திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் – பகுதி 1
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
1978ம் ஆண்டு பனிப்போரின் காலமது. இரு வல்லரசுகளும் தங்கள் வல்லமையை நிரூபிக்க பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளிலும், விண்வெளி ஆய்வுகளிலும் தங்களை ஈடுபடுத்தி நிலை நாட்டி வந்த காலம். மறுபுறம் அணிசேரா நாடுகளின் ஒரு கூட்டம். கம்யூனிச கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஜனநாயகம் பிறக்கும் என்ற நம்பிக்கையை இழந்த காலம் அது. கம்யூனிசம் வீழ்ச்சியுறும், சோவியத் யூனியன் துண்டுகளாக சிதறும், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சுதந்திர குடியரசுகளாக மாறும் என எவரும் கனவு காணக்கூட வாய்ப்பில்லாத காலம் அது. இத்தகைய ஒரு காலக் கட்டத்தில் திருத்தந்தை முதலாம் ஜான்பால், தான் தேர்ந்தெடுக்கப்பட்ட 33 நாட்களிலேயே உயிரிழக்க, அடுத்த திருத்தந்தையை தேர்ந்தெடுக்கக் கூடிய கர்தினால்கள், போலந்து கர்தினால் கரோல் யோசேப் வொய்த்தில்யாவைத் தேர்வு செய்தனர். இவரால் திருஅவையில் மட்டுமல்ல, உலகின் அரசியல் அரங்கிலும் பல்வேறு மாற்றங்கள் இடம் பெறும், மக்களின் கண்ணோட்டங்கள் மாறும் என்று அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் இறைவனோ, திருத்தந்தையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, திருஅவையில் மறுமலர்ச்சிக்கும் ஆன்மீகப் புதுப்பித்தலுக்கும் வித்திட்டார்.
1920ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி போலந்தின் Krakowக்கு ஏறக்குறைய 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வாதோவிச் எனும் சிறு நகரில் பிறந்தார். இவருக்கு ஒன்பது வயதாக இருக்கும் போது, 1929இல் எமிலியா என்ற தமது தாயை இழந்தார். தன் 12ஆம் வயதில் தனது ஒரே சகோதரரான மருத்துவர் எட்மண்டை 1932இல் இழந்தார். தான் குருவாக திருநிலைப்படுத்தப்படும் முன்னரே, தன் 21ஆம் வயதில், அதாவது 1941ல் தந்தையை இழந்து, குடும்பத்தில் நெருங்கிய உறவுகளே இல்லாத அநாதையானார். திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் வரலாற்றில் அதிகம் குறிப்பிடப்படாத ஒரு நிகழ்வையும் நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இவருக்கு Olga என்ற பெயரில் ஒரு முத்த சகோதரியும் இருந்தார். ஆனால் அவர், இவர் பிறப்பதற்கு முன்னரே மிக இளவயதில் காலமாகிவிட்டார். சிறுவன் கரோல் வொய்த்தில்யா, அதாவது பின்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், படிப்பில் மட்டுமல்ல, நாடகத்துறையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஆனால் நாத்ஸி ஆக்ரமிப்பின் காரணமாக இவரின் படிப்பு அவ்வப்போது தடைபட்டது. 1938ஆம் ஆண்டு இவர் சேர்ந்த Krakowன் Jegellnica பல்கலைக்கழகம், அடுத்த ஆண்டே நாத்சி துருப்புகளால் மூடப்பட்டதால், கல்குவாரியில் கல்லுடைப்பவராக பணிபுரிந்தார். பின்னர் சொல்வாய் வேதியல் தொழிற்சாலையிலும் கடுமையாக உழைத்தார். இதன்மூலம் வருமானம் மட்டும் கிடைக்கவில்லை, மாறாக ஜெர்மனிக்கு நாடுகடத்தப்படுவதும் தடுக்கப்பட்டது. விளையாட்டிலும் படிப்பிலும் நாடகத்திலும் அதிக ஆர்வம் கொண்டிருந்த இவர், ஆன்மீகத்திலும் திளைத்திருந்தார்.
1941ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவரின் தந்தை உயிரிழக்க, 1942ஆம் ஆண்டு, அதாவது 22ம் வயதில் Kraków இரகசிய குருமடத்தில் இணைந்தார் கரோல் வொய்த்தில்யா. 1946ல் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். குருவான சிறிது காலத்திலேயே, இவரை மேற்படிப்புக்காக உரோம்நகருக்கு அனுப்பினார் கர்தினால் Adam Stefan Sapieha. உரோம் நகரில் தான் படித்த காலத்தில், விடுமுறையின்போது பிரான்ஸ், பெல்ஜியம், மற்றும் ஹாலந்து நாடுகளுக்குச் சென்று அங்குள்ள போலந்து குடியேற்றதாரர்களிடையே பணியாற்றினார் இளங்குரு கரோல் வொய்த்தில்யா. 1948ஆம் ஆண்டு இறையியலில் தன் முனைவர் பட்டத்தை முடித்து உடனே நாடு திரும்பினார் அவர். ஏனெனில், கம்யூனிச போலந்தில் குருக்களின் ஆன்மீகப்பணி அதிகம் அதிகமாக தேவைப்பட்டது. கிராக்கோவின் புனித Florian பங்குதளத்தில் 1949ல் பணியாற்ற நியமிக்கப்பட்ட இவர், அதே காலத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஆன்மீகக் குருவாகவும் செயலாற்றினார். இவரின் கல்விக்கான ஆர்வம் தொடர, 1951ல் மீண்டும் மெய்யியல் மற்றும் இறையியலில் தன் படிப்பைத் தொடர்ந்தார். Lublin கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்திலும் Jagiellonian பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றினார்.
38 வயதான இளங்குரு கரோல் வொய்த்தில்யாவை 1958ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதி Krakówவின் துணை ஆயராக அறிவித்தார் பாப்பிறை 12ஆம் பயஸ். அதே உயர்மறைமாவட்டத்தின் பேராயராக 1964ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி நியமித்தார் பாப்பிறை 6ஆம் பால். அடுத்த மூன்றாண்டுகளிலேயே, அதாவது 1967ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி இவரை கர்தினாலாக அறிவித்தார் அதே திருத்தந்தை 6ம் பால். ஆயர் கரோல் வொய்த்தில்யா, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் கலந்து கொண்டு சிறப்புப் பங்களித்தார். “இன்றைய உலகில் திருஅவை” என்ற மேய்ப்புப்பணி கொள்கைத் திரட்டு தயாரிக்கப்பட்டதில் இவரின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடும்படியானது. திருத்தந்தை 6ஆம் பால் 1978ல் மரணமடைய, அவரைத் தொடர்ந்து வந்திருந்த முதலாம் ஜான் பாலும் அதே ஆண்டு இறைபதம் சேர, 1978ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் கர்தினால் கரோல் வொய்த்தில்யா. இவர் திருஅவையின் 264வது திருத்தந்தை. தனக்கு முன்பிருந்த திருத்தந்தை முதலாம் ஜான் பாலின் பெயரின் தொடர்ச்சியாக, இரண்டாம் ஜான்பால் என எடுத்துக் கொண்டார்.
1522ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருத்தந்தையாக பொறுப்பேற்று 1523ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயிரிழந்த திருத்தந்தை 6ஆம் ஏட்ரியனுக்குப்பின், இத்தாலிக்கு வெளியேயிருந்து திருத்தந்தையானவர் இரண்டாம் ஜான்பால் தான். திருத்தந்தை 6ஆம் ஏட்ரியன் ஹாலந்து நாட்டைச் சேர்ந்தவர். 456 ஆண்டுகளுக்குப்பின் ஒரு வெளிநாட்டுத் திருத்தந்தை தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதாவது, ஸ்லாவிய நாடுகளிலிருந்து வரும் முதல் திருத்தந்தை இவர். கம்யூனிச நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட இப்புதிய திருத்தந்தை, திருஅவை வரலாற்றை எவ்விதம் மாற்றியமைக்கப் போகிறார் என கத்தோலிக்க உலகம் மட்டுமல்ல, உலகமனைத்தும் காத்திருந்தது. அவரின் பாப்பிறை ஆட்சி காலம் குறித்து வரும் வாரம் காண்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்