தேடுதல்

கர்தினால் மால்கம் இரஞ்சித் கர்தினால் மால்கம் இரஞ்சித்  (AFP or licensors)

இலங்கையில் நகராட்சி மற்றும் ஊராட்சி தேர்தல்களுக்கு விண்ணப்பம்

நீதி என்பது அநீதியாகவும், ஆட்சி என்பது சர்வாதிகாரமாகவும், சட்டம் என்பது கட்டுப்பாடற்ற நிலையை நோக்கியும் சென்றுகொண்டிருப்பதாக இலங்கை கர்தினால் கவலை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மதிக்கும் விதமாக இலங்கையின் இடைக்கால அரசு நகராட்சி மற்றும் ஊராட்சி தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார் அந்நாட்டு கர்தினால் மால்கம் இரஞ்சித்.

18 வயதிற்கு மேற்பட்டோர் பங்கேற்று நாட்டின் வருங்காலத்தை முடிவுசெய்வதற்கு உதவும் வகையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய கொழும்பு பேராயர் இரஞ்சித் அவர்கள், நீதி என்பது அநீதியாகவும், ஆட்சி என்பது சர்வாதிகாரமாகவும், சட்டம் என்பது கட்டுப்பாடற்ற நிலையை நோக்கியும் சென்றுகொண்டிருப்பதாகக் கவலையை வெளியிட்டார்.

நிதி நிலை சரியில்லை என்றக் காரணத்தைக் காட்டி தேர்தலைத் தள்ளிப்போட்ட அரசு தற்போது, IMF என்னும் அனைத்துலக நிதி நிறுவனத்திடமிருந்து பெரிய அளைவில் கடனுதவியைப் பெற்றும், மக்களின் 340 அவைகளுக்கான தேர்தலை நடத்தாமல் இருப்பது குறித்து கவலையை வெளியிட்டார் கர்தினால்.

விவசாயத்திற்கு, மீன்வளத்துறைக்கு, கல்விக்கு எவ்வளவு ஒதுக்கியுள்ளது அரசு என்ற கேள்வியை முன்வைத்த கர்தினால், வெளிநாட்டுப் பொருட்களை பெரிய அளவில் இறக்குமதிச் செய்வதில் கவனம் செலுத்தும் அரசு, வெளிநாட்டைச் சார்ந்தே இலங்கை வாழ வேண்டிய ஒரு நிலைக்கு நாட்டைத் தள்ளுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இவ்வாண்டு மார்ச் 9ஆம் தேதி இடம்பெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நகராட்சி மற்றும் ஊராட்சித் தேர்தல், ஏப்ரல் 25க்குத் தள்ளிப்போடப்பட்ட நிலையில், மீண்டுமொருமுறை நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி, காலவரையறையின்றி தேர்தலைத் தள்ளிப்போட்டுள்ளது தேசியத் தேர்தல் துறை.

நிதிப்பற்றாக் குறையால் தவித்துவந்த இலங்கை நாட்டிற்கு உலக நிதி நிறுவனமான IMF மார்ச் மாதத்தில் 290 கோடி டாலர் கடனுதவியை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 June 2023, 14:15