தடம் தந்த தகைமை - யோவாபு கொலை செய்யப்படல்
மெரினா ராஜ் - வத்திக்கான்
அபியத்தார் ஆண்டவரின் குருவாய் இராதபடி சாலமோன் அவரை விலக்கிவிட்டார் என்ற செய்தி யோவாபுக்கு எட்டியது. அவர் அப்சலோமின் பக்கம் சாராமல், அதோனியாவின் பக்கம் சார்ந்திருந்தவர். ஆகையால் அவர் ஆண்டவரின் கூடாரத்திற்கு ஓடிப் பலிபீடத்தின் கொம்புகளைப் பற்றிக் கொண்டார். யோவாபு ஆண்டவரின் கூடாரத்திற்கு ஓடிப்போனார் என்றும் பலிபீடத்தின் அருகே அவர் நிற்கிறார் என்றும் சாலமோன் அரசருக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது சாலமோன் யோயாதாவின் மகன் பெனாயாவை அனுப்பி, “நீ போய் அவனை வெட்டி வீழ்த்து” என்றார். பெனாயா ஆண்டவரின் கூடாரத்திற்குப் போய் அவரைக் கண்டு, “வெளியே வா; இது அரச கட்டளை” என்றான். அதற்கு அவர் மறுமொழியாக, “முடியாது; நான் இங்கேயே சாவேன்” என்றான்.
எனவே, பெனாயா அரசரிடம் திரும்பி வந்து யோவாபு தனக்குக் கூறிய மறுமொழியைத் தெரிவித்தான். அப்போது அரசர் அவனை நோக்கி, “அவன் சொன்னபடியே செய். அவனைக் கொன்று அடக்கம் செய். இவ்வாறு, யோவாபு சிந்திய குற்றமற்ற இரத்தத்தின் பழி என்னையும் என் தந்தையின் வீட்டாரையும் விட்டு நீங்கச் செய். இந்த இரத்தப் பழியை ஆண்டவர் அவன் தலைமேலேயே விழச் செய்வாராக! ஏனெனில், அவன் தன்னை விட நேர்மையிலும் பண்பிலும் சிறந்தவர்களான நேரின் மகனும் இஸ்ரயேலின் படைத் தலைவனுமான அப்னேர், எத்தேரின் மகனும் யூதாவின் படைத்தலைவனுமான அமாசா ஆகியோரை என் தந்தை தாவீதுக்குத் தெரியாமல் தாக்கி வாளால் கொன்றான். இந்த இரத்தப்பழி யோவாபின் தலைமேல் மட்டுமன்று; அவன் வழி மரபினர் தலை மேலும் என்றென்றும் இருப்பதாக! ஆனால், தாவீது, அவர் வழிமரபினர், அவர் வீட்டார் ஆகியோர் மீதும் அவர் அரியணை மீதும் என்றென்றும் ஆண்டவரின் சமாதானம் தங்கி இருப்பதாக!” என்றார். அவ்வாறே, யோயாதாவின் மகன் பெனாயா புறப்பட்டுப் போய் யோவாபைத் தாக்கிக் கொன்றான். அவர் பாலை நிலத்திலிருந்த தம் வீட்டில் அடக்கம் செய்யப்பட்டார். அப்பொழுது அரசர் யோவாபுக்குப் பதிலாக யோயாதாவின் மகன் பெனாயாவைப் படைத்தலைவனாக நியமனம் செய்தார். மேலும், அபியத்தாருக்குப் பதிலாகச் சாதோக்கைக் குருவாக நியமித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்