிறுவனம் தன் கவலையை வெளியிட்டுள்ளது.
"மாண்புடன் முதுமையடைதல் - ஐரோப்பாவில் நீண்டகால அக்கறை எதிர்நோக்கும் சவால்கள்” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பு, முதியோர் அக்கறை குறித்தவைகளில் அரசுகளின் முதலீடுகள் குறைந்துள்ளதால் தேவையில் இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது என்ற கவலையை வெளியிட்டுள்ளது.
13 ஐரோப்பிய நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளை உள்ளடக்கிய ஆய்வு ஒன்றை முதியோரிடம் நடத்திய காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு, வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதற்கு இயைந்தவகையில் முதியோருக்கான ஐரோப்பிய அரசுகளின் முதலீடுகள் இல்லை எனத் தெரிவிக்கின்றது.
ஐரோப்பிய அவை, ஐரோப்பிய பாராளுமன்றம் உட்பட ஐரோப்பிய உயர் அமைப்புக்களுடன் தொடர்புகொண்டு இது குறித்த கொள்கை உருவாக்கல்களுக்கு முயன்றுவருவதாகவும் தெரிவிக்கிறது ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பு.
அனைத்து முதியோருக்கும் ஒரு குறைந்தபட்ச வருவாய்க்கு வழிசெய்தல், நீண்ட கால அக்கறையுடன் கூடிய கொள்கை வகுத்தல், தரமான நலச்சேவைகளுக்கு உறுதியளித்தல், முதியோரின் பராமரிப்புப் பணியாளர்களுக்கு நீதியான ஊதியமளித்தல், ஐரோப்பா முழுவதும் முதியோர் பராமரிப்பில் பொதுவான கொள்கை வடித்தல் போன்ற பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பு.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்