வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினர் அமைப்பு, 2023-24-ஆம் நிதியாண்டிற்கான தெற்காசிய நாட்டின் நிதி ஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு எதிராகப் பாகுபாடு காட்டப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
ஜூன் மாதம் ஒன்றாம் தேதி வெளியிடப்பட்ட ஏறத்தாழ 800 கோடி அமெரிக்க டாலர் அளவிலான தேசிய நிதி ஒதுக்கீட்டில் 740 கோடி வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், இதில் 6.4 விழுக்காட்டையே மதச் சிறுபான்மையினர் வளர்ச்சித் திட்டங்களுக்கு வங்கதேச அரசு ஒதுக்கியுள்ளதாக அந்நாட்டின் இந்து புத்த கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை (BHBCUC) தெரிவித்துள்ளது.
மேலும் இத்தொகையில் மதச் சிறுபான்மையினர் ஏறக்குறைய 47 கோடியை மட்டும் பெறுவார்கள் என்றும், இது வளர்ச்சிக்கான மொத்த நிதி ஒதுக்கீட்டில், 6.4 விழுக்காட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும், ஜூன் 20, செவ்வாயன்று, தலைநகர் டாக்காவில் நடந்த தேசிய செய்தியாளர் சந்திப்பின்போது கூறியுள்ளது அவ்வமைப்பு.
பெரும்பான்மை முஸ்லீம் சமூகம் அதிகமாகப் பெறும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் அதேவேளையில், இந்தப் பாகுபாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று UCA செய்திகளிடம் கூறியுள்ள அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் ராணா தாஸ்குப்தா, எங்கள் நாட்டு அரசியல்வாதிகள் பெரும்பான்மை சமூகத்திற்காக 98 விழுக்காடு செலவிடுகிறார்கள் என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என்றும் உரைத்துள்ளார்.
வங்கதேசத்திலுள்ள 160 கோடிக்கும் அதிகமான மக்களில் 9.1 விழுக்காட்டினர் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்