மணிப்பூர் மக்களுக்காக இந்தியத் தலத்திருஅவை இறைவேண்டல்!
மெரினார் ராஜ் - வத்திக்கான்
மணிப்பூரில் நடந்து வரும் பழங்குடியின மக்களுக்கிடையிலான வன்முறை அதிகரித்து வரும் நிலையில் அம்மக்களிடையே அமைதி நிலவ இந்தியாவின் பல்வேறு தலத்திருஅவைகளில் சிறப்பு செப வழிபாடுகளும், அமைதிப் பேரணிகளும் நடைபெற்று வருகின்றன.
கடந்த மே மாதம் தொடங்கிய மணிப்பூர் மாநில குக்கி மற்றும் மெய்டி இன மக்களுக்கிடையேயான மோதலில் ஏறக்குறைய 120க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழப்பு, 60,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்வு, வன்முறை ஆகியவை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்தியாவில் டெல்லி தொடங்கி தமிழ்நாடு வரை தலத்திருஅவையினரால் பல்வேறு செபவழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
மணிப்பூர் மக்களிடையே அமைதி நிலவ கடந்த வாரம் கல்கத்தாவில் பிறரன்பின் பணியாளர்கள் சபை தலைமையகத்தில் உள்ள புனித அன்னை தெரசா கல்லறையின் முன் CCBI எனப்படும் இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆணையத்தின் கீழ், மணிப்பூர் மக்களுக்காக செப வழிபாடு ஒன்று நடத்தப்பட்டது.
மணிப்பூரின் மீது கடவுளின் ஆசீரையும் அமைதியையும் வேண்டி நடத்தப்பட்ட இச்செபவழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். குறிப்பிட்ட இரு இன மக்களும் விவரிக்க முடியாத அளவு பாதிக்கப்பட்டுள்ளனர் தங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்கள், சொத்துக்கள் முக்கிய ஆவணங்கள் என எல்லாவற்றையும் இழந்து ஈடுசெய்ய முடியாத அளவிற்கு இழப்பினைப் பெற்றுள்ளனர் என்பதால் அவர்களுக்காகச் சிறப்புபாக செபிக்கப்பட்டது.
சில தலைவர்கள் அனைத்து அதிகாரங்களையும் தங்களுக்கு என்று பறித்துக்கொள்வது உலகின் பல பகுதிகளில் தற்போதைய நிகழ்வாக நடந்து கொண்டிருக்கின்றது என்றும், இதுவே மணிப்பூர் மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கின்றது என்றும் சுட்டிக்காட்டினார். CCBI, தேசிய நிர்வாக செயலாளரான பெங்களூரை சார்ந்த அருள்பணியாளர் பாப்டிஸ்ட் பைஸ்
விருந்தோம்பல் துறை நிபுணரும், கொல்கத்தாவில் உள்ள உணவு விடுதி மேலாண்மை நிறுவனங்களின் உறுப்பினருமான அலெக்சிஸ் பாதல் கோம்ஸ், கடவுளிடம் செபம் மற்றும் விண்ணப்பங்கள் செய்வது மட்டுமல்லாமல் உடன் சகோதரர் சகோதரிகளின் துன்பத்தை நேரில் அனுபவிக்க அவர்களின் துன்பத்தைப் போக்க தங்களால் இயன்றதைச் செய்ய துணிவு வேண்டும் என்றும் மணிப்பூர் மக்களுக்கான கூட்டத்தில் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்