ஆயர் ஆல்வாரேஸ் விடுதலைக்காக குரல் கொடுக்கும் தலத்திருஅவைகள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஆயர் ஆல்வாரெஸின் சிறைத்தண்டனையானது அவரது அயராத மற்றும் துணிச்சலான பணிக்கு ஏற்பட்ட வெளிப்படையான அநீதியான பதில் என்றும், அவரது விடுதலைக்காக முயற்சிக்கின்ற உலகமக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த நன்றி என்றும் தெரிவித்துள்ளார் ஆயர் டெக்லான் லாங் Declan Lang
கடந்த பிப்ரவரி மாதம் நிகரகுவா அரசினால் தேசதுரோகம் குற்றம் சாட்டப்பட்டு 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆயர் ஆல்வாரெஸ் அவர்களை விடுவிக்கக் கோரி அட்லாண்டிக்கின் இருபுறமும் உள்ள தலத்திருஅவை தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ளார் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவையின் பன்னாட்டு விவகாரங்களுக்கான தலைவரான ஆயர் டெக்லான் லாங்.
நிகரகுவாவின் அனைத்து மக்களுக்காகவும் தொடர்ந்து செபிப்பதாக கூறியுள்ள ஆயர் லாங் அவர்கள், தலத்திருஅவையில் உள்ளவர்களுக்கு நீதி, அமைதி, அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக அவர்கள் தண்டனையளிக்கப்பட்டுள்ளனர் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
ஆயர் அல்வாரெஸை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையில் மீண்டும் முறிவு ஏற்பட்டதாக கடந்த வாரம் தங்களுக்கு செய்தி கிடைத்தது என்றும், இருபத்தியாறு ஆண்டுகள் சிறைத்தண்டனை, குடியுரிமை பறிக்கப்பட்டது போன்றவை மிகவும் வேதனையளிக்கக்கூடியது என்றும் தெரிவித்துள்ளார் அமெரிக்க கத்தோலிக்க ஆயர் பேரவையின் பன்னாட்டு நீதி மற்றும் அமைதிக்கான தலைவரான ராக்போர்டின் ஆயர் டேவிட் ஜே மல்லாய்.
ஆயர் அல்வாரெஸை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற இன்டர்அமெரிக்கன் மனித உரிமைகள் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராட்டிய ஆயர் மல்லாய் அவர்கள் பன்னாட்டு சமூகத்தின் ஒருமித்த கருத்து தெளிவாக உள்ளது என்றும், நியாயமற்ற முறையில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஆயர் விரைவில் விடுதலை பெற முயற்சிப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்