புலம்பெயர்ந்து பெங்களூருக்கு வந்துள்ள மணிப்பூர் கிறிஸ்தவர்கள் புலம்பெயர்ந்து பெங்களூருக்கு வந்துள்ள மணிப்பூர் கிறிஸ்தவர்கள்  

மணிப்பூரில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்குப் பேராயர் ஆதரவு

மணிப்பூரிலிருந்து இடம்பெயர்ந்த மக்களைப் பராமரிக்க முழு மறைமாவட்டமும் தயார்நிலையில் உள்ளது : பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மணிப்பூரில் அதிகரித்து வரும் இனப் பதட்டங்கள் மற்றும் வன்முறையால் இடம்பெயர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிபுரியும் இளைஞர்கள் குழுவிற்குப் பெங்களூரு உயர்மறைமாவட்டம் அடைக்கலம் மற்றும் ஆதரவை வழங்குவதாகக் கூறியுள்ளார் அம்மறைமாவட்டத்தின் பேராயர் பீட்டர் மச்சாடோ.

பெங்களூரு உயர்மறைமாவட்டத்தில் உள்ள மறைமாவட்ட மற்றும் துறவியரின் கல்வி நிறுவனங்களில் அவர்கள் தங்களுடைய கல்வியைத் தொடரலாம் என்றும், தங்கும் விடுதி வசதிகளுடன் கூடிய கல்வி நிறுவனங்களையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் உறுதியளித்துள்ள பேராயர் மச்சாடோ.  அவர்கள், பெங்களூரு கல்விக்குச் சிறந்த இடம் என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

மேலும் மணிப்பூரின் பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்களுடன் தனது ஒன்றிப்பை வெளிப்படுத்தியுள்ள பேராயர் மச்சாடோ அவர்கள், இடம்பெயர்ந்த மக்களைப் பராமரிக்க முழு மறைமாவட்டமும் தயார்நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் எழுந்துள்ள இன மற்றும் வகுப்புவாத பதட்டங்களுக்கு மத்தியில் அங்குள்ள  கிறிஸ்தவர்கள் மற்றும் பிற மக்கள்  எதிர்கொள்ளும் சவால்களை விளக்கிய அம்மாநிலத்தின் இயேசு சபை அருள்பணியாளர் James Beipei அவர்கள், மணிப்பூர் மாவட்டங்களில் நிலவும் தற்போதைய சமூகச் சூழலை எடுத்துரைத்து மாணவர்களை பெங்களூருக்கு அழைத்து வருவதற்கான காரணங்களையும் பகிர்ந்து கொண்டார்.

மணிப்பூரில் வழிபாட்டுத் தலங்கள், நிறுவனங்கள் மற்றும் வீடுகள் தாக்குதல்களுக்கு ஆளாகக்கூடிய சூழல் இருப்பதால், மக்களை பெங்களூருக்கு மாற்றுவது அவசியம் என்று தான் முடிவு செய்ததாகவும், அவ்வாறு இடம்பெயர்ந்து இங்கு வந்த அனைவருக்கும் பேராதரவு வழங்கிய பேராயர் மச்சாடோ அவர்களுக்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் James.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 June 2023, 14:55