பொதுக்காலம் 11-ஆம் ஞாயிறு : பரிவிரக்கத்தில் வெளிப்படும் அழைப்பு
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. விப 19: 2-6a II. உரோ 5: 6-11 III. மத் 9: 36-10: 8)
மும்பை மாநகரில், சைகை விளக்குகளில் (Signal Lights) நின்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்குப் பின்னால் ஓடிச் சென்று பூ விற்றுப் படித்த பெண் தற்போது கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு முனைவர் பட்டப் படிப்புக்குச் சென்று இருக்கிறார். சரிதா மாலி என்கிற 28 வயது நிரம்பிய பெண்தான் இச்சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். பல சவால்களைக் கடந்து அவர் இன்று இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் ஒரு குடிசைப் பகுதியில் பிறந்தவர் சரிதா மாலி. வறுமையின் காரணமாக அவரது குடும்பம் பிழைப்புத் தேடி மும்பைக்கு இடம்பெயர்ந்தது. அவரின் அப்பா பூ விற்பனை செய்து குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்தார். இப்படியான சூழலில் தனது 6-ஆம் வகுப்பிலிருந்து சைகை விளக்குகளில் நிற்கும் வாகனங்களுக்குப் பின்னால் தானும் ஓடி ஓடி தந்தைக்கு உதவியாகப் பூ விற்று வந்திருக்கிறார் சரிதா மாலி. மும்பை மாநகராட்சிப் பள்ளியில் படிப்பை முடித்த அவர், தனது பகுதியில் உள்ள குழந்தைகளுக்குச் சிறப்பு வகுப்புகள் (tution) எடுத்ததன் வழியாகக் கிடைக்கப்பெற்ற வருவாயைக் கொண்டு கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்திருக்கிறார். கே.ஜே சோமய்யா கல்லூரியில் இளங்கலை பயின்றவர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை இந்தி படித்தார்.
ஏழ்மை, நிறபேதம் உள்ளிட்ட பல நெருக்கடிகளைச் சந்தித்த அவர், இதிலிருந்து மீள்வதற்கு கல்வி ஒன்றே தீர்வு என்பதில் உறுதிபட நின்றிருக்கிறார். அந்த உறுதி அவரை ஆராய்ச்சி மாணவியாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற இப்போது தகுதிப்படுத்தியுள்ளது. சரிதாவுக்கு ஒரு சகோதரி மற்றும் இரு சகோதரர்கள் உள்ளனர். அவர்கள் இன்று, குடிசைப் பகுதிக் குழந்தைகளுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். தான் கடந்து வந்த பாதைக் குறித்து பேசிய சரிதா மாலி, ''எனக்கு எப்போதுமே படிப்பில் ஆர்வம் உண்டு. அதனை துளி அளவும் குறையாமல் பார்த்துக்கொண்டேன். அதனால்தான் என்னால் ஆராய்ச்சி உலகினுள் நுழைய முடிந்தது. இந்தப் பயணம் இன்னும் சில ஆண்டுகள் தொடரும் என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். எனது கல்வியை சமுதாய முன்னேற்றத்திற்காக பயன்படுத்த விரும்புகிறேன். சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட பிரிவினரின் துயரங்களை எடுத்துரைக்க கல்வித்துறையில் பணியாற்ற ஆசைப்படுகிறேன். தெருவோரக் குழந்தைகளுக்கு இலவசக் கல்விக்காகக் குரல் எழுப்புவேன். இன்றும், டெல்லி சைகை விளக்குகளில் விற்பனை பொருட்களை வைத்துக்கொண்டு வாகனங்களின் பின்னால் ஓடும் ஏழைக் குழந்தைகளைப் பார்க்கும்போது, என் குழந்தைப் பருவம் நினைவுக்கு வருகிறது. அது என் மனதில் பலவிதமான கேள்விகளை எழுப்புகிறது. இந்தக் குழந்தைகளால் இனி எப்போதாவது படிக்க முடியுமா? அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்பதை நினைக்கும்போதே மனதுக்குத் துயரமாக இருக்கிறது.”
பொதுக்காலத்தின் பதினோராம் ஞாயிறு இன்று சிறப்பிக்கின்றது. இன்றைய வாசகங்கள் மக்கள்மேல் இறைவன் கொண்டுள்ள பரிவுள்ளதையும், அதை வெளிப்படுத்த நமக்கு விடுக்கும் அழைப்பினையும் எடுத்துக்காட்டுகின்றன. இப்போது நற்செய்தி வாசகத்திற்கு செவிமடுப்போம். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவுகொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள். அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால், தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார். இயேசுவுக்கு இந்தப் பரிவிரக்கம் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதை நற்செய்தியின் 35-வது வசனம் எடுத்துரைக்கின்றது. அது இங்கே கொடுக்கப்படவில்லை. அதாவது, இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப்பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார் (வசனம் 35). ஆக, இயேசு மக்களைச் சந்தித்தபோது அவர்களின் துயரங்கள், வேதனைகள், போராட்டங்கள், தேவைகள் அனைத்தையும் அறிய நேர்ந்திருக்கிறது. அதன் காரணமாகவே, ‘அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள்’ என்று கூறி, இப்படிப்பட்ட மக்களுக்குப் பணியாற்ற ஆள்கள் தேவை என்பதை பகிரங்கமாக எடுத்துக்கூறி பன்னிரு திருத்தூதர்களையும் அவர் பெயர்சொல்லி அழைக்கின்றார்.
மீட்பின் வரலாற்றில் இந்த இரக்கச் செயல் மூவொரு இறைவனிடத்திலும் வெளிப்படுகிறது. எகிப்தில் துயருறும் இஸ்ரயேல் மக்கள் சார்பாகக் குரல்கொடுத்து அவர்களை மீட்பதற்கு மோசேயை அங்கே அனுப்புவதைப் பார்க்கின்றோம். “எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே, எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன். இப்போது, இதோ! இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் என்னை எட்டியுள்ளது. மேலும் எகிப்தியர் அவர்களுக்கு இழைக்கும் கொடுமையையும் கண்டுள்ளேன். எனவே, இப்போதே போ; இஸ்ரயேல் இனத்தவராகிய என் மக்களை எகிப்திலிருந்து நடத்திச் செல்வதற்காக நான் உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன்” (காண்க விப 3:7-10) என்ற இறைத்தந்தையின் வார்த்தைகளில் துயருறும் இஸ்ரயேல் மக்கள்மீது அவர் கொண்டிருந்த பரிவிரக்கம் வெளிப்படுவதைக் காண்கின்றோம். அவ்வாறே இறைவாக்கினர் எசாயாவை அழைக்கும் நிகழ்விலும் அவரது இறைத்தந்தையின் பரிவிரக்கம் வெளிப்படுகிறது. “ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே” என்று அச்சத்தால் அலறும் எசாயாவை சேராபீன்களுள் ஒருவர் நெருப்புப் பொறிகொண்டு தூய்மைப்படுத்துகிறார். பின்னர் “யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?” என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, “இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும் என்றேன்” என்று எசாயா கூறுவதைக் காண்கின்றோம்.
"நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்து என் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால் அனைத்துலகும் என் உடைமையேயெனினும், நீங்களே எல்லா மக்கள் இனங்களிலும் என் தனிச் சொத்தாவீர்கள். மேலும், எனக்கு நீங்கள் குருத்துவ அரசாகவும், தூய மக்களினமாகவும் இருப்பீர்கள். இவ்வார்த்தைகளே நீ இஸ்ரயேல் மக்களிடம் கூற வேண்டியவை” என்று மோசேயிடம் இறைத்தந்தைக் கூறுவதை இன்றைய முதல் வாசகமும் பதிவு செய்கிறது. புதிய ஏற்பாட்டில் தனது பணிவாழ்வு முழுவதும் நமதாண்டவரின் பரிவிரக்கச் செயல்கள் யாவும் அருளடையாளங்கள், உரையாடல்கள், கதைகள், உவமைகள் வழியாக வெளிப்படுத்தப்படுவதை நம்மால் அறியமுடிகிறது. இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பின் துணையாளாராம் தூய ஆவியார் வழியாக இறைவனின் பரிவிரக்கம் வெளிப்படுகின்றது. "பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது" (காண்க 1 கொரி 12:7) என்கின்றார் புனித பவுலடியார். இங்கே பொதுநன்மை என்பது இறைவனின் பரிவிரக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. இன்றைய இரண்டாம் வாசகம், “நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம், வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ! அது மட்டும் அல்ல, இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவுகொண்டு பெருமகிழ்ச்சியடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே” என்கின்றார் புனித பவுலடியார். ஆக, பாவத்தில் வாழ்ந்த மனிதகுலத்துடன் இறைவன் ஒப்புரவாவது என்பது இறைவனின் பரிவிரக்கத்தைக் குறித்துக்காட்டுவதாக நாம் உணர்ந்துகொள்ளலாம். மேலும் இப்படிப்பட்ட பரிவிரக்கம் கொண்டுள்ள இறைமகனின் நற்செய்தியை அறிவிக்கவே தான் அழைப்புப் பெற்றுள்ளதாகவும் கூறுகின்றார் புனித பவுலடியார். ‘பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார்’. இக்கூற்று உண்மையானது; எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது. அந்தப் பாவிகளுள் முதன்மையான பாவி நான். ஆயினும் கடவுள் எனக்கு இரங்கினார் (காண்க 1 திமோ 1:15-16) என்றும், நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! (காண்க 1 கொரி 9:16) என்றும் உரைக்கின்றார் புனித பவுலடியார்.
'From the police to the Apostoline convent' என்ற தலைப்பில் வத்திக்கான் வானொலியில் ஒரு அருள்சகோதரியைப் பற்றிய நேர்காணல் வெளியாகியிருந்தது. இத்தாலியைச் சேர்ந்த அருள்சகோதரியான Tosca Ferrante, ஒரு இளம் பெண்ணாக ஒரு செவிலியர் அல்லது பள்ளி ஆசிரியை ஆக வேண்டும் என்று கனவு கண்டார். ஆனால் அவர் பின்னர் காவல் துறை அதிகாரியானார். இத்தாலியக் காவல்துறையில் ஐந்து ஆண்டுப் பணிகளுக்குப் பிறகு சமூகப் பார்வைகொண்டவராகச் செயல்படத் தொடங்கினார். அந்த ஆண்டுகளில் அவர் மகிழ்ச்சியாக இருந்தபோதிலும், எதிர்காலத்தைப் பற்றிய நினைப்பில் தான் ஒரு குறிப்பிட்ட அமைதியின்மையை உணர்ந்ததாகவும், மேலும் வாழ்க்கையின் அர்த்தத்ததையும் அதை தன்னுடன் கடவுள் எவ்வாறு பகிர்ந்து கொள்ள விரும்புகிறார் என்பதைப் பற்றி தான் தொடர்ந்து வியப்படைந்து கொண்டிருந்ததாகவும் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இருபது ஆண்டுகளுக்கு முன்னர், மாநிலக் காவல்துறையின் வரலாற்றுப் பொன்மொழியில் மற்றொரு “Esserci sempre” அதாவது 'எப்போதும் அங்கே இருங்கள்' என்றதொரு புதிய விருதுவாக்கு சேர்க்கப்பட்டது என்றும், இந்த வெளிப்பாட்டின் உள்ளார்ந்த நெருக்கத்தில், Tosca Ferrante ஒரு காவல்துறை அதிகாரியாகத் தனது வாழ்வை முற்றிலும் மாறுபட்ட முறையில் வாழத் தொடங்கியதாகவும் கூறியுள்ளார். அப்போது, ஏழைகள், குற்றவாளிகள், போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்கள், விபச்சாரத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள், போலியான இடைத்தரகர்களின் திட்டங்களுக்கு அடிக்கடி இரையாகி குடியிருப்பு அனுமதிக்காக (residence permit) காத்திருக்கும் வெளிநாட்டினர் அனைவரும் வறுமை, வெறுமை மற்றும் பல்வேறு தீமைகளால் துயருற்றதைக் கண்டு மிகவும் கவலையடைந்திருக்கின்றார்.
“ஒரு நாள் உரோமையிலுள்ள Tor Pignattara பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட சிறுவன் ஒருவனைக் காவல் காக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார் Ferrante. அந்த அறையில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது அந்தச் சிறுவனிடம் பேச்சுக்கொடுத்தபோது, அவன் அச்சத்தால் விடமால் அழுதுகொண்டே இருந்ததைக் கண்டு அவன்மீது பரிவிரக்கம் கொண்டுள்ளார். உயிர்த்த ஆண்டவர் இயேசுவுடன் நிகழ்ந்த சந்திப்பின் தொடக்கம் இதுவாகவே அமைந்தது என்றும், இதனால் தனது உண்மை அன்பை பிறரது நலன்களுக்காகப் பணயம் வைக்க அவர் தன்னை அழைப்பதையும் உணர்ந்துள்ளார் Ferrante. இதன் விளைவாக சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் ‘இறையழைத்தலுக்கான திருத்தூதர்களின் அரசி’ (Institute of the Queen of Apostles for Vocations) என்ற துறவற சபையில் இணைந்தததாகவும், கடந்த 38 ஆண்டுகளாக ஏழைகளுக்கும் ஒதுக்கப்பட்டோருக்கும் முன்னுரிமைக் கொடுத்து இன்றுவரை சிறப்பாகப் பணியாற்றி வருவதாகவும் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
ஆகவே, நாம் வாழும் இந்தச் சமூகத்தில் ஆயரில்லா ஆடுகளைப்போல் தவிக்கும் ஆயிரமாயிர மக்கள்மீது பரிவிரக்கம் கொள்ளவும், அவர்களுக்காகப் பணியாற்றவும் உயிர்த்த இயேசு நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறார் என்பதை உணர்த்திடுவோம். 'விளைவுகளை ஏற்படுத்தாத எந்த வார்த்தையும் வீண்' என்பார் புரட்சியாளர் சேகுவேரா. அவ்வாறே, நமது பார்வைகள் பரிவிரக்கச் செயல்களாக மாற வேண்டுமெனில், நாமும் இயேசுவைப் போல சமூகத்தை உற்றுநோக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வுற்றுநோக்கல்தான் விளைவுகளை ஏற்படுத்தும். அவ்விளைவுகளே நம் இறையழைத்தலை உறுதிப்படுத்தும். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்