அநீதிக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரின் பாலியல் தொல்லைக்கு எதிராக நியாயம் கேட்டுப் போராடிவரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகக் கத்தோலிக்க பெண் துறவிகள் போராட்டம் ஒன்றை நடத்தினர்.
ஜூன் 05, திங்களன்று கர்நாடகாவின் பெங்களூருவில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் ஏறக்குறைய 300 பெண் துறவிகள் கலந்து கொண்டனர்.
இந்த 300 பெண் துறவறத்தாருடன் ஏறக்குறைய 200 அருள்பணியாளர்கள், அருள்சகோதரர்கள் மற்றும் பொதுநிலையினரும் தங்கள் ஒருமைப்பாட்டை வெளியிட்டுக் கலந்துகொண்டனர்.
அரசியலில் சக்தி வாய்ந்த ஆளும் கட்சியைச் சேர்ந்த மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக நியாயம் கேட்டுப் போராடிவரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதராவாக இந்திய பெண் கத்தோலிக்க பெண் துறவறத்தார் தங்கள் ஒருமைப்பாட்டை வெளியிடுவதாக இந்திய கத்தோலிக்க துறவறத்தார் அமைப்பின் தலைவர், அருள்சகோதரி Nirmalini Nazareth தெரிவித்தார்.
அநீதிக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்பவேண்டிய நேரம் வந்துள்ளது என்று அழைப்பு விடுக்கிறது அவரின் அறிக்கை.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவை வெளியிட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக உரைத்த அருள்சகோதரி நிர்மாலினி அவர்கள், அவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த மௌனத்தைக் கலைப்பதுடன், இதில் ஈடுபட்ட கட்சி பிரதிநிதி மீது நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என அரசுக்கு அழைப்பு விடுத்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற அங்கத்தினரும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான Brij Bhushan Sharan Singh மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து கடந்த 5 மாதங்களாகத் தெருவில் இறங்கி போராடி வருகின்றபோதிலும், அவர்களுக்குச் செவிமடுக்க அரசு மறுத்தே வருகின்றது.
பல ஒலிம்பிக் மற்றும் அனைத்துலகப் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களைப் பெற்ற மல்யுத்த வீராங்கனைகள் தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுச் செய்துள்ளபோதிலும், மே மாதம் 28ஆம் தேதி இந்த வீராங்கனைகள் மீது காவல்துறை தாக்குதலை நடத்தி இவர்களைக் கலைக்க முயன்றுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்