நேர்காணல் – மூவொரு இறைவன் பெருவிழா
மெரினா ராஜ் – வத்திக்கான்
கத்தோலிக்கத் தாய்த்திருஅவையின் முக்கியமான விசுவாசப் படிப்பினைகளில், தமத்திரித்துவம் என்னும் மூவொரு இறைவனின் பெருவிழா மிக முக்கியமான படிப்பினையாகும். புலன்களுக்கும், மனித அறிவுக்கும் உட்புக முடியாத இறைவன் தன்னுடைய இயல்பைப் பற்றி விவிலியத்தில் வெளிப்படுத்துகிறார். இறைவனின் தன்மை, சாரம் பற்றிய வெளிப்படுத்தல்களை இறைவாக்கினர், நீதித்தலைவர்கள், அரசர்கள், விவிலிய ஆசிரியர்கள் என்று பலர் வெளிப்படுத்தினாலும், இயேசுவே இறைவனின் உண்மைகளை நிறைவாக வெளிப்படுத்தினார் என்பது நமது நம்பிக்கை. 'கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை. தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள் தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்' (யோவா 1:18) என்ற யோவான் நற்செய்தியாளரின் அறிக்கை வழியாக இதனை நாம் நினைவுகூர்கின்றோம். இயேசு கடவுளாக அந்த சாரத்தையும், தன்மையையும் கொண்டுள்ளவர் என்பதனாலும் இந்த வெளிப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. காணக்கூடிய இயேசுவிடமிருந்து நாம் காணமுடியாத இறைவனை நோக்கிச் செல்கின்றோம். மூவொரு இறைவனின் பெருவிழாவைக் கொண்டாட இருக்கும் நமக்கு அப்பெருவிழா பற்றிய கருத்துக்களை இன்றைய நேர்காணலில் நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி சி. ஜார்ஜ் பெர்னான்டஸ். சிவகங்கை மறைமாவட்ட அருள்பணியாளரான சி. ஜார்ஜ் அவர்கள், சிறந்த சிந்தனையாளர் சீர்மிகு எழுத்தாளர். இறைவார்த்தை பற்றிய தனது சிந்தனைகளை செபங்களாகவும் மறையுரைகளாகவும் வலையொளிப்பதிவில் பதிவிட்டு இறைமக்களை நற்பாதையில் வழிநடத்தி வருபவர். தற்போது சிவகங்கையில் உள்ள ஆனந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணைமுதல்வராக சிறப்புடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஆக்கமுள்ள சொற்களாலும் செயல்களாலும் இளையோரை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் அருள்பணி சி. ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களை தமத்திரித்துவம் என்னும் மூவொரு இறைவன் பெருவிழா பற்றியக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்