மணிப்பூருக்கு இராணுவத்தை அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த ஒருமாதமாக மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்து வரும் மதக் கலவரத்தில் 115 பேர் கொல்லப்பட்டுள்ள வேளை, அம்மாநிலத்தில் பூர்வீக இனக் கிறிஸ்தவர்களைப் பாதுகாக்க இராணுவ வீரர்களை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை அவசரமாக விசாரிக்க இந்திய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது என்று தெரிவித்துள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.
மூத்த வழக்கறிஞர் Colin Gonsalves, ஜூன் 20, இத்திங்களன்று, மணிப்பூர் பூர்வீக இனமக்கள் அமைப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது, மத்திய மற்றும் மாநில அரசுகளின் உத்தரவாதத்திற்குப் பிறகும், கிறிஸ்தவர்கள் உட்பட 70-க்கும் மேற்பட்ட குக்கி இன மக்கள் கொல்லப்பட்டதாக வாதிட்டார்.
இப்படிப்பட்டச் சூழலில் அங்கு இராணுவ வீரர்களைப் பணியமர்த்துவதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், அது மேலும் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் என்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட விடுமுறைக்கால நீதிமன்றத்தில் தெரிவித்தார் Gonsalves.
இருப்பினும், வழக்கறிஞர் Gonsalves அவர்களின் இந்தக் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இது முற்றிலும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்னை என்றும், இதனால் இராணுவத்தின் தலையீட்டிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை என்றும் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், உச்ச நீதிமன்றம் விடுமுறைக்குப் பிறகு அதன் இயல்பான செயல்பாட்டைத் தொடங்கும் போது, இவ்வழக்கு ஜூலை 3-ஆம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் கிறிஸ்தவர்ளாக இருக்கும் குக்கி இனமக்கள், பெரும்பான்மையான இந்துக்களான Meities இனமக்களால் குறிவைக்கப்பட்டுத் தாக்கப்படுகிறார்கள் என்பதும், இந்துத்துவ ஆதரவு பெற்ற பாரதிய ஜனதா கட்சி மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்