தேடுதல்

ஸ்ட்ராஸ்பேர்க்கில் நடந்த ஐரோப்பிய நாடாளுமன்றக் கூட்டத்தின் படம் ஸ்ட்ராஸ்பேர்க்கில் நடந்த ஐரோப்பிய நாடாளுமன்றக் கூட்டத்தின் படம்  (ANSA)

தாலின் நகரில் ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகளின் பொதுப்பேரவை

கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பின் கருப்பொருள் நம்மை கிறிஸ்தவ ஓன்றிப்புசார் உணர்வில் இணைக்கும் : போதகர் Christian Krieger

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

2023-ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பின் பொதுப்பேரவை "கடவுளின் ஆசீரின் கீழ் - எதிர்காலத்தை வடிவமைப்பது" என்ற கருப்பொருளுடன் எஸ்தோனியாவின் தாலின் நகரில் நடந்து வருகிறது.  

ஜூன் 14 புதன்கிழமை முதல், ஜூன் 20, செவ்வாய்க்கிழமை வரை நடைபெறும் இப்பொதுப்பேரவையில் ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பிலிருந்து (CEC)  113 பெந்தக்கோஸ்து சபையினர், ஆர்த்தடாக்ஸ், ஆங்கிலிகன் மற்றும் ஐரோப்பாவிலுள்ள பழைய கத்தோலிக்கத் திருச்சபைகள் பங்குபெறுகின்றன. இதில் கத்தோலிக்கத் திருஅவை உறுப்பினராக இல்லை.

கிறிஸ்தவ ஓன்றிப்புசார் உணர்வில் இணைக்கிறது

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பின் தலைவர் போதகர் Christian Krieger அவர்கள், ஐரோப்பாவிலுள்ள கிறிஸ்தவ சபைகளின் வாழ்க்கை மற்றும் இறைவேண்டல், ஒன்றிப்பு மற்றும் பிரதிபலிப்பு ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க தருணமாக இப்பொதுப்பேரவை அமையும் என்று கூறினார்.

மேலும், ஐரோப்பாவின் எதிர்காலத்தை நோக்கி அதன் கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு பங்களிப்புகளை வழங்கும் விதத்தில் இப்பொதுப்பேரவைக்கான கருப்பொருள் நம்மை கிறிஸ்தவ ஓன்றிப்புசார் உணர்வில் இணைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் போதகர் Krieger.

பொதுப்பேரவையில் உரை நிகழ்த்துவார்கள்

Belarusian அரசியல் ஆர்வலர் Sviatlana Tsikhanouskaya அவர்கள் "ஐரோப்பிய சமுதாயத்தில் அதன் கிறிஸ்தவ சபைகள் எவ்விதத்தில் பங்களிப்பு செய்ய முடியும்" என்ற தலைப்பிலும், ஜெர்மன் சமூகவியலாளர் முனைவர் Hartmun Rosa அவர்கள், "ஐரோப்பாவின் சமூகவியல் சூழல் என்ன" என்ற தலைப்பிலும், அவரைத் தொடர்ந்து Canterbury முன்னாள் பேராயர் முனைவர் Rowan Williams அவர்கள்,  "ஐரோப்பிய சமுதாயத்தில் நமது பங்குடன் நாம் இறையியல் ரீதியாக எவ்வாறு செயல்படுகிறோம்" என்ற தலைப்பிலும், இறுதியாக, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு அவர்கள், "எதிர்கால ஐரோப்பாவில் நமது கிறிஸ்தவ ஒன்றிப்புசார் பணிகள் எவை?" என்ற தலைப்பிலும் உரைநிகழ்த்துகின்றனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை

கிறிஸ்துவின் மறையுடலாகிய கிறிஸ்தவ சபைகளின் செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கும் விதத்தில் ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பின் பொதுப்பேரவை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை  நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இவ்வமைப்பின் பணிகளை ஆற்றிட புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களையும் இப்பொதுப்பேரவை தேர்ந்தெடுக்கிறது.

CEC ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம்

பனிப்போரின் சூழலில் ஐரோப்பாவின் பல்வேறு கிறிஸ்தவ சபைகளுக்கிடையில் நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்காக 1959-ஆம் ஆண்டு ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பு (CEC) நிறுவப்பட்டது. இன்று, இவ்வமைப்பு கிறிஸ்தவ ஒன்றிப்பையும், அமைதி மற்றும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தி வருகின்றது, குறிப்பாக Brussels மற்றும் Strasbourg-விலுள்ள ஐரோப்பிய நிறுவனங்களுடன் உரையாடல் பணிகளை ஆற்றிவருகின்றது.

ஒத்துழைக்கும் கத்தோலிக்கத் திருஅவை

கத்தோலிக்கத் திருஅவை ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பில் உறுப்பினராக இல்லாவிட்டாலும், அவ்வமைப்புக்கு முழுமையான ஒத்துழைப்பை நல்கி வருகிறது, எடுத்துக்காட்டாக, பல ஆண்டுகளாக இவ்வமைப்புடன் இணைந்து பல்வேறு ஐரோப்பிய கிறிஸ்தவ ஒன்றிப்புசார் கூட்டங்களைக் கூட்டாக நடத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 June 2023, 15:02