போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் சலேசிய மறைப்பணியாளர்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இடைநிறுத்தம் செய்யப்பபட்டதாக அறிவிக்கப்பட்ட சூடான் போர் எந்தவொரு பலனையும் தராத நிலையில் பாதிக்கப்பட்ட சூடான் மக்களுடன் சலேசிய சபை மறைப்பணியாளர்கள் உடன் இருந்து உதவுதாக பீதேஸ் செய்தி அறிவித்துள்ளது.
ஆப்ரிக்காவின் கார்ட்டூமில் (Khartoum) தீவிரமடைந்து வரும் போரினால் வான்வழி குண்டுவீச்சுகள் மற்றும் கனரக பீரங்கிகளால், பொதுமக்கள் 18 பேர் இறந்துள்ளனர் மற்றும் 106 பேர் காயமடைந்துள்ளனர் என்று மருத்துவர்கள் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ள நிலையில், சலேசிய மறைப்பணியாளர்கள் தலைநகர் மற்றும் எல்-ஒபீடில் உள்ள மக்களுடன் உடன்இருக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சூடான் ஆயுதப் படை, விரைவு ஆதரவுப் படை ஆகியவற்றிற்கு இடையே போர்வெடித்து ஏறக்குறைய 50 நாட்களுக்குப் பிறகும் அம்மறைப்பணியாளர்கள் தலைநகர் கார்ட்டூம் மற்றும் எல்-ஒபீடில் தங்கி, கடினமான வாழ்க்கையை வாழ்கின்றார்கள் என்றும், பங்குமக்கள் மற்றும் உடன்பணியாளர்களுடன் பணிகளைப் பகிர்ந்து, அமைதியின் நம்பிக்கையை மக்களிடத்தில் ஊட்டுகிறார்கள் என்றும் அச்செய்தி தெரிவித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 20,000 டன் மனிதாபிமான உதவிகளை இராணுவப் படை, மற்றும் போராளிகள் கைப்பற்றியதை உலக உணவுத் திட்டத்தின் (WFP) தலைவர்களில் ஒருவரான அல்-உபையித் கண்டித்துள்ள நிலையில், ஆபத்தான சூழலிலும் அம்மறைப்பணியாளர்கள் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர்.
ஏப்ரல் 15 சனிக்கிழமையன்று முதல் குண்டுகள், புனித யோசேப்பு தொழிற்பயிற்சிப் பள்ளியின் ஆய்வகங்களில் விழுந்தபோது மாணவர்களைக் காப்பாற்றியதில் தொடங்கி குடும்பங்களுக்கு உணவு, தற்காலிக தங்குமிடம், பாதுகாப்பு ஆகியவற்றிற்கான உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளது சலேசிய சபை.
இரு படைகளுக்கும் இடையிலான ஆயுத மோதலில் இருந்து மக்களைப் பாதுகாத்து, மனிதாபிமான செயல்பாடுகளை உருவாக்குவதற்கு போர் நிறுத்தம் அனுமதிக்கும் என்றும், இரு தரப்பிலும் போர் நிறுத்தத்திற்கான பொது அறிவு மேலோங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சிறப்பு செபத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் கார்ட்டூமின் பேராயர் Michael Didi Agdum Mangoria,
சூடானில் உள்ள அனைவரும் நீடித்த போர்நிறுத்தத்தை எதிர்பார்க்கின்றார்கள் என்றும், இது உணவு இருப்புக்களை மாற்றுவதற்கும், நீர் மற்றும் எரிசக்தி விநியோகப் பயன்பாடுகளை மீண்டும் இணைப்பதற்கும், இரு படைகளுக்கும் இடையிலான ஆயுத மோதலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் மனிதாபிமானத் தாழ்வாரங்களை உருவாக்குவதற்கும் அனுமதிக்கும் என்றும் சலேசிய மறைப்பணியாளர்கள் கருதுகின்றனர்.
சூடானில் 3 சலேசியக் குழுக்கள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகின்றன. கார்ட்டூமின் தொழிற்துறை பகுதியில் உள்ள புனித ஜோசப் தொழிற்பயிற்சி மையத்தில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். கார்ட்டூமுக்கு தெற்கே 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புனித யோசேப்பு பங்குதளத்தில் 6,000க்கும் மேற்பட்ட கத்தோலிக்க மக்கள் உள்ளனர். கார்ட்டூமில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல் ஒபீடில் உள்ள "தொன் போஸ்கோ தொழிற்பயிற்சி மையத்தில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். (Fides).
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்